பக்கம்:அறிவுக்கு உணவு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.ஆ. பெ. விசுவநாதம்

15


பிறர் உன்னிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று நீ ஆசைப்படுகிறாயோ, அப்படியே நீ பிறரிடம் நடந்துகொள்!

நீ போற்றப்பட வேண்டுமானால், போற்று! தூற்றப்பட வேண்டுமானால், தூற்று ! பிறர் உன்னை வாழ்த்த வேண்டுமானால் நீ பிறரை வாழ்த்து! உன்னைப் பிறர் வைய வேண்டுமானால், நீ பிறரை வைதுகொண்டிரு!

தமிழ் மகனே!

உனது மொழியைத் ‘தமிழ்’ என்று கூறு!
உனது கலையைத் ‘தமிழ்க்கலை’ என்று சொல்!
உனது பண்பைத் ‘தமிழ்ப்பண்பு’ என்று கருது!
நீ ‘தமிழன்’ என நினை! மறவாதே!
மறந்தால், உனக்கு வாழ்வில்லை.


‘நா’வைக் காப்பாற்று

கோபம் வந்தபோது மட்டுமின்றி, மகிழ்ச்சி வந்தபோதும் மக்கள் அறிவிழந்து பல சொற்களைச் சொல்லி விடுகின்றார்கள். கோபம் வந்தபோது கொட்டுகிற சொற்களைவிட மகிழ்ச்சி வந்தபோது கொட்டுகிற சொற்களினாலேதான் அதிகத் தீமைகள் விளைகின்றன.

‘நாவைக் காப்பாற்றாதவன் வாழ்வை இழந்துவிடுவான்’ என்னும் உண்மையைச் சினம் வந்தபோதும் மகிழ்ச்சி வந்தபோதும் மட்டுமல்லாது, சும்மா இருக்கும்போதும் மறந்துவிடாதே!


அரசியல் இயக்கம்

அரசியல் இயக்கத்திற்கு யோக்கியமும், நாணயமும் உள்ள மக்கள் தேவை.

ஆனால், யோக்கியமும் நாணயமும் உள்ள மக்களுக்கு அரசியல் இயக்கம் தேவை இல்லை.