92 O லா. ச. ராமாமிருதம்
குப்பென்று மேலே அலை மோதிய ஆண்வாடை.
எங்கள் கண்கள் சந்தித்தன. சட்டென அபிதா முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அவள் கன்னங்களின் பிழம்பில் என் அந்தக்கரணத்தில் நான் எரிந்து போனேன்.
பிறகு எங்களால் ஒருவரையொருவர் சரியாக முகம் கொடுத்துப் பார்க்க முடியவில்லை. இடையே, காற்றில் எழுதிய ஸன்னக் கோட்டில் காளையின் உருவம் எழுந்தது. அதன் திமில்மேல் எங்கள் கண்கள்தாம் ஒன்றையொன்று கவ்விக் கொண்டன. உடனே பயம் கொண்டு ஒன்றுக்கொன்று முதலை வாயினின்று விடுபெற முயன்றன.
அவள் லஜ்ஜையில் அவள் தகதகக்கிறாள்.
சாவித்திரி என் வேதனை அறிவாளா? இன்று என்னவோ அவள் குருக்கள் வீட்டுப் பெண்டிருடன் அலாதியாக ஒட்டிக் கொள்கிறாள். தன் பெட்டியைத் திறந்து சாமான்களையெடுத்து வெளியே போடுவதும் அபிதாவின் காதில் கம்மல் ஒத்திப் பார்ப்பதும்- மாறி மாறிப் பண்டங்களைப்பற்றி அவர்கள் பேசுவதும்- அது என்ன அவ்வளவு பேச்சு இருக்குமோ! பேசினதையே பேசிப் பேசி அலுக்காத பேச்சு.
நான், திண்ணையில் உட்கார்ந்து, மடியில் ஏதோ புத்தகத்தில் நினைவு ஊன்ற முயல்கிறேன். ஆனால் ஏடுகள்தாம் புரள்கின்றன.
பிற்பகலாயினும் வெய்யிலின் வெப்பம் இன்னும் தணிந்தபாடில்லை. சுவர் சுடுகிறது. உயிரோடு சிதையில் வைத்தாற்போல் உடம்பு எரிகிறது.
இங்கிருந்து பார்க்கையில், கொல்லைப்புறத்தில், அதையும் தாண்டி மரங்களில், கிளைகளில் இலைகளின் சந்தில் கானல் நடுங்குகிறது.