பக்கம்:அபிதா.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிதா O 91


மந்தையோடு நகரும் தம் வழியில், இரண்டு பசுக்கள் எங்கள் பக்கத்தில் வருகின்றன. முக ஒற்றுமை, கண்களைச் சுற்றிய வெள்ளைக் கரை, கொம்புகளின் வளைவில் அதே கோணல் நெற்றியில் ஒரே மாதிரியான வெள்ளைத்திட்டு இவை தாயும் கன்றுமாகவே இருக்கலாம்.

தாயும், தானும் தாயாகிவிட்ட தாயின் கன்று.

கன்றின் தாயாகிவிட்ட தாயின் கன்று. இங்கு மந்தையில் தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளுமோ? இல்லை நானும் ஒரு மாடு, நீயும் ஒரு மாடு, எனும் போட்டி அடையாளம் மட்டுந்தான் நிற்குமோ? உடனே கூடவே ஒன்றுக்கொன்று ஆத்திரம், ஒரே இனமாயினும் உயிருக்கு உயிர் உள்ளுரப் புழுங்கும் உள்பகை- இதுதான் அறியுமோ?

“மாமா மாமா” அபிதா அலறினாள்.

ஒரு கணம் தப்பியிருந்தால் என்னை அது கீழே தள்ளி நான் மந்தையின் குளம்புகளடியில் மிதிபட்டுத் துவையலாகியிருப்பேன்.

அது என்னை உராய்ந்து சென்ற வேகத்தில், என் நெற்றிப் பொட்டில், புருவ மத்தியில் பின் மண்டையோட்டுள் மின்னல்கள் பறந்ததுதான் அப்போது அறிவேன். மின்னல்களின் பொளிசல்கள்- பொளிசல்களின் ஒளித்துடிப்புகள்-

கோபம் சிந்தும் செவ்விழிகள்.

கீழ்வாய்ப் பல்வரிசையில் இளித்த குரூரம்.

விறைத்த வால் நுனியில் மயிர்க் குஞ்சம் கொடிகட்டிப் பறந்தது.

முரசு கொட்டத் தூக்கிவிட்ட முன்னங்கால்கள். நாபியினின்று நீண்டு எட்டி எட்டி நாக்கு ஜெவெ ஜெவெனத் தவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/97&oldid=1130531" இலிருந்து மீள்விக்கப்பட்டது