உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிதா.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 O லா. ச. ராமாமிருதம்

இஷ்டப்பட்டால், இங்கே ராத்திரி என்னைக்காவது தங்கினால் கதை கதையா சொல்வார்- முக்காலி போட்டுண்டு, தலையை வயத்தில் முட்டுக் கொடுத்துண்டு, வாளி வழியக் கறக்கற மாடெல்லாம் இருக்காமே! கறக்கக் கறக்கத் தோள்பட்டை விட்டுப்போனாலும் போகும், மாட்டுக்கு மடி குன்றாதாமே ‘அபிதா, ஒரு மாட்டுப்பாலே உங்கள் ஊருக்கு சப்ளை பண்ணி மிச்சத்தைப் பயிருக்குப் பாய்ச்சலாம்.' நிஜமாவா மாமா?”

உயிர் தன் முழு ஆச்சர்யத்தில் விரிந்த கண்கள்.

கொடுக்கு அரி போன்று நீண்டு நுனி வளைந்து, என் நெஞ்சை அறுக்கும் ரப்பை மயிர்கள்.

அபிதா, உன் சித்தியின் தம்பி சொன்னது மெய்தான். ஆனால் அவன் ஏன் சொன்னான்? அவனை நான் முந்திக் கொள்ள முடியவில்லையே எனும் ஆத்திரத்தையும் எனக்கு நீ ஏற்படுத்திவிட்டாய். இந்த ஏக்கம் போதாதென்று, அதை நீ இன்னும் அறியவில்லை எனும் வேதனை வேறு என்னை வாட்டுகிறது.

மந்தை நகர ஆரம்பித்துவிட்டது. மாட்டுக்காரப் பையன் ஓட்டி நகரவில்லை. தான் நிறைந்ததை உணர அது அவனை நம்பியில்லை. இன்றைக்கு இதற்குமேல் மாடுகள் வருவதற்கில்லை. இன்றைய நிறைவு இவ்வளவுதான் என மந்தை எப்படியோ மொத்தாகாரமாய் உணர்ந்து, அந்த உணர்வின் உந்தலில் தானே நகர ஆரம்பித்துவிட்டது. இதற்கு எப்படி அதன் அன்றன்றைய நிறைவு தெரிந்து விடுகிறது?

இதுவே ஒரு உலகம்தான். எத்தனையோ தாய்கள். தந்தைகள், எத்தனையோ கன்றுகள். தாயின் கன்று, தானும் தாயாகி, தன் கன்றை வீட்டில் தொழுவத்தில் விட்டுவிட்டு, இங்கு வந்து கலந்து, மாலை வந்ததும், கன்று நினைப்பு வந்து தன் இடம் தேடி ஓடி விடுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அபிதா.pdf/96&oldid=1130530" இலிருந்து மீள்விக்கப்பட்டது