24 லா. ச. ராமாமிருதம்
கூட இழுத்துக்கொண்டு நாடோடிகள் மாதிரி நாலு நாள் அங்கே, எட்டுநாள் இங்கே என்று ஹோட்டலில் காலட்சேபம் பண்ணிக்கொண்டு ஊர் ஊராய்ச் சுற்றுகிறோமே, இதுதான்!”
“கொஞ்சம் அலுப்பாய்த்தானிருக்கு. ஒரு வேலையும் இல்லாவிட்டால், அதுவும் இம்சைதான். நீங்கள் காலையில் கிளம்பிப் போனப்பறம் நீங்கள் திரும்பி வரவரைக்கும் எனக்கு என்ன வேலையிருக்கு சொல்லுங்களேன்? வீடு இருந்தால் ஏதாவது வேலை இருந்துண்டேயிருக்கும். ஒண்னுமில்லாட்டா எதையாவது கொட்டியிறைச்சுட்டு அள்ளிப் பொறுக்கிண்டாவது இருக்கலாமே!”
“உனக்கு இது பிடிக்கவில்லையோன்னா?” “அப்படியும் சொல்லிவிட முடியுமா?’’
தரங்கினி அலமாரிக் கதவை மூடிவிட்டு கீழே கிழித்துப் போட்டிருந்த காகிதச் சுக்கல்களைத் திரட்ட ஆரம்பித்தாள். “இப்போ புதுப் புது ஊர்களாய்ப் பார்க்கிறேன். ரயில் பிரயாணம் செய்யறேன். அந்த அந்த இடத்து வினோதங்களை அழைச்சுண்டுபோய்க் காண்பிக்கறேள். இதெல்லாம் நான் ஆத்திலே கட்டுப் பெட்டியாய் உட்கார்ந்திருந்தால் கிட்டுமா?’’
கத்தி தாடிமேல் இறங்குகையில் ‘கிறிங் கிறிங்’ கென்றது.
“எத்தனை ஊர் சுறறனாலும் உனக்கு உன்னுார் சப்பாத்திப் புதரும், ஊர்க்கோவிலின் ஒடிசல் மணியும் தானே பிடிக்கிறது? அப்புறம் உன்னைப் பெத்த அந்த ஆறு—ஊவ்...”
“என்ன?’’
“வெட்டிக்கொண்டேன். உன்னோடு பேசிக் கொண்டே.”