பக்கம்:அஞ்சலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி

“என் தாயே! என் தாயே!”

கண்களிலில் நீர் துளும்ப, தரங்கிணி, ஜலத்தை அப்படியே ஆலிங்கனம் செய்துவிடுபவள் போன்று, இரு கைகளையும் விரித்துக்கொண்டு நின்றாள். நல்லவேளை, வேறெவரும் அங்கில்லை. அவள் கணவன் மார்மேல் கட்டிய கைகளுடன் அவள் முகத்திலாடும் நிழல்களைக் கண்டு அதிசயித்து நின்றான்.

தரங்கிணி அவன்மேல் சாய்ந்து, அவன் தோள்களை இறுகப் பற்றிக்கொண்டாள்.

“என்னைப் பைத்தியம்னு நினைச்சுக்க மாட்டாயே?”

அவன் பதில் பேசவில்லை. புன்னகை புரிந்தான். தரங்கிணி முன்றானையால் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“என்னமோ தெரியல்லே; இத்தனை நாள் கழிச்சு இதைப் பார்க்கறப்போ என்னையுமறியாமல் என்னை என்னவோ பண்றது! இப்படிக் கரையோரமா நடப்போமா ?”

நடையோரம் நெளிந்து வளைந்து நிமிர்ந்த தென்னைகளில் மட்டைகள் சாமரம் ஆடி அசைந்தன. ஓரிரண்டு நட்சத்திரங்கள் வானில் மூச்சுவிட ஆரம்பித்துவிட்டன. திரையிறங்கி வரும் இருளில் ஜலம் வெள்ளைச் சிரிப்புச் சிரித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/11&oldid=1033377" இலிருந்து மீள்விக்கப்பட்டது