உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2 லா. ச. ராமாமிருதம்

வழிப் பொருள்களை அடையாளம் கண்டுகொள்கையில், காலடியில் மணல் ‘சரக் சரக்’ எனப் புதைகையில், அவள் கண்களில் கருவண்டுகள் ஜொலித்தன. அவனுக்குச் சரியாகக் காலை வீசிப் போடுகையில் அவள் இடைகீழ்க் கடையும் தொடைகள் அவனைக் கவர்ந்தன. அவை அவனுள் கிளறும் வேகம் தாங்காது கண்களை மூடிக் கொண்டான். இமைத்திரையில் குதிரையின் சப்பைகள் நீந்தின; உரமிகுந்து வேர்வையில் பட்டுப்போல் மின்னும் கருஞ் சப்பைகள்; செவிக்குமெட்டா லயத்துடன் இதயத்தைத் தொட்டுக்கொண்டு எழுமொரு வேகம் அவனைச் சுற்றிலும் சுழித்தது.

“ஏது! நாம் இதன் ஊற்றுக்கே போய்விடப் போகிறோமா என்ன?”

“இன்று முழுக்க இப்படியே நடந்திண்டிருக்க எனக்கு இஷ்டம்தான். எனக்குச் சலிக்கவே சலிக்காது.”

“ரிஷி மூலம் நதி மூலம் தேட வேண்டாம் என்று சொல்லுவார்களல்லவா?”—அவனுக்குச் சலிப்பு இல்லை; ஆனால், அவளைச் சீண்ட அவனுக்குப் பிடித்தது.

என் மூலம் இதுதான்! என் மூலம் தெரிய உங்களுக்கு ஆசை இல்லையா?”

“நீ தரங்கிணி!”

“அது சரி, என் மூலம் உங்களுக்கு நான் சொல்ல வேண்டாமா? இதுதான் என்தாய். இங்கே உக்காருங்கோ, சோல்றேன்.”


இரவுப் பூச்சிகள் “கிர்க் கிர்க்”கென்றன. மணல் மெத்தைமேல் முகம் மறைந்த இருளில் பின்னிருந்து அவள் குரல் உருவற்ற உயிரோடு விறுவிறுத்தது.

“எனக்கு அம்மா இல்லை—அதனால், இதுவே என் தாய். அப்பாவும் எனக்கு நினைப்பில்லை; அவரே உயிரோடு இருக்காரோ இல்லையோ? அவர் போனவிடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/12&oldid=1020521" இலிருந்து மீள்விக்கப்பட்டது