திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோசுவா/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
யோசுவா
[தொகு]அதிகாரங்கள் 15 முதல் 16 வரை
அதிகாரம் 15
[தொகு]யூதாவுக்கு அளிக்கப்பட்ட பகுதி
[தொகு]
1 யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த நிலப்பகுதி தெற்கே ஏதோம் வரையிலும் அதன் தென்கோடி எல்லை சீன் பாலைநிலம் வரையிலும் அமைந்திருந்தது.
2 அவர்களது தென் எல்லை சாக்கடலின் தென்முனை வளைவிலிருந்து,
3 தெற்குநோக்கி அக்கிரபிம் மேட்டைத்தாண்டி, சீன் பாலைநிலத்தைக் கடந்து, தெற்கே காதேசு-பர்னேயாவை நோக்கி மேலே ஏறுகிறது. எஸ்ரோனைக் கடந்து அத்தார்வரை ஏறி கர்க்காவை நோக்கித் திரும்புகிறது;
4 அட்சமோனைக் கடந்து, எகிப்தின் நதியைத் தொட்டுக் கடலுடன் முடிவடைகிறது. இதுவே உங்கள் தென் எல்லை.
5 கிழக்கு எல்லை யோர்தானின் முகத்துவாரம் வரை உள்ள சாக்கடல்; வட எல்லை யோர்தானின் முகத்துவாரத்திலிருந்து தொடங்கி
6 பேத்தொகிலா வரை மேலேறி, வடக்கே பெத்தராபா வரை செல்கிறது. இவ்வெல்லை தொடர்ந்து ரூபனின் மகன் போகனின் கல்வரை செல்கிறது.
7 இவ்வெல்லை ஆக்கோர் பள்ளத்தாக்கிலிருந்து தெபீர்வரை சென்று பள்ளத்தாக்கிற்குத் தெற்கே அதும்மிம் மேட்டுக்கு எதிரே உள்ள கில்காலுக்குப் பக்கமாக வடக்கே ஓடி, ஏன்செமசு நீர்நிலைகளைத் தொட்டு ஏன்ரோகேல்வரை செல்கிறது.
8 மேலும் இவ்வெல்லை இன்னோம் மகன் பள்ளத்தாக்கின் வட எல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் வழியே சென்று எபூசியரின் தென் அரணாகிய எருசலேம் வழியாக மேற்கே இரபாயிம் பள்ளத்தாக்கின் வடஎல்லையாகிய இன்னோம் பள்ளத்தாக்கின் எதிரே உள்ள மலை உச்சிவரை செல்கிறது.
9 மேலும் இவ்வெல்லை மலை உச்சியிலிருந்து நெப்தோவாகு நீரூற்றுவரை எபிரோன் மலை நகர்களுக்கு வெளியே செல்கிறது. பிறகு இவ்வெல்லை பாலாவுக்கு, அதாவது கிரியத்து எயாரிமுக்குச் செல்கிறது.
10 மேலும் இவ்வெல்லை பாலாவின் மேற்கே சேயிர் மலையை நோக்கிச் சுற்றுகிறது. எயாரிம் மலையின் வடக்குச் சரிவான கெசலோன் பக்கம் செல்கிறது. பெத்சமேசில் இறங்கி திம்னா பக்கம் செல்கிறது.
11 பிறகு இவ்வெல்லை எக்ரோனின் வடக்கிலுள்ள மலைச்சரிவில் சென்று சிக்ரோனைச் சுற்றுகிறது. பிறகு பாலா மலையைக் கடந்து யாப்னவேலுக்குச் சென்று கடலில் முடிவடைகிறது.
12 மேற்கு எல்லை பெருங்கடல். இவையே யூதா மக்களின் குடும்பங்களைச் சுற்றி அமைந்த எல்லைகள்.
காலேபு எபிரோனைக் கைப்பற்றல்
[தொகு](நீத 1:11-15)
13 யோசுவாவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி, எபுன்னேயின் மகன் காலேபுக்கு யோசுவா யூதாவின் நடுவில் எபிரோன் என்ற கிரியத்து அர்பா நிலப்பகுதியை அளித்தார், அர்பா என்பவன் ஆனாக்கின் தந்தை.
14 சேசாய், அகிமான், தல்மாய் என்ற ஆனாக்கின் மூன்று புதல்வர்களை காலேபு அங்கிருந்து துரத்திவிட்டார். [1]
15 அங்கிருந்து அவர் தெபீர்வாழ் மக்களுக்கு எதிராகச் சென்றார். கிரியத்து சேபேர் என்பது தெபீரின் முன்னாளைய பெயர்.
16 "கிரியத்து சேபேரைத் தாக்கி அதைக் கைப்பற்றுபவருக்கு என் மகள் அக்சாவை மனைவியாகக் கொடுப்பேன்," என்று காலேபு அறிவித்தார்.
17 காலேபின் சகோதரர் கெனாசின் மகன் ஒத்னியேல் அதைக் கைப்பற்றினார். காலேபு தம் மகள் அக்சாவை அவருக்கு மனைவியாகக் கொடுத்தார்.
18 அவள் வந்தபோது அவளுடைய தந்தையிடமிருந்து ஒரு நிலம் கேட்குமாறு அவர் அவளைத் தூண்டினார். எனவே அவள் கழுதை மேலிருந்து இறங்கியபொழுது காலேபு அவளிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.
19 அவள், "எனக்கு ஓர் அன்பளிப்புத் தரவேண்டும். நீர் எனக்கு வறண்ட நிலத்தைக் கொடுத்துள்ளீர். இப்பொழுது எனக்கு நீரூற்றுகளையும் தாரும்" என்றாள். அவர் அவளுக்கு மேல் ஊற்றுகளையும் கீழ் ஊற்றுகளையும் கொடுத்தார்.
யூதாவின் நகர்கள்
[தொகு]
20 இது யூதா மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களின் உரிமைச் சொத்து:
21 தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்களின் பின்வருமாறு: கப்சாவேல், ஏதேர், யாகூர்;
22 கீனா, தீமோனா, அதாதா;
23 கெதேசு, ஆட்சோர். இத்னான்;
24 சீபு, தெலேம், பெயலோத்து;
25 ஆட்சோர்-அதாத்தா, கெரியோத்து, எட்சரோன் என்னும் ஆட்சோர்;
26 அமாம், சேமா, மோலதா;
27 ஆட்சோர்-கத்தா, எஸ்மோன், பெத்பலேத்து
28 அட்சர்சூவால், பெயேர் செபா, பிஸ்யோத்தியா;
29 பாலா, ஈயிம், எட்சேம்;
30 எல்தோலது, கெசீல், ஓர்மா;
31 சிக்லாகு, மத்மன்னா, சன்சன்னா;
32 இலபவோத்து, சில்கிம், அயின், ரிம்மோன்; ஆகிய இவை அனைத்தும் இருபத்தொன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
33 தாழ்வான நிலப்பகுதியில் எசுத்தாவோல், சோரா, அஸ்னா;
34 சானோவாகு, ஏன்கன்னிம், தப்புவாகு, ஏனாம்;
35 யார்முத்து, அதுல்லாம், சோக்கோ, அசேக்கா;
36 சாரயிம், அதித்தாயிம், கேதரா, கெதரோத்தாயிம்; ஆகிய இவை பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
37 செனான், அதாசா, மிக்தல்-காத்து;
38 திலயான், மிஸ்பே, யோக்தவேல்;
39 இலாக்கிசு, பொட்சகாது, எக்லோன்;
40 கபோன், இலகுமாசு, கித்திலுசு;
41 கெதேரோத்து, பெத்தாகோன், நாமா, மக்கேதா ஆகிய இவை பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
42 லிப்னா, எத்தேர், ஆசான்;
43 இப்தா, அஸ்னா, நெட்சிபு;
44 கெயிலா, அக்சீபு, மாரேசா ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
45 எக்ரோன், அதன் நகர்களும் சிற்றூர்களும்;
46 எக்ரோனிலிருந்து கடல்வரை, அஸ்தோது அருகில் உள்ள அனைத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்;
47 அஸ்தோது, அதன் நகர்களும் சிற்றூர்களும்; எகிப்தின் ஆறுவரை பரவியுள்ள காசாவும் அதன் நகரங்களும் சிற்றூர்களும்; பெருங்கடலே அதன் எல்லை.
48 மலைப்பகுதியில் உள்ள சாமீர், யாத்திர், சோக்கோ;
49 தன்னா, தெபீர் என்னும் கிரியத்துசன்னா;
50 அனாபு, எஸ்தமோ, ஆனிம்;
51 கோசேன், கோலோன், கீலோ ஆகிய இவை பதினொரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
52 அராபு, தூமா, எசான்;
53 யானிம், பெத்தபுவாகு, அப்பேக்கா;
54 உமற்றா, எபிரோன், கிரியத்து அர்பா, சீயோர் ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
55 மாவோன், கர்மேல், சீபு, யூற்றா;
56 இஸ்ரியேல், யோக்தயாம், சானோவாகு;
57 காயின், கிபயா, திம்னா ஆகிய இவை பத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
58 கல்குல், பெட்சூர், கெதோர்,
59 மாராத்து, பெத்தனோத்து, எல்டதக்கோன் ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
60 கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
61 பாலை நிலப்பகுதியில் பெத்தராபா, மிதின், செகாக்கா,
62 நிப்சான், ஈர்மாலக்கு ஏன்கேதி ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
63 எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை. எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர். [2]
- குறிப்புகள்
[1] 15:13-14 = நீத 1:20.
[2] 15:63 = நீத 1:21; 2 சாமு 5:6; 1 குறி 11:4.
அதிகாரம் 16
[தொகு]எப்ராயிம், மனாசேக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்
[தொகு]
1 யோசேப்பின் மக்களுக்குக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: எரிகோ பகுதியின் யோர்தானிலிருந்து, எரிகோ நீர் நிலைகளுக்குக் கிழக்காக, எரிகோவிலிருந்து பெத்தேல் குன்றுவரை உள்ள பாலைநிலத்தின் ஊடேசென்று,
2 பெத்தேலிலிருந்து லூசுக்குச் சென்று அர்கியரின் எல்லையான அதாரோத்தைக் கடந்து,
3 மேற்காக, யாப்லேற்றியரின் எல்லை நோக்கி இறங்கி, பெத்கோரோன்கெசேர் எல்லைமட்டும் சென்று கடலில் முடிகின்றது.
4 யோசேப்பின் மக்களான மனாசேயும் எப்ராயிமும் இதை உரிமைச்சொத்தாகப் பெற்றனர்.
எப்ராயிமுக்குரிய பகுதி
[தொகு]
5 எப்ராயிம் புதல்வருக்கு அவர்கள் குடும்பங்களின்படி உரிமைச் சொத்தாகக் கிடைத்த நிலப்பகுதியின் எல்லைகள்: கிழக்கே எல்லை அற்றரோத்து அதார் முதல் மேல் பெத்கோரோன்வரை செல்கின்றது.
6 மேற்கு எல்லை மிக்மெத்தாத்துக்கு வடக்கே சென்று கிழக்கே தானத்து சீலோவுக்குத் திரும்பி, அதை யானோவாவுக்குக் கிழக்காகக் கடந்து,
7 யானோவாவிலிருந்து அற்றரோத்து நகருக்கு இறங்கி, எரிகோவைத் தொட்டு யோர்தானில் முடிவடைகின்றது.
8 இவ்வெல்லை தப்பூவாகிலிருந்து மேற்காக கானா நதிவரை ஏறிக் கடலில் முடிவடைகின்றது. இதுவே எப்ராயிம் மக்களின் குலத்தைச் சார்ந்த குடும்பங்களுக்குக் கிடைத்த உரிமைச் சொத்து.
9 இதுவன்றி, எப்ராயிம் மக்களுக்கு மனாசேயின் மக்களின் உடைமைகளான நகர்களுக்கும் அவற்றின் சிற்றூர்களுக்கும் நடுவில் நகர்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
10 அவர்கள் கெசேரில் வாழ்ந்து வந்த கானானியரை வெளியேற்றவில்லை. ஆகையால் இன்றும் கானானியர் எப்ராயிம் நடுவில் அடிமைகளாக வேலைசெய்து வாழ்ந்து வருகின்றனர். [*]
- குறிப்பு
[*] 16:10 = நீத 1:29.
(தொடர்ச்சி): யோசுவா: அதிகாரங்கள் 17 முதல் 18 வரை