உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/யோபு/அதிகாரங்கள் 35 முதல் 36 வரை

விக்கிமூலம் இலிருந்து
துன்பத்தில் உழலும் யோபுவை மனைவி குற்றம் சாட்டுகிறார். கலைஞர்: காஸ்பரே த்ரவேர்சி (1723-1770). காப்பிடம்: ஸ்டுட்கார்ட், செருமனி.

யோபு (The Book of Job)

[தொகு]

அதிகாரங்கள் 35 முதல் 36 வரை

அதிகாரம் 35

[தொகு]

அனைத்தையும் கடந்தவர் கடவுள்

[தொகு]


1 எலிகூ தொடர்ந்து கூறினான்:


2 'நான் இறைவன்முன் நேர்மையானவன்' என
நீர் சொல்வது சரியென நினைக்கின்றீரா?


3 'நான் பாவம் செய்யாததனால் எனக்கு என்ன ஆதாயம்?
எனக்கு என்ன நன்மை?' என நீர் கேட்கின்றீர்.


4 உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து
நான் பதில் அளிக்கின்றேன்:


5 வானங்களைப் பாரும்; கவனியும்;
இதோ! உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!


6 நீர் பாவம் செய்தால், அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்?
நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால் அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?


7 நீர் நேர்மையாய் இருப்பதால் அவருக்கு நீர் அளிப்பதென்ன?
அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?


8 உம் கொடுமை உம்மைப்போன்ற மனிதரைத் துன்புறுத்துகின்றது;
உம் நேர்மையும் மானிடர்க்கே நன்மை பயக்கின்றது. [*]


9 கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்;
வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.


10 ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை:
'எங்கே என்னைப் படைத்த கடவுள்?
இரவில் பாடச் செய்பவர் எங்கே?


11 நானிலத்தின் விலங்குகளைவிட
நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும்
வானத்துப் புள்ளினங்களை விட
நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?'


12 அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;
பொல்லார் செருக்கின் பொருட்டு அவர் பதில் ஒன்றும் சொல்லார்.


13 வீண் வேண்டலை இறைவன் கண்டிப்பாய்க் கேளார்;
எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கவும் மாட்டார்.


14 இப்படியிருக்க, 'நான் அவரைப் பார்க்கவில்லை;
தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது.
நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;' என்று நீர் கூறும்போது,
எப்படி உமக்குச் செவிகொடுப்பார்?


15 இப்பொழுதோ, 'கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;
மனிதனின் மடமையை அவ்வளவாய் அவர் நோக்குவதில்லை' என எண்ணி,


16 யோபு வெற்றுரை விளம்புகின்றார்;
அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.


குறிப்பு

[*] 35:6-8 = யோபு 22:2-3.


அதிகாரம் 36

[தொகு]

யோபினுடைய துன்பங்களின் உட்பொருள்

[தொகு]


1 எலிகூ தொடர்ந்து பேசலானான்:


2 சற்றுப் பொறும்;
காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.


3 தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்;
எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.


4 ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்;
அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.


5 இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்;
அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.


6 கொடியவரை அவர் வாழவிடார்;
ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;


7 நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்;
அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;
என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.


8 ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில்,
வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,


9 அவர்கள் செய்ததையும் மீறியதையும்,
இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.


10 அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்;
தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.


11 அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,
வளமாய்த் தங்கள் நாள்களையும்
இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.


12 செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.
அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.


13 தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;
அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.


14 அவர்கள் இளமையில் மடிவர்;
காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.


15 துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;
வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.


16 இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்;
ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.
உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.


17 பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;
தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.


18 வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்;
நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.


19 உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும்
இன்னலில் உமக்கு உதவுமா?


20 இருந்த இடத்திலேயே
மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.


21 துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்;
எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.

கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்

[தொகு]


22 இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;
அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?


23 அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?
அவர்க்கு 'நீர் வழிதவறினிர்' எனச் சொல்ல வல்லவர் யார்?


24 அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.
மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.


25 மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;
மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.


26 இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;
நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;
அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;
கணக்கிட முடியாதவை.


27 நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்;
அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.


28 முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;
மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.


29 பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின்
ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?


30 இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார்.
கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.


31 இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்;
அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.


32 மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;
இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.


33 இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;
புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.


(தொடர்ச்சி): யோபு:அதிகாரங்கள் 37 முதல் 38 வரை