பக்கம்:அலைகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 O லா. ச. ராமாமிருதம்


பின் ஒடுங்கலில் செதுக்கிய சிலையாய் வணங்கிய அதே நிலையில் மெய்மறந்து இன்னும் இருக்கிறாள்.

கதவை மெதுவாய் என் பின்னால் மூடுகிறேன்.

சிக்காமு இதை நான் உன்னிடம் சொல்லியிருந்தால் உனக்குப் புரிந்திருக்குமோ? ஆனால் இது மாத்திரமல்ல இன்னும் எவ்வளவோ உனக்குப் புரியாது என்று நான் கொண்டது, என் தேடலின் மமதை, என்னுடைய புரியாமையே தான் என்று இப்போது புரிகின்றது.

சிக்காமு, நீ கொடுத்து வைத்தவள். உன்னை அடைந்ததில் நானும் கொடுத்து வைத்தவன். என் தராசு தடுமாறும் போதெலாம் எனக்குத் தக்கறு எடையாய் நீ அமைந்தாய். என்ன நிலையில் நிறுத்திவைக்க முடிந்ததோ யில்லையோ நான் தட்டு அறாது காத்தது நீதான் நான் தேடுமவளைத் தேடும் ஆர்வத்தில் எனக்குக் கிட்டியது ஏமாற்றம்தான். ஆனால் உன்னிடம்தான் என் பத்ரமடைந்தேன். நீ தந்த பத்ரத்தின் உதைகாலில்தான் என் தேடலுக்கு எழுச்சியே இருந்தது. ஆனால் பத்ரம் இருக்கும் வரை எங்கு தெரிகிறது? ஒவ்வொரு சமயமும் உன் கயிறின் ஆதாரத்தில் தானே என் முத்துக் குளிப்பில் நான் மூழ்க முடிந்தது. உன்னில் அல்ல-உன்னிலேயே தானோ அவள் என்னருகிலேயே இருந்து என்னை ஏமாற்றிக் கொண்டிருந்தாளோ? பத்ரம் தந்து, தான் தந்த பத்ரத்தைத் தகர்க்கும் ஆர்வமும் அவளே தானோ? காலடியில் புதையலை இடறிக் கொண்டே, இல்லாதவிடமெல்லாம் செல்லாத பொருளைத் தேடியிருந்தேனோ? நீ இல்லாமல் நானே எப்படி இத்தனை நாள் இருந்திருக்க முடியும்?

கிணற்றடியில் சறுக்கினதே சாக்காய், தப்பிய நினைவு திரும்பாமலே நீ கண் மூடியதும் எனக்குக் கண் திறந்து விட்டது. உன் யாத்திரைக்கு உன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறார்கள். பற்றிய மஞ்சளும், நெற்றியில் குங்குமமுமாய் மடியில் கட்டிய தேங்காய் வெற்றிலையுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலைகள்.pdf/242&oldid=1286157" இலிருந்து மீள்விக்கப்பட்டது