பக்கம்:அவள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130 லா. ச. ராமாமிருதம்



நோக என்னை நிமிர்ந்து பார்த்து, 'தாத்தா, உங்காத்துலே எனக்கு இடம் கொடேன்!” என்று கேட்கிறது. நாலு ஐந்து வயசுக்கு மேல் இராது. அரையில் மாத்தளிர்ப் பட்டுப் பாவாடை, மேலே சொக்காய் கிடையாது; திறந்த மார்பில், கழுத்தில் காரடையா நோன்புச் சரடு மாதிரி ஒரு மாங்கல்யக் கயிறு. அவ்வளவுதான்.

அது கேலியாக் கேட்டதோ, வேணுமென்றுதான் கேட்டதோ, தெரியாது. ஆனால் கேட்கும்போதெல்லாம், என் எலும்பு ஒவ்வொன்றும் தனித்தனியாய் உருகிற்றுடி: நானே கரைந்துபோய்விடுவேன் போலிருந்தது என் கனவிற்குத் தகுந்தாற்போல் இன்றைக்கு ஸ்நானம் பண்ணப் போன இடத்திலே , இது அநாதையா-’

"சரிதான்! 'தாத்தா'ன்னு முறை வெச்சு உங்க கனாக் குழந்தை கூப்பிட்டத்துக்கோசரம் எனக்கு ஒரு பேத்தியைக் குளத்திலேருந்து பொறுக்கிப் பாத்து எடுத்துண்டு வந்தேளாக்கும்! எந்த வில்லிச்சி பெத்துப் போட்டுட்டுப் போனாளோ- போலீஸுலே

குழந்தை கத்த ஆரம்பித்துவிட்டது.

"ஐயோ, பசிடி-" அதன் பசியழுகையைப் பார்க்கையில், அந்த அம்மாளின் முகம் உள் போராட்டத்தில் முறுகிச் சவுங்கியது. அவளையும் மீறிக் கைகள் குழந்தையை வாங்கிக்கொண்டன. அன்னையின் வாயும் கைகளும் பாலிடத்தை ஆத்திரத்துடன் தேடித் தவித்தன. அந்த அவஸ்தையைக் கண்டு ஐயர் தலை குனிந்தது. 'நைவேத்தியப் பாலைப் புகட்டு; வேறே வாங்கி வருகிறேன்'- கீழ்நோக்கிய அவர் வார்த்தைகள் பூமியில் தெறித்து எழும்பின.

அம்மாள் ஆத்திரத்துடன் கீழே உட்கார்ந்து, குழந்தையை மடியில் 'படக்'கென்று கிடத்திக் கொண்டாள். வார்த்தைகள் வாயினின்று வெடித்து உதிர்ந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/174&oldid=1497022" இலிருந்து மீள்விக்கப்பட்டது