பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

வணை அட்டைகள் தயாரிப்பதற்கென முப்பத்து மூன்று மொழிகள் அறிந்த நூற்று எழுபது அலுவலர்களை கொண்ட நூலட்டவணைத் துறையொன்று சிறப்புடன் விளங்குகின்றது. நூல்களைத் தாமதமின்றி எளிதில் வழங்குவதற்கு ஏற்ற முறையினையும் டாக்டர் பிலிங்க அமைத்தார். அந் நூலகத்தின் ஏனைய பணியாளர்களையும் நன்கு பழக்கி வைத்திருந்தார். அவர் தொடங்கி வைத்த முறை இன்றுவரை மாறவில்லை. எண்பது மைல் நீளத்தில் நூல் அலமாரிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் துரிதமாக நூல்களைப் பெறும் வழி வகைகள் பற்றிய சிறு குறிப்புக்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று வருமாறு:- நீங்கள் பதினைந்து நிமிடங்கட்குள் நூல்களைப் பெருவிடில் சன்னலுக்கு அருகிலிருக்கும் பணியாளரிடம் தெரிவிக்கவும். ஒரு நூலைக் கேட்ட உடனேயே, நூலட்டவணை அறையினின்று படிக்கும் அறைக்குச் சீட்டொன்று (Call slip) குழாய் மூலமாக அனுப்பப்படும். அங்கிருந்து அச்சீட்டு நூலிருக்கும் அலமாரிக்கு நேராக அனுப்பப்பெறும். அங்குள்ள பணியாளர் அந்நூலே எடுத்து, தானே அசைந்து செல்லும் சாதனம் ஒன்றில் வைப்பார். அந் நூல் உடன் நூல்அட்டவணை அறைக்குச் செல்லும். அது வரும் செய்தி மின்சார விளக்குகள் மூலம் அறிவிக்கப்படும். எந்த நூலும் சுமார் ஏழு அல்லது எட்டு நிமிடங்களுக்குள் வழங்கப்படுகின்றது. மின்சாரத்தடை ஏற்படும் காலத்தில்தான் சிறிது கால நீட்டிப்பு ஏற்படும்.

நூலகத்தில் உள்ள எல்லா நூல்களும் அடிக்கடி தேவைப்படுமாதலால் நூல்களை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி பொது மக்களுக்குக் கிடையாது. ஆனால் பொதுமக்களுக்கு வழங்குவதற்கென எண்பது கிளை நூலகங்களில் பல இலட்சக்கணக்கான நூல்கள் உள்ளன.