பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழ் இலக்கியக் கதைகள்

கூறிப் பொருள் சரியாக அமையுமாறு அதை வெண்பாவாகப் பாடச் சொல்ல வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டார்கள். ‘குடத்திலாவது, கங்கையாவது, அடங்குகிறதாவது?’ என்றெண்ணிக் காளமேகம் மருண்டு திகைத்துத் தோற்றுப் போவார். எப்படியாவது வாய்க்கு வந்தபடி பாடிப் பூர்த்தி செய்தாலோ பொருள் கெட்டுப் போகும். பொருளும் விபரீதமாக இருக்கக் கூடாது இறுதியடியும் குடத்திலே கங்கையடங்கும் என்றிருக்க வேண்டும் என்ற நினைவுகளுடன் அவர்கள் காளமேகத்தின் பாற்சென்று தம் நிபந்தனைகளைச் சொல்லி வேண்டிக் கொண்டார்கள். உண்மையில் அந்த ஈற்றடியைத் தயார் செய்த அவர்களுக்கே அதைத் பூர்த்தி செய்யத் தெரியாது.ஆனால், காளமேகமா விடுகின்றவர்? அவர்கள் கேட்டு வாய் மூடியிருக்கமாட்டார்கள். அதற்குள்ளேயே,

விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை
இடத்திலே வைத்த இறைவன் சடாம
குடத்திலே கங்கை யடங்கும்”

விண் = வானம், வெற்பு = மலை, மண் = உலகம். பெண் = பார்வதி இறைவன் = சிவன், சடாமகுடம் = சடைமுடி.

என்று அவர் பாடினபோது அவர்கள் மூக்கில் விரலை வைத்தார்கள்.

38. பல்லக்கு சுமந்த வள்ளல்

சொக்கநாதர் மாவூருக்கு வந்து சிலநாட்களே கழிந்திருந்தன. மாவூர்க் கருப்பண்ண வள்ளலின் அழைப்புக்கு இணங்கியே அவர் அங்கு வந்து அவரிடம் தங்கியிருந்தார். கருப்பண்ண வள்ளல் மாவூரில் மிகப் பெரிய செல்வர். அவருக்கு மூன்று தம்பியர்கள் இருந்தனர். செல்வம் அளவற்றுத் தங்கியிருந்தது போலவே கல்வியும் நற்பண்புகளும் அவர்களிடம் நிறைந்திருந்தன.