பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

197

கூப்பாடு வலுத்தது. சிறை வார்டன்வரை தகவல் போயிற்று. எல்லோருக்கும் ஒரே மனக் கொதிப்பு. பசியோடு கூடிய ஆவேசம் அந்தக் கொதிப்பை மேலும் வளர்த்தது. ‘பசி வந்திடப் பத்தும் பறந்து போம்’ என்ற நிலையாகி விட்டது. சிறை வார்டன் எம கிங்கரனைப் போல ஓடிவந்து நின்றான். அதட்டினான். “இப்படி அமளி செய்தால் இன்று முழுதும் உங்களைப் பட்டினி போட்டு விடுவேன்.”

இந்த அதட்டலைக் கேட்டதும் எல்லோரும் கப்சிப் என்று அடங்கிவிட்டனர். அதுவரை அடங்கிப் பசி மயக்கத்தோடு உட்கார்ந்திருந்த ஐயங்கார் பொங்கியெழுந்தார். சீற்றத்தோடு வார்டனைப் பார்த்தார். அவர் உதடுகள் துடித்தன. முகத்தில் ஆவேசம் படர்ந்தது. அடுத்த கணம் அவர் குரல் இடி முழக்கம் போல் ஒலித்தது. வார்டன் அந்த ஆவேசத் தமிழ்க் குரலுக்கு முன் கட்டுண்டு வெலவெலத்துப் போய் நின்றான். அவன் முகத்தில் ஈயாடவில்லை!

பன்றியெனத் தின்று பணம்பறிக்கும் வெள்ளயர்கள்
இன்றெமக்குச் சிற்றுணவும் ஈயாது - துன்றுசிறை
இட்டுவருத்து கின்றீர் ஏதுக்கிந்த இழவோலை
கிட்டும் நாளொன்று கெடீர்.”

ஐயங்காருடைய பசியில் பிறந்த ஆவேசக் கவிதையைக் கேட்டு அயர்ந்துபோய் நின்ற வார்டனின் கன்னத்தில் அறைவது போல் மற்றொரு பாட்டும் முழங்கியது. வார்டன் பயந்து நின்றான்.

ஏடா எமதன்னைக் கின்ன லிழைத்தகுடி
கேடா நெறியழித்த கீழ்மகனே-வாடாத
பேரறவாள் கொண்டு குதித்தார் பீடா ரிளந்தமிழர்
போடா இனிவிரைந்து போ!”

பாட்டிலுள்ள ஒவ்வொரு ‘டா'வும் கன்னத்தில் அறைவது போலவே இருந்தது. அடுத்த சில விநாடிகளில் உணவு வந்தது. வார்டனைப் பார்த்து அந்தத் தேசத்தொண்டர் பாடிய பாடலில்