ரங்கோன் ராதா/அத்தியாயம் 5
1
[தொகு]"தங்கம் கொண்டிருந்த பொறாமை ஒருபுறம் என்னைத் தாக்கிற்று என்றால், உன் அப்பா, வரவர அவளிடம் அக்கறை காட்ட ஆரம்பித்தது வேறு என்னை வாட்டலாயிற்று. அவர் ஒருவேளை, களங்கமற்ற உள்ளத்தோடுதான் தங்கத்திடம் அக்கறை செலுத்தினாரோ என்னவோ என்று நான் சில நாட்கள் எண்ணிக் கொண்டிருந்தேன். உண்மை அதுவல்ல; கேவலம், சுயநலத்தாலேயே அவர், அந்த அக்கறை காட்ட ஆரம்பித்தார் என்பது எனக்குப் பிறகு தெரியவந்தது. அது தெரிந்ததும், என் மன வேதனை முன்பு இருந்ததைவிடப் பன்மடங்கு அதிகமாகிவிட்டது."
ஒருநாள் நான் அவரிடம், "இதோ பாருங்கள்! இப்படி அடிக்கடி தங்கத்தைப் போய்ப் பார்ப்பதும், அடிக்கடி ஏதாவது சாமான்களை அவளுக்கு வாங்கி அனுப்புவதுமாக இருக்க வேண்டாம். ஊரிலே ஒருவிதமாக நினைக்கிறார்கள்" என்று சொன்னேன்.
"என்ன சொல்லப்போகிறார்கள். தங்கத்தை நான் கலியாணம் செய்துகொள்ளப் போவதாகப் பேசுவார்கள். வேறே என்ன இருக்கிறது வம்பளக்க. அப்படியே நான் தங்கத்தைக் கலியாணம் செய்து கொண்டால்தான் என்ன தவறு? தகாதா?" என்று கேட்டார். நான் என்னவென்று பதில் கூறுவேன்! என் கண்ணீரை அவர் அன்றிரவு காணவில்லை, தலையணை தாங்கிக் கொண்டது.
தங்கம், என்னைவிட அழகுதான், இளமை வேறு அவளுக்கு மெருகிட்டு இருந்தது. நான் கொஞ்சம் சங்கோஜக்காரி. தங்கம் அப்படியல்ல. பேச்சிலே பாதி சிரிப்பாகவே இருக்கும். சிறு பெண்ணாக இருக்கும்போதே நாங்கள் அவளை அதற்காகக் கேலி செய்வதுண்டு. ஆனால், எனக்கு அப்போதெல்லாம் அவளுடைய சிரிப்பு கோபமூட்டியதில்லை. பெண்கள் அப்படித்தான் களங்கமற்றுக் கலகலவெனச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும். சுடுமூஞ்சியாக இருக்கக்கூடாது என்று சொல்வது வழக்கம். அந்தச் சிரிப்பு, சிலந்திக்கூடாகுமென்று நான் கண்டேனா! தங்கம், இரண்டு நிமிஷம் சேர்ந்தாற்போல ஒரே இடத்திலே பார்வையைச் செலுத்த மாட்டாள். ஏதோ சாமானைத் தவறி விட்டுவிட்டுத் தேடுபவள் போல் அவளுடைய பார்வை அடிக்கொரு தடவை வெவ்வேறு பக்கம் பாயும்; கண் மட்டுந்தான்! நாங்கள் அதற்காக "தங்கம் உன் கண்கள் சுழல் விளக்கடி!" என்று கேலி செய்வது வழக்கம். அந்தச் சுழல் விளக்கு ஒரு பெரிய அரண்மனையிலே ஜோதி தரவேண்டும் என்பதுதான் என் ஆசை. தங்கத்தின் ரூபலாவண்யத்துக்கு ஏற்றதாக ஒரு இடம் அமைய வேண்டும். அவள் ஆடை அணிகளுடன் அகமகிழ்ச்சியோடு வாழவேண்டும், அதைக் கண்டு களிப்பும் பெருமையும் அடைய வேண்டும் என்று தான் நான் நோன்பிருந்து வந்தேன். நடந்தது என்ன?
அவள் என் சந்தோஷத்தைச் சூறையாடலானாள். என் புருஷருக்கு மனைவியாக வழி செய்து கொண்டிருந்தாள். எப்படி இருக்கும் எனக்கு. அவளைவிட நான் அழகில் கொஞ்சம் குறைந்திருக்கலாம். ஆனால், அன்பை அவருக்கு அபிஷேகித்திருக்கிறேன்; மனம் கோணாமல் நடந்திருக்கிறேன்; அவருடைய அன்பினால் ஆனந்தமடைந்திருக்கிறேன். என் வாழ்வைக் கெடுத்து, அவள் இன்பம் பெற விரும்புவதா! இதற்கா என் தங்கையாகப் பிறந்தாள்! மகனே! இப்படி எல்லாம் எண்ணி எண்ணி நான் ஏக்கமடைந்தேன். இடி இதோடு நிற்கவில்லை. சில நாட்களிலே, அவர் தங்கத்திடம் காட்டிய அன்பும் அவளுக்காக அல்ல, கேவலம் பணத்துக்காக என்பது தெரிந்து நான் திடுக்கிட்டுப் போனேன். வழக்கப்படி, நான் அவரிடம் தங்கத்தின் தளுக்கு, மினுக்கு, அதனால் வரக்கூடிய கேடு ஆகியவை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவர், "ரங்கம்! விஷயம் தெரியாமல் உளறிக்கொண்டிராதே. சீமையிலே, உன் அப்பாவின் கேஸ் அவர் பக்கம் தீர்ப்பாகிவிட்டது. மிட்டா திரும்பக் கிடைக்கும். தங்கம் அதிலே பாதி பாகத்துக்குச் சொந்தக்காரி. அவளை இனி நீ முன்பெல்லாம் எண்ணிக் கொண்டிருந்ததுபோல நினைக்காதே" என்றார். என் அப்பாவுக்கு கேஸ் ஜெயித்தால் இழந்த இன்பம் மீண்டும் வருவதுபற்றி, எனக்கு மகிழ்ச்சி பிறந்தது. ஆனால் அதே சமயம் தங்கத்துக்குப் பாதி மிட்டா வர இருக்கிறது என்று தெரிந்துதான் உன் அப்பா, அவளிடம் அக்கறை காட்டி வருகிறார் என்பது தெரியவே என் மனம் பதைத்தது. என் பாகமாகக் கிடைக்க இருக்கும் பாதி மிட்டா உன் அப்பாவுக்குத் திருப்தி இல்லை; அவளுக்குக் கிடைக்க இருக்கும் பாகத்தின் மீதும் அவருக்கு ஆவல் பிறந்துவிட்டது. பேராசைதானே! ஒரு பெண்ணின் கண்ணீரைச் சட்டை செய்யாத அளவு மனதைக் கல்லாக்கிக் கொண்டார், உன் அப்பா. ஊரிலே அவருக்குப் பணத்தாசையே கிடையாது என்று புகழ்.
2
[தொகு]"தங்கத்தின் சொத்து அவள் கணவனுக்குத்தான் சேரும். எவன் பல் விளக்கிக் கொண்டிருக்கிறானோ தெரியவில்லை" என்று ஆரம்பித்தார்; பிறகு தங்கத்தின் திருமண விஷயமாக யார் வந்தாலும் ஏதாவதொரு சாக்கு, தடை கூறித் தடுத்து வரத்தொடங்கினார். அவருடைய திட்டம் எனக்கு நன்றாக விளங்கி விட்டது. விளங்கவே என் விசாரம் அதிகரித்து, உடல் துரும்பாக இளைக்க ஆரம்பித்தது. அது கண்டு உன் அப்பா சந்தோஷப்பட்டார். ஆமாம் கண்ணே! நான் இளைக்க ஆரம்பித்தது கண்டு அவருக்கு உள்ளுக்குள் சந்தோஷந்தான். ஏன் தெரியுமா? இரண்டாவது தாரம் தேட வழி கிடைத்தது! இப்படியும் ஒரு மனப்பான்மை இருக்குமா என்று கேட்பாய். நான் இல்லாததையோ நடவாததையோ சொல்லவில்லை; உன் அப்பாவுக்கு அதே மனநிலைதான் இருந்தது. என் உடல் உருகுவது கண்டு தானும் உருகுபவர் போலக் காட்டிக் கொண்டார். ஆனால், அனுதாபத்துடன் அல்ல; அலுப்புடன் சலிப்புடன் உற்றார் உறவினரிடமெல்லாம் கூறுவார். "என்னவோ போங்கள்! கடன்பட்டும் பட்டினி, கல்யாணம் செய்தும் சந்நியாசி என்பார்களே, அது போல இருக்கிறது என் நிலைமை. கொஞ்சமும் நிம்மதி கிடையாது. வீட்டிற்குள் நுழைந்தாலே வேதனைதான். ரங்கம், ஏனோ, துரும்பு துரும்பாக இளைக்கிறாள். அவளைப் பார்க்கும்போதே வயிறு பகீர் என்கிறது" என்று பேசுவார். அவர் சொல்லிச் சொல்லி, ஏறக்குறைய ஊரிலே நமது குடும்பத்தைத் தெரிந்தவர்கள் அனைவருக்கும் நான் ஒரு நோயாளி என்று தெரிந்துவிட்டது.
ஒவ்வொருவரும் என்னைப் பார்க்கும்போதெல்லாம், "ரங்கம்! ஏனம்மா இப்படி இளைத்துக் கொண்டே போகிறாய்? என்னதான் உனக்கு உடம்புக்கு? அவர் பாபம் ரொம்பக் கவலைப்படுகிறார்" என்று கூறுவார்கள். எத்தனை தடவைதான் இந்த ஏமாளிகளின் பேச்சைக் கேட்டுச் சகிப்பது. ஒரு தடவை இல்லாவிட்டால் இன்னோர் தடவை கோபம் வரும். அந்தக் கோபத்திலே, "சரி! எனக்குத்தான் நோய் பிடித்துக் கொண்டது. எலும்புந் தோலுமாகிவிட்டேன். ஏதோ என் வினை. அதற்காக அவர் ஏன் கஷ்டப்படவேண்டும். வேறு கல்யாணம் செய்துகொண்டு சுகப்படட்டுமே. நான் எக்கேடோ கெட்டுப் போகிறேன். ஒருவேளை சோறு போட்டால் போதும். அதுவும் இல்லை என்றாலும் சரி" என்று கூறுவேன்; கூறிவிட்டு அழுவேன். அப்பா! என் வேதனையில் முளைத்த இந்தப் பேச்சு, என்ன விபரீதத்தில் முடிந்தது தெரியுமோ? உடல் இளைத்ததற்கு, வைத்தியர் வரவழைக்கப்பட வேண்டியதற்குப் பதிலாக, பூஜாரி வரவழைக்கப்பட்டான்! எனக்கு நோயல்ல, பேய் பிடித்துக் கொண்டது என்று கூறிவிட்டார் உன் தந்தை. அந்தப் பேயின் சேஷ்டையால் தான் நான் இளைத்துவிட்டேனாம். முன் கோபம், கெட்ட சுபாவம் வந்துவிட்டனவாம்.
"என் எழுத்து இப்படியாகிவிட்டது. என்ன செய்வது?" என்று கண்டவர்களிடம் கூறத் தொடங்கினார். ஒவ்வொருவர் ஒவ்வொரு யோசனையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். தலை முழுக்கு, கயிறு மந்திரித்துக் கட்டல், காளிக்குப் பூஜை, காத்தவராயன் கோவிலில் நோன்பு இருத்தல், இப்படிப் பலப்பல முறைகள். சதா சர்வ காலமும் உடுக்கையும் பம்பையும்; நம் வீட்டிலே பூஜாரிக் கூட்டம் வந்துபோனபடி இருக்கும். ஒரு மாதத்துக்குள், என்னைக் காண குழந்தைகள் பயப்பட்டன. இளம்பெண்கள், பொழுது போனால் என் முகத்தில் விழிக்க மாட்டார்கள். "கூப்பிடட்டுமா ரங்கத்தை" என்று கூறிக் குழந்தைகளுக்குப் பெண்கள் சோறு ஊட்ட ஆரம்பித்தார்கள். அவரே கூட, என்னிடம் ஏதோ கொஞ்சம் பயந்தவர் போல நடந்து கொள்ளத் தொடங்கினார்.
இரவெல்லாம் வீட்டிலே, பெரிய விளக்கு இருக்கவேண்டுமென்று ஏற்பாடு செய்துவிட்டு, எனக்குத் துணையாக ஒரு வேலைக்காரியை இருக்கச் செய்துவிட்டு, அவர் தெருத் திண்ணையில் படுக்கலானார். என்னால் இந்தக் கஷ்டத்தைச் சகிக்க முடியவில்லை. ஆகவே, நான் ஆத்திரமும் அழுகுரலும் கொண்ட முறையில், "வேண்டாம்! இப்படி என்னைத் துரோகம் செய்யவேண்டாம்!" என்று அலறினேன். அந்த அலறல், ஆத்திரம், அழுகுரல் யாவும் அவருடைய சேஷ்டையின் விளைவு என்பதை யார் உணர்ந்தார்கள்? என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயின் சேஷ்டை என்று கூறிவிட்டார்கள். அப்பா! அவர்களெல்லாம் பயந்தது கூட வேடிக்கையில்லை. எனக்கேகூட, கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கும்போது, அச்சம் உண்டாயிற்று. என் கண்களின் ஒளி எங்கேயோ போய்விட்டது! முகம் வெளுத்துக் கிடந்தது. பேய் அறைந்தது என்பதற்கு என்னென்ன குறிகள் உண்டு என்று சொல்வார்களோ அவைகள் இருக்கக் கண்டேன். அவ்வளவும் என் வாழ்விலே அவர் கலக்கிய வேதனையால் உண்டானவை. ஊராரோ, அதுவெல்லாம் பேயின் சேஷ்டை என்றனர். ஒரு அண்டப் புளுகன், என்னைப் பிடித்திருப்பது ஒரு பேயல்ல, மூன்று என்று கணக்கிட்டுக் கூறினான்.
3
[தொகு]"முதலியாரே! அம்மாவுக்கு இராத்திரியிலே தூக்கம் சரியாகக் கிடையாதே."
"இல்லையே, ரங்கம் சரியாகத் தூங்கி எத்தனையோ மாதங்களாகி விட்டன."
"வராது! தூக்கம் வராது. அம்மா, அடிக்கடி காரணம் இல்லாமல் அழுவார்கள். காரணம் இல்லாமல் சிரிப்பார்கள். சரிதானுங்களா நான் சொல்வது?"
"ஆமாம்! அப்படித்தான் செய்கிறாள்."
"முன்கோபம் பிரமாதமாக இருக்கும்."
"அதை ஏன் கேட்கிறாய் போ. முன்பு எவ்வளவுக்கெவ்வளவு சாந்தமாக இருந்தாளோ அவ்வளவுக்கவ்வளவு கோபக்காரியாகி விட்டாள்."
"ஆமாம்! எல்லாம் அந்தப் பேய்களின் வேலை, முதலியாரே! மூன்று பேய் இருக்கு அம்மா மேலே! வெள்ளிக்கிழமை குளித்துவிட்டு, மாடியிலே நின்று கொண்டு இருந்தார்கள்; அந்த நேரத்தில் பிடித்துக் கொண்டது ஒரு பேய். அது பிறகு தனக்குச் சினேகிதமான வேறு இரண்டு பேய்களைக் கொண்டு வந்து சேர்த்துவிட்டது."
பூஜாரிக்கும் உன் அப்பாவுக்கும் இப்படிப் பேச்சு நடக்கும்போது, என்னால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்.
"அட அடிமுட்டாளே! மூன்று பேயும் இல்லை, முப்பது பேயும் இல்லையடா; அதோ உட்கார்ந்திருக்கிறதே அந்தப் பேய்தாண்டா என்னைப் பிடித்துக்கொண்டது" என்று கூறி உன் அப்பாவைக் காட்டினேன். கோபத்துடன், அந்தப் பாதகன், ஒரு பிடி விபூதி இருக்கும், அதை எடுத்து, "ஆஹா! ஆங்காரி! ஓங்காரி!" என்று ஏதோ அர்த்தமற்றபடி கூவிக்கொண்டு என் கண்களிலே தூவினான். என் கதி இப்படியும் ஆயிற்றே என்று நான் கோவெனக் கதறினேன். அந்த விடாக்கண்டன், தெருமுழுவதும் என்ன என்ன என்று வந்து கேட்கும்படியான கூச்சலிட்டு, உடுக்கையைத் தட்டினான். எதிர் வீட்டார், பக்கத்து விட்டார், உள்ளே வந்தனர். நான் வெட்கமும் துக்கமும் கொண்டவளாய், பேசாமல் கண்களை மூடிக்கொண்டு படுத்துக் கொண்டேன். "ரங்கம் மூர்ச்சையாகி விட்டாள். பேய் மிகப் பொல்லாதது" என்று கூவினர். கண்களைத் திறந்தேன்; கோபத்துடன் எழுந்து உள்ளே வந்து இருந்தவர்களை வாயில் வந்தபடி ஏசி, அங்கே கிடந்த சாமான்களை எடுத்து வீசி விரட்டி அடித்தேன். ஒரு புருஷனின் பேராசையினால் ஒரு பெண் தன் வாழ்வின் நிம்மதியை இழந்து வேதனைப்படுகிறாள் என்பதைக் கண்டுகொள்ள முடியாத முட்டாள்கள், தங்கள் முட்டாள்தனத்தை மறைக்க, எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறினால் எனக்குக் கோபம் வராதா! அந்தக் கோபத்தினால், வாயில் வந்தபடி பேசி, விரட்டினேன் அப்பா! அதனால் என்ன நேரிட்டது தெரியுமா? எனக்குப் பேய் பிடித்திருக்கிறது நிச்சயப்படுத்தப்பட்டது. அதிலும், என்னைப் பிடித்திருக்கும் பேய், போக்கிரித்தனமானது, ஆபத்து தரக்கூடியது, சிக்கியவர்களின் உயிரைப் போக்கிவிடக்கூடியது என்று தீர்மானித்தார்கள். பூஜாரியின் யோசனைப்படி, என் கை கால்களைப் பலமான கயிற்றினால் கட்டிப்போட்டு விட்டார்கள்.
கண்ணா! என் கதியைக் கேள்! கவலையால் தாக்கப்பட்டேன். உன் அப்பாவின் சதி எண்ணத்தைத் தெரிந்து பதை பதைத்தேன். இதைப் பேயின் சேஷ்டை என்று கூறி, என்னை என் வீட்டிலேயே கைதியாக்கினார்கள். எந்த வீட்டிலே நான் இன்பமாக உலவி வந்தேனோ, அதே வீட்டிலே, கைகால்கள் கட்டப்பட்டு உருட்டப்பட்டேன்! மகனே என்னால் பொறுத்துக் கொள்ள முடியுமா? பலம் கொண்ட மட்டும் கூவலானேன். 'கட்டுகளை அவிழ்த்துவிடு! பாவி! படுமோசக்காரா! என்னைக் கொலையா செய்கிறாய்?" என்று கூவினேன். பேய் கூவுகிறது என்றனரே, தவிர, ஒரு பேதை அழுகிறாள் என்று யாரும் சொல்லவில்லை. என் கூக்குரல் வலுக்க வலுக்க, பூஜாரிகள் மாற்றி மாற்றி வரவழைக்கப்பட்டனர். கூச்சலிட்டால், பிரம்பால் அடிப்பது என்று ஏற்பாடு செய்துவிட்டான் பூஜாரி. அதனால் நான் பட்ட அடி கொஞ்சமல்ல! மனங் கொண்டமட்டும் அவரும் அடித்தார். வேப்பில்லை அடிப்பதாகப் பாசாங்கு செய்துகொண்டு, வெறிக்கக் குடித்துவிட்டு வந்த பூஜாரியும் அடித்தான். அவ்வளவு அடியும் அந்தப் பொல்லாத பேய் தாங்கிக் கொள்வதாக அந்த மனித உருவில் இருந்த பேய்கள் பேசிக்கொண்டன. நான் நோய் தாளாது நெளிவது கண்டு, அந்தப் பூஜாரி, "போகிறாயா! போகிறாயா! இன்னும் பூஜை தரட்டுமா?" என்று கூவுவான். அடி தாளமாட்டாமல், ஒரு நாள் நான் அவன் மேல் விழுந்து கடித்து விட்டேன்; கடித்தால், எனக்குக் கிடைத்த தண்டனையை இப்போது நினைத்தாலும் நடுக்கம் பிறக்கிறது; சூடு இட்டான் அந்தப் போக்கிரி. விளையாட்டுக்கு உன் அப்பா, எப்போதாவது கையைப் பிடித்துக் கொஞ்சம் பலமாக இழுத்து விட்டால்கூட, எனக்கு இரத்தம் கட்டிக் கொள்ளும். அப்படிப்பட்ட என் உடம்பிலே அந்தப் பாவி சூடிட்டான். உன் அப்பா தன் தலையில் அடித்துக் கொண்டார்.
4
[தொகு]என் அப்பாவும் உண்மையிலேயே என்னைப் பேய் பிடித்துக் கொண்டது என்றே நம்பினார். அவருக்குத் தெரிந்த மந்திர வாதிகள் வந்தனர். எவ்வளவு மடத்தனம் இருக்கிறது என்பது அந்தச் சமயத்திலே தெரிந்தது.
புதிதாக வருகிற ஒவ்வொரு பூஜாரியும், பழைய பூஜாரிக்கு ஒன்றுந் தெரியாது. வெறும் உருட்டல் மிரட்டலோடு சரி, மந்திரம் தெரியாது என்று கூறாமலிருப்பதில்லை. வாரக் கணக்கு வைப்பார்கள், பிறகு மாதமாகும், அவன் போய் வேறு பூஜாரி வர. இப்படி நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டேன். எனக்கு இந்த அனுபவம் ஏற்படுகிற வரையிலே நான்கூட, பேய் பிடிப்பது என்பது நிஜம்; மயக்கம் வருவது, உடல் உருகுவது, கண்டபடி பேசுவது, ஆடுவது இவைகளெல்லாம் பேயின் சேஷ்டை, இந்தத் தோஷம் மந்திரத்தால் போகும், என்றுதான் நம்பிக்கொண்டிருந்தேன். எனக்குப் பேய் பிடித்துவிட்டது என்று கூறிப் பித்தர்கள் சித்திரவதை செய்ய ஆரம்பித்த பிறகுதான், அது அவ்வளவும் புரட்டு அல்லது வெறும் மனமருள் என்று உணர்ந்தேன்.
உன் அப்பா எதை உத்தேசித்து, மெள்ள மெள்ளத் தன் கள்ளத்தனத்தால் என்னை இக்கதிக்கு ஆளாக்கினாரோ, அந்த உத்தேசம் ஈடேற வழி பிறந்தது. முதலிலே உற்றார் உறவினர், என்னைப் பிடித்திருக்கும் பேயை விரட்டுவதுதான் முக்கியம் என்று எண்ணி, அதற்கான வழி கூறி வந்தனர். பேய் இருந்தால் தானே விரட்ட! பேய் போக மறுக்கிறது என்று பிறகு அவர்கள் பேசிக்கொண்டு, வேறு விஷயத்தைக் கவனிக்கலாயினர். "பாவம் இந்தப் பேய் பிடித்தவளோடு, அவர் எப்படிக் குடித்தனம் செய்வார்? எவ்வளவு மனவேதனையாக இருக்கும் அவருக்கு?" என்று பச்சாத்தாபப்படவும், "என்ன செய்வது! எத்தனை காலத்துக்கு இந்தக் கோரத்தைக் காண்பது, வேறே ஒரு பெண்ணைக் கலியாணம் செய்துகொண்டால்தான் அவர் வாழ்வு கொஞ்சமாவது நிம்மதி அடையும்" என்று யோசனை கூறவும் "அவருக்குப் பெண் கொடுக்க யாருக்கு என்ன கசப்பு? யார் வேண்டுமானாலும் கொடுப்பார்கள்" என்று ஆதரவு மொழி கூறவும் "சோமசுந்தரம் முதலியார் மகள் சொர்ணம் இருக்கிறாள், விஸ்வநாத முதலியார் மகள் லோகா இருக்கிறாள்" என்று இடம் பார்த்துக் கூறவும், கடைசியில் "வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவானேன், ஏன் பத்து இடம் பார்க்க வேண்டும்; ரங்கத்தின் சொந்தத் தங்கை தங்கம் இருக்கிறாள், அவளையே முடித்துவிடலாமே" என்று தூண்டவுமாயினர்.
"எதற்கு" என்பதில் துவங்கி, "அப்படித்தான் செய்ய வேண்டும்" என்று முடித்தார் உன் அப்பா.
"இது என்ன பைத்தியக்காரத்தனம்" என்று முதலில் பேசிய என் தந்தை, "அப்படித்தான் செய்வோம்" என்று சம்மதம் தந்தார். தங்கம் தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். ஆனால் ஒரு நிபந்தனை வைத்தாள்; "நான் அத்தானை கலியாணம் செய்து கொண்டாலும், அப்பாவுடன் தான் இருப்பேன்" என்றாளாம். அந்தச் சாகசக்காரியின் சூது தெரியாதவர்கள், தங்கத்துக்கு அப்பாவை விட்டுப் பிரிய மனமில்லை என்று சிலரும், ரங்கத்தோடு இருக்கத் தங்கம் பயப்படுகிறாள், தன்னையும் பேய் பிடித்துக் கொள்ளுமோ என்று பயந்து என்று சிலரும் பேசிக் கொண்டனர். அவரை என்னிடமிருந்து பிரித்துவிட அவள் செய்த சூது அது என்பதை யார் தெரிந்து கொண்டார்கள்! நான் தான் பெண்ணல்லவே பேய்!
5
[தொகு]இரகசியமாகப் பேசுவது போய், என் காதில் படும்படியாகவே பேசலாயினர். ஜாதகப் பொருத்தம் கேட்கப்பட்டது. ஜோதிடர், உன் அப்பாவின் தயவில் வாழ்பவர். பொருத்தம் சரியாக இல்லை என்று கூறமுடியுமா அவரால்! என்னை மூன்று பேய்களிடம் ஒப்படைத்துவிட்டு, உன் அப்பா தங்கத்திடம் தன்னை ஒப்படைத்துவிடத் தீர்மானித்துவிட்டார்.
எது நேரிடுமென்று பயந்து வந்தேனோ அது நடப்பது உறுதி என்று ஏற்பட்ட உடனே, நான் ஒருவிதமான அமைதி பெற்றேன். இனி நம்மால் செய்யக்கூடியது ஒன்றுமில்லை; தங்கம் வெற்றி பெற்றுவிட்டாள்; இனியும் நாம் இது விஷயமாகச் சிந்தித்து சிதைய வேண்டியதில்லை என்று மனதை ஒருவாறு திருப்திப்படுத்திக் கொண்டேன்! ஒருநாள் பூஜாரி இல்லாத சமயமாகப் பார்த்து, நான் உன் அப்பாவை என் அருகே வருமாறு அழைத்தேன். கை கால்கள் கட்டப்பட்டே இருந்தன. அவர் அருகே வந்தார். என் கண்களில் நீர் தாரை தாரையாக வந்தது. அவர் என் பக்கத்தில் உட்கார்ந்தார். அவர் மனமும் கொஞ்சம் இளகியதுபோல் தெரிந்தது. அவருடைய முகத்தை நான் இமை கொட்டாமல் கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "தங்கம் ஜெயித்துவிட்டாள். இனி நான் உங்கள் கலியாணத்தைத் தடுக்கப் போவதில்லை. என்ன இருந்தாலும் அவள் என் தங்கைதானே. அவள் சுகப்படட்டும். நான் இனி அது விஷயமாகத் தலையிட மாட்டேன்; வீணாக வேதனைப் பட்டேன். விபரீதமான பழி ஏற்பட்டது எனக்கு. உங்களுக்கே தெரியும் எனக்குப் பேயும் இல்லை, பிசாசும் இல்லை. எல்லாம் மனக் குழப்பந்தான் காரணம் என்பது" என்று சொன்னேன். எப்படியோ அந்தச் சமயம் அவருடைய மனம் இளகிற்று. "வருத்தப்படாதே ரங்கம்" என்று தேற்றினார்.
என் கட்டுகளை அவிழ்த்தார்; ஏறக்குறைய இரண்டு வருஷங்களாக என்னை அவர் அன்புடன் நடத்தியதில்லை. அன்று அவர் என்னிடம் மிக அன்பாக நடந்துகொண்டார். புதுமணத் தம்பதிகள் போலவே நாங்கள் நடந்து கொண்டோ ம். இரண்டு வருஷக் கவலையையும் மறந்தேன்; களித்தேன். என் நாதனை மீண்டும் பெற்றேன். விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தோம்; விபூதித் தட்டும், வேப்பிலைக் கொத்தும் சீந்துவாரற்றுக் கூடத்திலே கிடந்தன. நாங்கள் படுக்கை அறையில் பல காலமாகப் பேச மறந்த விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். கடைசியில் அவர், "உன் அப்பாவின் மிட்டா இனி எனக்குத்தான். தங்கத்தை வேறு எவனாவது கலியாணம் செய்துகொண்டால் பாதி மிட்டா பறிபோகும். இப்போது ரங்கமும் தங்கமும் எனக்கு! மிட்டாவும் எனக்கு!" என்றார் வெற்றிச் சிரிப்புடன். "'நமக்கு' என்று கூடச் சொல்லக்கூடாதா?" என்று நான் கேட்டேன். "சந்தேகம் என்ன, நமக்குத்தான்! நான் மிட்டாதாரன் என்றால் உனக்குத் தானே பெருமை" என்றார். பொழுது புலர்ந்தது, என் வாழ்விலும் ஒரு புதுமலர்ச்சி பிறந்தது என்று நினைத்தேன். அன்று பலரும் என்னைப் பாராட்டினார்கள், பேய் நீங்கிவிட்டதென்று. மாலையில் பேய் மீண்டும் என்னைப் பிடித்துக் கொண்டது.