திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/குறிப்பேடு (நாளாகமம்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 33 முதல் 34 வரை
2 குறிப்பேடு (The Second Book of Chronicles)
[தொகு]அதிகாரங்கள் 33 முதல் 34 வரை
அதிகாரம் 33
[தொகு]யூதாவின் அரசன் மனாசே
[தொகு](2 அர 21:1-9)
1 மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு; அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
2 இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவரால் துரத்தியடிக்கப்பட்ட நாடுகளின் அருவருக்கத்தக்க செயல்களைப் பின்பற்றி, அவனும் ஆண்டவரின் பார்வையில் தீமையானதையே செய்தான். [1]
3 ஏனெனில் அவன் தன் தந்தை எசேக்கியா உடைத்தெறிந்த பலிபீடங்களை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகால்களுக்குப் பலிபீடங்களையும், அசேராக் கம்பங்களையும் நிறுவி, வான்படைகளைப் பணிந்து தொழுதான்.
4 "எனது பெயர் எருசலேமில் என்றென்றும் விளங்கும்" என்று சொன்ன ஆண்டவரின் இல்லத்தில் அவன் பலிபீடங்களை எழுப்பினான். [2]
5 ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.
6 பென்இன்னோம் பள்ளத்தாக்கில் அவன் தன் புதல்வரை நெருப்பில் சுட்டெரித்துப் பலியாக்கினான்; சகுனம் பார்த்து, குறிகேட்டு, பில்லி சூனியங்களைக் கடைப்பிடித்து, மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் புகலிடமளித்து, ஆண்டவரின் திருமுன் மிகவும் தீமையானதைச் செய்து அவருக்குச் சினத்தை உண்டாக்கினான்.
7 கடவுள் தாவீதிடமும் அவர் மகன் சாலமோனிடமும், "இஸ்ரயேலின் குலங்களில் நான் தேர்ந்தெடுத்துள்ள எருசலேமில் இருக்கும் இந்தக் கோவிலில் எனது பெயரை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்" என்றும்,
8 "மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இஸ்ரயேலர் சரியாய்க் கடைபிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன்" என்றும் கூறியிருந்தார்; அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான். [3]
9 இஸ்ரயேல் மக்களின் முன்பாக ஆண்டவர் அழித்த நாடுகள் செய்த தீமைகளைவிட யூதாவும், எருசலேம் வாழ் மக்களும் மிகுந்த தீமை செய்யவும் நெறி தவறவும் மனாசே காரணமாயிருந்தான்.
மனாசேயின் மனமாற்றம்
[தொகு]
10 ஆண்டவர் மனாசேயுடனும் மக்களுடனும் பேசிய போதிலும், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.
11 ஆதலால், ஆண்டவர் அசீரிய மன்னனின் படைத்தலைவர்களை அவர்களுக்கு எதிராக வரச் செய்தார்; அவர்கள் மனாசேயைச் சிறைப்பிடித்து, கொக்கிகள் இட்டு, வெண்கலச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு இழுத்துச் சென்றனர்.
12 அங்கே அவன் துன்புறுத்தப்பட்டபோது தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி மன்றாடி, தன் மூதாதையரின் கடவுள் முன் மிகுந்த வருத்தமுடன் தன்னையே தாழ்த்தினான்.
13 ஆண்டவர், அவன் மீண்டும் தம்மைக் கெஞ்சி மன்றாடியதால், அவனது வேண்டுதலைக் கேட்டார்; அதனால் எருசலேமுக்கும் நாட்டுக்கும் அவன் திரும்பி வருமாறு செய்தார். இதனால் ஆண்டவரே கடவுள் என்று மனாசே அறிந்து கொண்டான்.
14 இதன்பின்னர், தாவீதின் நகரில் கீகோன் பள்ளத்தாக்கின் மேற்புறம் தொடங்கி, மீன்வாயிலின் தொடக்கம் வரையிலும், வெளிப்புற மதிலை அவன் எழுப்பினான். இம்மதில் ஓபேலைச் சுற்றிலும் உயர்ந்திருக்கச் செய்தான். யூதாவிலுள்ள அரண்சூழ் நகர்களில் எல்லாம் படைத்தலைவர்களை நியமித்தான்.
15 மேலும், வேற்றுத் தெய்வங்களையும் சிலைகளையும் ஆண்டவர் இல்லத்திலிருந்து அகற்றினான்; ஆண்டவரின் இல்ல மலையிலும், எருசலேமிலும் தான் கட்டிய பலிபீடங்களைத் தகர்த்து, அவற்றை நகருக்கு வெளியே வீசியெறிந்தான்.
16 அவன் ஆண்டவரின் பலிபீடத்தை மீண்டும் கட்டி, அதனில் நல்லுறவுப் பலியையும் நன்றிப் பலியையும் செலுத்தினான்; இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரை வழிபடுமாறு யூதாவுக்குக் கட்டளையிட்டான்.
17 ஆயினும் மக்கள் தொழுகை மேடுகளிலேயே - தங்கள் கடவுளாம் ஆண்டவருக்காக மட்டும் - பலியிட்டு வந்தனர்.
மனாசேயின் இறப்பு
[தொகு](2 அர 21:17-18)
18 மனாசேயின் பிற செயல்களும், அவன் கடவுளுக்கு எழுப்பிய வேண்டுதலும், இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவர் பெயரால் திருக்காட்சியாளர் உரைத்த வாக்குகள் ஆகிய யாவும் இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
19 அவனது மன்றாட்டு, அதற்கு ஆண்டவர் செவிகொடுத்த பாங்கு, அவன் பாவங்கள், பற்றுறுதியற்ற தன்மை ஆகியவை பற்றியும், அவன் தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் நிறுவிய இடங்கள் பற்றியும் ஓசாய் என்பவரது குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.
20 மனாசே தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தன் அரண்மனையிலேயே அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆமோன் அரசனானான்.
யூதாவின் அரசன் ஆமோன்
[தொகு](2 அர 21:19-26)
21 ஆமோன் ஆட்சியேற்றபோது, அவனுக்கு வயது இருபத்திரண்டு; அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்தான்.
22 அவன், தன் தந்தை மனாசேயைப் போல் ஆண்டவர் திருமுன் தீமையானதையே செய்தான்; தன் தந்தையால் வார்க்கப்பட்ட சிலைகளுக்கு ஆமோன் பலி நிறைவேற்றி வழிபாடு செய்து வந்தான்.
23 ஆயினும், அவன் தந்தை போலன்றி, ஆண்டவர் திருமுன் தன்னையே தாழ்த்திக் கொள்ளாமல் தன் குற்றத்தை வளர்த்துக் கொண்டான்.
24 அவன் அலுவலர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து, அவனது அரண்மனையிலேயே அவனைக் கொலை செய்தனர்.
25 ஆனால், நாட்டுமக்கள் அரசன் ஆமோனுக்கு எதிராகச் சதிசெய்தவர் எல்லாரையும் கொன்றுவிட்டு, அவன் மகன் யோசியாவை அவனுக்குப்பதில் அரசனாக்கினர்.
- குறிப்புகள்
[1] 33:2 = எரே 15:4.
[2] 33:4 = 2 குறி 6:6.
[3] 33:7-8 = 1 அர 9:3-5; 2 குறி 7:12-18.
அதிகாரம் 34
[தொகு]யூதாவின் அரசர் யோசியா
[தொகு](2 அர 22:1-2)
1 யோசியா அரசரானபோது அவருக்கு வயது எட்டு; அவர் எருசலேமில் முப்பத்தோர் ஆண்டுகள் ஆட்சி செய்தார்.
2 அவர் ஆண்டவர் திருமுன் நேரியன செய்து, தம் மூதாதை தாவீதின் வழியிலேயே நின்று, நெறிமுறை வழுவாது ஒழுகினார். [1]
யோசியாவின் சீர்திருத்தங்கள்
[தொகு]
3 அவரது ஆட்சியின் எட்டாம் ஆண்டில், அவர் இன்னும் இளைஞராக இருந்தபோது, அவர் மூதாதை தாவீதின் கடவுளை நாடிச் செல்லலானார்; தமது ஆட்சியின் பன்னிரண்டாம் ஆண்டில், தொழுகை மேடுகள், அசேராக் கம்பங்கள், செதுக்கப்பட்ட சிலைகள், வார்க்கப்ட்ட சிலைகள் ஆகியவற்றை அகற்றி, யூதாவையும் எருசலேமையும் தூய்மையாக்கத் தொடங்கினார்.
4 அவர்தம் மேற்பார்வையில் பாகாலின் பலிபீடங்களை உடைத்தெறிந்தனர்; அதற்கு மேலிருந்த சிலைகளை அவர் உடைத்தார். மேலும், அசேராக் கம்பங்களையும், செதுக்கப்பட்டனவும் வார்க்கப்பட்டனவுமாகிய சிலைகளையும் தூள்தூளாக்கி, அவற்றிற்குப் பலியிட்டவர்களின் கல்லறைகளிலேயே வீசியெறிந்தார். [2]
5 அவர் அர்ச்சகர்களின் எலும்புகளை அவர்களின் பலிபீடங்களிலேயே சுட்டெரித்து, யூதாவையும் எருசலேமையும் தூய்மைப்படுத்தினார். [3]
6 மேலும் மனாசே, எப்ராயிம், சிமியோன், நப்தலி வரையிலுள்ள எல்லா நகர்களிலும் அவ்வாறே செய்தார்.
7 பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் உடைத்தெறிந்தார்; செதுக்கப்பட்ட சிலைகளைத் தூள்தூளாக்கினார். இஸ்ரயேல் நாட்டிலிருந்த எல்லாத் தூபப் பீடங்களையும் நொறுக்கியபின், அவர் எருசலேமுக்குத் திரும்பினார்.
சட்ட நூல் கண்டுபிடிக்கப்படல்
[தொகு](2 அர 22:3-20)
8 இவ்வாறு நாட்டைத் தூய்மையாக்கிய அவர்தம் ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில் அவர்தம் கடவுளாம் ஆண்டவரின் இல்லத்தைச் செப்பனிட அட்லியா மகன் சாப்பான், நகரின் ஆளுநர் மாசேயா, பதிவாளர் யோவாகு ஆகியோரை அனுப்பினார்.
9 மனாசே, எப்ராயிம், எஞ்சியிருந்த இஸ்ரயேல் ஆகியோரிடமும் மற்றும் யூதா, பென்யமின், எருசலேம் வாழ் மக்கள் அனைவரிடமிருந்தும் வாயிற் காவலராகிய லேவியர் சேகரித்த பணத்தை அவர்கள் கோவிலுக்குக் கொண்டு வந்தனர்; அவற்றைத் தலைமைக் குரு இல்க்கியாவிடம் ஒப்படைத்தனர்.
10 அவர்கள் அதை ஆண்டவரின் இல்ல மேற்பார்வையாளரிடம் அளித்தனர். அவர்களோ அதை பணிசெய்வோரிடம் கோவிலைச் செப்பனிட்டுச் செம்மைப்படுத்துமாறு கொடுத்தனர்.
11 அவர்களே தச்சருக்கும் கொத்தருக்கும் பணம் கொடுத்தனர்; யூதாவின் அரசர்கள் அழித்துவிட்ட வீடுகளுக்காக வாங்கப்பட்ட செங்கற்கள், இணைப்பு மரங்கள் ஆகியவற்றுக்காகவும் பணம் கொடுத்தனர்.
12 வேலையாள்கள் நேர்மையோடு வேலை செய்தனர்; இப்பணியை மேற்பார்வை செய்ய மெராரியின் புதல்வர்களான யாகத்து, ஒபதியா என்ற லேவியரும், கோகாத்தியரான செக்கரியாவும் மெசுல்லாமும் நியமிக்கப்பட்டிருந்தனர். இசைக்கருவிகளை மீட்டுவதில் திறமைமிக்க லேவியர் எல்லாரும்,
13 கூலியாள்களுக்குப் பொறுப்பாளராகவும், தனித்தனிப் பணி செய்யவும் அனைவருக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தனர்; லேவியர் சிலர் எழுத்தரும் அலுவலரும் வாயிற்காப்பாளருமாகவும் இருந்தனர்.
14 ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை வெளியே எடுத்தபோது, மோசே வழியாக அளிக்கப்பட்ட ஆண்டவரின் திருச்சட்டநூலை குரு இல்க்கியா கண்டு பிடித்தார்.
15 அப்பொழுது இல்க்கியா எழுத்தராகிய சாப்பானைப் பார்த்து, "இதோ, நான் ஆண்டவரின் இல்லத்தில் திருச்சட்ட நூலைக் கண்டெடுத்தேன்" என்று கூறி அவர் அந்த நூலைச் சாப்பானிடம் ஒப்படைத்தார்.
16 சாப்பான் அந்நூலை அரசரிடம் கொண்டுவந்து, அவரை நோக்கி, "உம் அலுவலர்களுக்கு நீர் கட்டளையிட்டவை அனைத்தையும் அவர்கள் செய்கிறார்கள்;
17 ஆண்டவரின் கோவிலில் சேர்ந்த பணத்தை அவர்கள் எடுத்து அதிகாரிகள் கையிலும் பணியாளர்கள் கையிலும் ஒப்படைத்தனர்" என்றார்.
18 எழுத்தர் சாப்பான் மீண்டும் அரசரைப் பார்த்து, "குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்தார்" என்று கூறி, அதனை அரசருக்குப் படித்துக் காட்டினார்.
19 அரசர் திருச்சட்ட நூலைப் படிக்கக் கேட்டபோது தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டார்.
20 பின்னர், இல்க்கியா, சாப்பான் மகன் அகீக்காம், மீக்காவின் மகன் அப்தோன், எழுத்தர் சாப்பான், அரச அலுவலர் அசாயா ஆகியோரைப் பார்த்து அரசர்,
21 "கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் எழுதியுள்ளவாறு, நீங்கள் சென்று எனக்காகவும் இஸ்ரயேல் யூதாவில் எஞ்சியுள்ளோருக்காகவும் ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில் இந்நூலில் எழுதியுள்ளவாறு நம் மூதாதையர் ஆண்டவரின் வாக்கிற்கிணங்க நடக்காததனால் நம்மேல் ஆண்டவர் கடும்சினம் கொண்டுள்ளார்" என்று கூறினார்.
22 இல்க்கியாவும், அரசரைச் சார்ந்த மற்றவர்களும், அசுராவின் பேரனும் தோக்காத்தின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்றனர்; எருசலேமின் இரண்டாம் தொகுதியில் குடியிருந்த அவரிடம் இதுபற்றிப் பேசினர்.
23 அவர் அவர்களை நோக்கி, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என்னிடம் உங்களை அனுப்பியவரிடம் நீங்கள் சொல்லுங்கள்:
24 ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இடத்தின்மீதும், இதில் வாழ்வோர்மீதும் தீங்குகளை யூதாவின் அரசர் முன் படிக்கப்பட்ட நூலின் வார்த்தைகளில் கண்ட அனைத்துச் சாபங்களையும் வரச் செய்வேன்.
25 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் கைவினையான அனைத்துச் சிலைகளாலும் எனக்குச் சினமூட்டினர்; வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் நான் கொண்ட சினம் கனன்று எரியும்; அதைக் தணிக்க இயலாது.
26 ஆண்டவரின் திருவுளம் தெரிந்து வருமாறு உங்களை அனுப்பிய யூதாவின் அரசனிடம் நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: நீ கேட்ட வார்த்தைகளைப் பற்றி இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
27 இந்த இடத்திற்கும் இதில் வாழ்வோருக்கும் எதிரான அவர்தம் வார்த்தைகளை நீ கேட்டு, மனம்நைந்து, கடவுளுக்குமுன் உன்னைத் தாழ்த்திக் கொண்டாய்; தாழ்ந்து நின்ற நீ உன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு என் திருமுன் அழுததனால், உன் வேண்டுதலுக்கு நான் செவிகொடுத்துள்ளேன்.
28 ஆதலால், இவ்விடத்தின் மீதும் இதில் வாழ்வோர் மீதும் நான் வரச் செய்யவிருக்கும் அனைத்துத் தீமைகளையும் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன்; நீயும் மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செவ்வாய்" என்றார். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.
திருச்சட்டத்திற்குக் கட்டுப்பட யோசியாவின் உடன்படிக்கை
[தொகு](2 அர 23:1-20)
29 யூதா, எருசலேம் வாழ் பெரியோர்கள் எல்லாரையும் அரசர் ஒன்று திரட்டினார்.
30 பின்னர், அரசர் ஆண்டவரின் இல்லத்திற்குச் சென்றார், அவருடன் யூதா, எருசலேம் மக்கள் யாவரும், அனைத்து குருக்களும் லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லா மக்களும் சென்றனர். அரசரும், ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுத்த உடன்படிக்கை நூல் முழுவதையும் அவர்கள் எல்லாரும் கேட்கும்படி வாசித்தார்.
31 பின்பு, அரசர் தம் இடத்தில் நின்றுகொண்டு, ஆண்டவரின் கட்டளையையும் சான்றுகளையும் ஒழுங்குமுறைகளையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார்.
32 அவர் எருசலேமிலும் பென்யமினிலும் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவ்வாறே செய்யுமாறு பணித்தார்; எருசலேம் வாழ் மக்கள் யாவரும் தங்கள் மூதாதையரின் கடவுளாம் இந்தக் கடவுளின் உடன்படிக்கையின்படியே வாழ்ந்தனர்.
33 பின்னர், யோசியா இஸ்ரயேலரின் எல்லா அருவருப்புகளையும் அவர்களுக்குரிய நாடு முழுவதிலுமிருந்தும் அகற்றினார்; இஸ்ரயேலின் இருந்தவர் அனைவரும் அவர்களின் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே வழிபடச் செய்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் பின்பற்றி நடக்கத் தவறவேயில்லை.
- குறிப்புகள்
[1] 34:1 = எரே 3:6.
[2] 34:4 = 2 அர 21:3; 2 குறி 33:3.
[3] 34:5 = 1 அர 13:2.
(தொடர்ச்சி): குறிப்பேடு - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 35 முதல் 36 வரை