உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

நற்றிணை தெளிவுரை


.



211. குருகும் தாழைப் போதும்!

பாடியவர்: கோட்டியூர் நல்லந்தையார். திணை : நெய்தல். துறை: வரைவு நீட, ஒருதலை ஆற்றாளாம் என்ற தோழி, சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.

[(து-வி.) களவொழுக்கம் மேற்கொண்டு ஒழுகிவரும் தலைவனின் உள்ளத்திலே, 'தலைவியை விரைந்து முறையாக மணஞ்செய்துகொள்ளல் வேண்டும்' என்னும் உணர்வை எழுப்பக் கருதுகின்றாள் தோழி. ஆங்கே, ஒருபுறமாக வந்து நின்றானாகிய தலைவன் கேட்டு உணருமாறு, தான் தலைவியிடம் கூறுவதுபோல இவ்வாறு சொல்லுகின்றாள்.)

யார்க்குநொந்து உரைக்கோ யானே! ஊர்கடல் ஓதஞ் சென்ற உப்புடைச் செறுவில் கொடுங்கழி மருங்கின் இரைவேட் டெழுந்த கருங்கால் குருகின் கோளுய்ந்து போகிய முடங்குபுற இறவின் மோவாய் ஏற்றை எறிதிரை தொகுத்த எக்கர் நெடுங்கோட்டுத் துறுமடல் தலைய தோடுபொதி தாழை வண்டுபடு வான்போது வெரூஉம்

துறைகெழு கொண்கன் துறந்தனன் எனவே.

5

сл

தெளிவுரை : ஊர்ந்து செல்லுகின்ற கடலினது பெருக் கானது சென்று பாய்தலினாலே உப்புப்படுதலை உடைய வான உப்புப் பாத்திகளுள், வளைந்த கழியிடத்தேயுள்ள மீன்களை வேட்டையாடி உண்ணக் கருதியதாகி எழுந்த, கருங்கால்களையுடைய நீர்க்குருகின் குத்துக்குத் தப்பிப் பிழைத்தோடிய, வளைந்த மேற்புறத்தைக் கொண்ட இறாமீனின் மீசையுடைய ஆணானது, மோதுகின்ற அலைகளாலே கொழிக்கப்பெற்ற எக்கர்மணலினது, நெடுங் கரைப் பகுதியிடத்தே வளர்ந்துள்ள நெருங்கிய மடலிடத்தே இலைகளாலே பொதியப்பட்டு விளங்கும் தாழையினது, வண்டு மொய்க்கும் வெண்மையான பூம்போதைக் கண்டு வெண் குருகோ' என அச்சமுறும். இத்தகைய கடற்கரைக்கு உரியவனாகிய நம் தலைவன் நம்மைத் துறந்து போயினன் என்று, யான்தான். யாவர்பாற் சென்று மனம்நொந்து உரைப்பேன் கொல்லோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/38&oldid=1641373" இலிருந்து மீள்விக்கப்பட்டது