6.நாகாஸ்திரப் படலம்

விக்கிமூலம் இலிருந்து

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்களின்[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்[தொகு]

ஓர் அங்கதக் காவியம்[தொகு]

(வரிகள்: 01-50)[தொகு]

இம்முறை யாக இருக்கும் காலம்
கணவரை ஒருநாள் மருமகன் கண்டு
வழக்குப் பேச வந்தான் அம்மா!
வந்தவன்,
அம்மான் என்றோர் அடக்கமில் லாமல்,
மாமன் என்றோர் வணக்கமில் லாமல்
கூறின மொழியெலாம் கூறுவேன் அம்மா!
“ஆத்தாள் செத்த அடியந் திரச்செலவு
ஆயிரம் பணத்துக் கதிகம் வருமோ?
விளையை நிலமாய் வெட்டித் திருத்த (10)
பனையை விற்ற பணம்போ தாதோ?
கண்ணி யம்மை கலியா ணத்தில்
கால்கா சுமக்குக் கைப்பொறுப் புண்டோ?
மருமகள் என்றொரு பஞ்சா டிப்பொன்
குச்சா கிலும்நீர் கொடுத்ததும் உண்டோ?
ஆண்டு தோறும் ஆதா யத்தில்
ஆயிரம் ரூபாய்க் கையம் இல்லையே!
ஏழாண் டாக இந்த மிச்சம்
எங்கே போச்சுது? என்னடா அப்பா!
கேட்பா ரில்லையோ, கேள்வியு மில்லையோ! (20)
நெட்ட ரமாவும் நெடுங்கண் வயலும்
யாரிடம் கேட்டுநீர் ஈடு கொடுத்தீர்?
கடனுக் கென்ன காரணம்? சொல்லும்.
ஊரில் காரிய விசாரம் உனக்கு
வேண்டாம் என்றேன்: ‘விடுவனோ’ என்றீர்
கணக்கன் உமது கழுத்து முறிய
எல்லாச் சுமைகளும் ஏற்றிவைத் ததனால்
அம்மன் வகைக்கீ ராயிரம் ரூபாய்
தெண்ட மிறுத்த கதைதெரி யாதோ?
உச்சிக் கொடைக்குப் பிச்சி வெள்ளையும் (30)
கொழுந்தும் தாழம் பூவும் கொண்டு
வரவில்லை யென்றுநீர் வைரவன் மகளை
எட்டி யடித்த எதுவி னாலே
எத்தனை ரூபாய் வாரி இறைத்தீர்?
இதுநாள் வரையிலும் எங்கட் காக
எதைநீர் செய்தீர்? எதைநீர் தந்தீர்?
மக்கட் கெல்லாம் வாரிக் கொடுத்தீர்.
ஒருபூ வாகிலும் உழக்கு நெல்லு
பொலியள விந்தா கொண்டு போஎனத்
தந்ததும் உண்டோ? சரிசரி, இன்னும் (40)
உள்ள நிலங்களை ஒவ்வொன் றாக
ஒற்றி கொடுத்திடும், மலரணை ஓலைகள்
எத்தனை வேண்டுமோ எழுதியும் வைத்திடும்!
பேர்க்கூலிப் பிரமாணம் செய்யும்,
இட்ட தானம் எழுதிக் கொடுத்திடும்
வேண்டு மானால் விலையும் கொடுத்திடும்
மனைவி பேர்க்கும் மக்கள் பேர்க்கும்
உகந்துடை மைப்பிரமாணம் ஒன்றுநீர்
இருக்கும் போதே எழுதியும் வைத்திடும்,
மக்களை வீட்டில் வாழ வைத்திடும்; (50)

(வரிகள்: 51-100)[தொகு]

எங்களைத் தெருவில் இறக்கி விட்டிடும்
ஆசை அங்கே அன்பும் அங்கே
பூசை இங்கே! போசனம் இங்கே!
ஆரைக் கேட்டுநீர் ஐந்துகல் யாணம்
அடுக்கடுக் காகச் செய்தீர்? ஐயா! (55)
பட்டப் பெயரும் பஞ்சகல் யாணிப்
பிள்ளை யென்றுநீர் பெற்று விட்டீரே!
அன்னியர் பொருளை அபகரிப் பதிலும்
ஊரார் பொருளை உண்டுவாழ் வதிலும்
கைதேர்ந் தவர்கள் காரண வர்களே! (60)
கள்ளர் மறவர் கணக்கரும் இவருக்கு
எள்ளள வேனும் இணையா வாரோ!
கன்னக் கோலும் கையில் படாமல்
எழுது கோலும் இறகும் எடாமல்
இரவும் பகலும் இஷ்டம் போலத்
திருடும் திறமிச் சீமையில் எவருக்(கு)
உண்டு? இதனை உணர்பவ ருண்டோ?
கள்ளன் கஜானாக காவலன் ஆனால்
கொள்ளை யடிப்பில் குறைவைப் பானோ?
செல்வ மெல்லாம் சிதையக் காரணம்,
சிறுவர் சோம்பித் திரியக் காரணம்
மங்கையர் கண்ணீர் வடிக்கக் காரணம்
வழக்குகள் மேன்மேல் வளரக்காரணம்
குடும்ப நிலைமை குலையக் காரணம்
நாஞ்சில் நாட்டுக்கோர் நாச காரணம் (75)
எல்லாம் நீங்கள் என்றறிந் தல்லவோ
காரண வர்(எ)னும் காரணப் பெயரைத்
தந்தவர் உமக்கும் அந்தக் காலமே
காரணத் தீனம் கடிய தீனம்,
கண்டூ ரத்தில் மருந்து கருத்தாய்க்
கொடுத்தா லன்றிக் குணமா காது
போகர் மச்ச முனிபுலிப் பாணியர்
கருணா னந்தர் கருவூர்த் தேவர்
அகத்தியர் முதலிய ரிஷிகள் அனைவரும்
வைத்தியம் மந்திர வாதம் இவற்றைப் (85)
பாட்டுக் கணக்காய்ப் பாடி வைத்தனர்
ஏட்டுக் கணக்காய் எழுதி வைத்தனர்
இவரும் காரணத் தீனம்இன் னதென்ற
அறிந்தொரு குளிகை லேகியம் அல்லது
சூரணம் அதற்குச் சொன்னதும் உண்டோ? (90)
அஷ்டாங் கிருத வைத்தியர், ‘ஐயா
எல்லாப் பிணியிலும் பொல்லாப் பிணியிது.
எங்கள் நாட்டில் இப்பிணி யாலே
வருந்தா திருக்கும் மனிதர் சிலரே
இதுநாள் வரையும் இப்பிணி தீர
கஷாய மொன்று கண்டறிந் தவரிலை
வயக்கரை மூகம் வைத்திய ரத்தினமும்
எம்மா லாகா தென்றுகை விட்டிடில்
பிணியின் கொடுமை பேசவும் வேண்டுமோ?’
என்று கூறி யிருந்தனர், என்செய்வார்? (100)

(வரிகள்: 101-121)[தொகு]

இங்கிலீஷ் டாக்டரும் இதற்கு மருந்துகள்
இருப்ப தாக இயம்பிடக் காணோம்.
இப்பிணி போல வெறுப்பை எழுப்பும்
பிணியிவ் வுலகில் பிறிதொன் றில்லை.
ஈக்களும் தேடி யீட்டிய தேன்போல் (105)
பலரும் பலநாள் பாடு பட்டுக்
கூட்டி வைத்த குடும்ப முதல்இத்
தீனம் கொண்டவர் தீண்டுவ ரேல்உடன்
ஆனை தின்ற விளாம்பழ மாம்அதற்கு
ஐய மில்லை, அறியார் யாரே! (110)
பாரும் பாரும் பத்திர மாயிரும்!
குடும்ப தோஷி என்றுமைக் கொண்டு
கோர்டில் கேஸு கொடுப்பேன் பாரும்
உண்மை யாக உம்மையும் அதனில்
சாட்சி போட்டு சமன்ஸை அனுப்பி (115)
வரவில்லை யானால் வாரண்டும் அனுப்பி
(காலரை செலவும் காரிய மில்லை)
கூட்டில் ஏற்றிக் குறுக்கு மறுக்காய்
‘கிராஸும்’ கேட்டு கேவல மாக்கி
விடவிலை யானால், வீர பத்திரன் (120)
மகனென் றென்னை மதிக்கவே வேண்டாம்.”


ஆறாவது, நாகாஸ்திரப் படலம் முற்றியது[தொகு]

பார்க்க[தொகு]

நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்
மருமக்கள்வழி மான்மியம் - கவிமணி
1.குலமுறை கிளத்துப் படலம்
2.மாமி அரசியற் படலம்
3.கேலிப் படலம்
4.கடலாடு படலம்
5.பரிகலப் படலம்
7.கருடாஸ்திரப் படலம்
8.வாழ்த்துப் படலம்
9.கோடேறிக் குடிமுடித்த படலம்
10.யாத்திரைப் படலம்
11.கும்பியெரிச்சல் படலம்
"https://ta.wikisource.org/w/index.php?title=6.நாகாஸ்திரப்_படலம்&oldid=443600" இலிருந்து மீள்விக்கப்பட்டது