உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
எஸ்தர் அரசி விருந்தளிக்கிறார். ஓவியர்: யோகான் ஃகைசு (1640-1704) ஆண்டு: 1685. காப்பிடம்: செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

எஸ்தர் (The Book of Esther

[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7

[தொகு]


1 மன்னரும் ஆமானும் அரசி எஸ்தர் வைத்த விருந்துக்குச் சென்றனர்.
2 மன்னர் இரண்டாம் நாள் விருந்தில்
திராட்சை மதுவை மீண்டும் அருந்துகையில், எஸ்தரிடம்,
"எஸ்தர் அரசியே, உன் விண்ணப்பம் யாது? அது உனக்கு அளிக்கப்படும்.
நீ வேண்டுவது என் அரசின் பாதியே ஆனாலும் அது உனக்குக் கொடுக்கப்படும்" என்றார்.


3 அப்பொழுது, அரசி எஸ்தர்,
"உம் கண்களில் எனக்குத் தயவுகிடைத்திருப்பின், அரசே!
உமக்கு நலமெனப்பட்டால், எனது விண்ணப்பத்திற்கிணங்க
எனக்கும் என் வேண்டுகோளின்படி என் மக்களுக்கும்
உயிர்ப்பிச்சை அருள்வீராக!
4 என் மக்களும் நானும் கொலையுண்டு அழிந்து ஒழிந்து போகும்படி
விலை பேசப்பட்டிருக்கிறோம்;
ஆண்களும் பெண்களுமாக நாங்கள் அடிமைகளாய் விற்கப்பட்டிருந்தால் கூட
நான் மௌனமாய் இருந்திருப்பேன்.
ஆனால் மன்னருக்கு உண்டாகும் இழப்பிற்கு
எதிரியால் ஈடுசெய்ய முடியாது" என்று பதிலிறுத்தார்.


5 மன்னர் அகஸ்வேர் அரசி எஸ்தரை நோக்கி,
"இப்படிச் செய்தவன் எவன்?
தன் இதயத்தில் செருக்குற்று
இவ்வாறு செய்யும்படி நினைத்த அவன் எங்கே?" என் வினவினார்.
6 "எதிரியும் வஞ்சனகனுமாகிய மனிதன் இந்த ஆமானே;
இவனே அந்தத் தீயவன்! என்று எஸ்தர் பதிலுரைத்தார்.
இது கேட்ட ஆமான், மன்னருக்கும் எஸ்தருக்கும் முன்பாகப் பேரச்சம் கொண்டான்.
7 மன்னர் கடுஞ்சினமுற்று,
விருந்தில் திராட்சைமது அருந்துவதை விட்டுவிட்டு,
எழுந்து அரண்மனைப் பூங்காவில் நுழைந்தார்.
தனக்குத் தீங்கிழைக்க மன்னர் முடிவு செய்துவிட்டார் என்று கண்ட ஆமான்
அரசி எஸ்தரிடம் தன் உயிருக்காய் மன்றாட எண்ணிப் பின்தங்கினான்.
8 மன்னர் அரண்மனைப் பூங்காவிலிருந்து
விருந்து நடைபெற்ற இடத்திற்குத் திரும்பிய பொழுது,
எஸ்தரின் மெத்தையில் ஆமான் வீழ்ந்து கிடக்கக் கண்டார்.
"என் மாளிகையில் நான் இருக்கும் போதே, இவன் அரசியைக் கெடுப்பானோ?"
என்ற சொற்கள் மன்னரின் வாயினின்று வெளிப்பட,
காவலர் ஆமானின் முகத்தை மூடிவிட்டனர்.
9 அச்சமயம், மன்னருக்குப் பணிவிடை செய்த
அர்போனா என்ற அலுவலர் மன்னரை நோக்கி,
"அதோ! ஆமானின் வீட்டெதிரே
மன்னருக்கு நல்லது செய்த மொர்தக்காயைத் தூக்கிலிட
ஆமான் நாட்டிய ஐம்பது முழத் தூக்குமரம்!" என்றார்.
அதற்கு மன்னர், "அதிலேயே அவனைத் தூக்கிலிடுங்கள்!" என்றார்.
10 மொர்தக்காயைக் தூக்கிலிட அவன் நாட்டிய தூக்கு மரத்திலேயே
ஆமான் தூக்கிலிடப்பட்டான்.
மன்னரின் சீற்றமும் தணிந்தது.


அதிகாரம் 8

[தொகு]

தம்மைக் காத்துக்கொள்ளும்படி எஸ்தர் யூதரைத் தூண்டல்

[தொகு]


1 சில நாள்களில் மன்னர் அகஸ்வேர்,
யூதரின் பகைவனான ஆமானின் இல்லத்தை அரசி எஸ்தருக்கு வழங்கினார்.
மொர்தக்காய்க்கும் தமக்கும் உள்ள உறவை எஸ்தர் வெளிப்படுத்த,
அவரும் மன்னரின் முன்னிலைக்கு வந்தார்.
2 ஆமானிடமிருந்து கழற்றப்பெற்ற தம் கணையாழியை
மன்னர் எடுத்து மொர்தக்காய்க்கு அளித்தார்.
எஸ்தரும் மொர்தக்காயை ஆமான் வீட்டின் பொறுப்பாளராக நியமித்தார்.


3 மீண்டும் எஸ்தர், யூதருக்கு எதிராய்ச் சதிசெய்த தீயோன்
ஆகாகியானான ஆமானின் திட்டங்கள் யாவும் குலைந்து போகுமாறு,
மன்னரின் காலடிகளில் வீழ்ந்து, அழுது மன்றாடி, அவரது தயவினை நாடினார்.
4 உடனே மன்னர் தம் பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்ட,
அவர் எழுந்து மன்னர்முன் நின்றார்.
5 அவர், "மன்னருக்கு இது நலமெனப்பட்டால்,
அவர்தம் கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால்,
அரசருக்கு இது சரியெனத் தோன்றினால்,
நானும் உம் பார்வையில் இனியவளெனப்பட்டால்,
மன்னரின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள யூதர் அழிந்துபோகுமாறு
வஞ்சனையாய்த் திட்டமிட்ட
அம்மதாத்தின் மகனும் ஆகாகியனுமான ஆமான் எழுதிய மடல்கள் அனைத்தையும்
திருப்பி அனுப்பும்படி எழுதுவீராக!
6 என் மக்களுக்கு நேரிடும் தீங்கினையும்,
என் உறவினரின் படுகொலையினையும் நான் எவ்வாறு காண இயலும்?" என்று கூறினார்.


7 அப்பொழுது மன்னர் அகஸ்வேர்,
அரசி எஸ்தரையும் யூதரான மொர்தக்காயையும் நோக்கி,
"இதோ! ஆமானின் இல்லத்தை எஸ்தருக்கு அளித்தேன்;
யூதருக்கு எதிராய்க் கை நீட்டிய ஆமான் தூக்கிலிடப்பட்டான்.
8 மன்னரின் பெயரால் எழுதப்பட்டு,
அவர் கணையாழியின் முத்திரை பதிக்கப்பெற்ற
"எம்மடலும் திருப்பிப் பெற இயலாதபடியால்,
உங்கள் பார்வையில் நலமெனத் தோன்றும் அனைத்தையும்
மன்னரின் பெயரால் நீங்கள் யூதருக்கு எழுதி,
மன்னரின் கணையாழியால் முத்திரையிடுங்கள்" என்று கூறினார்.


9 சீவான் என்ற மூன்றாம் மாதத்தில், இருபத்து மூன்றாம் நாளன்று
மன்னரின் எழுத்தர்கள் வரவழைக்கப்பட்டனர்.
மொர்தக்காய் இட்ட ஆணையின்படியே
யூதர் அனைவருக்கும் இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரையிலுள்ள
நூற்றிருபத்தேழு மாநிலங்களின் குறுநில மன்னர்களுக்கும்,
மாநிலங்களின் ஆளுநர் அனைவர்க்கும்
மாநிலத் தலைவர் அனைவருக்கும்
அவர்தம் மக்களின் வரிவடிவ வாரியாகவும்,
மொழி வாரியாகவும் மடல்கள் வரையப் பெற்றன.
10 மன்னர் அகஸ்வேர் பெயரால் எழுதப் பெற்று,
அரச கணையாழி முத்திரையிடப்பெற்ற இம்மடல்கள்,
அரசக் கொட்டிலைச் சார்ந்த
அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும்
விரைவு அஞ்சலர் மூலம் அனுப்பப்பட்டன.


11 ஒவ்வொரு நகரிலும் உள்ள யூதர் ஒன்றுதிரண்டு தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும்,
அவர்களையும் அவர்களின் குழந்தைகள், பெண்கள் ஆகியோரையும் தாக்கக்கூடிய
எந்த நாட்டையும் மாநிலத்தையும் சார்ந்த படைகளை அழித்துக் கொன்று ஒழிக்கவும்,
அவற்றின் உடைமைகளைக் கொள்ளையிடவும்,
தேவையான அதிகாரத்தை மன்னரின் பெயரால் எழுதப்பட்ட இம்மடல்கள் அளித்தன.
12 மன்னர் அகஸ்வேரின் மாநிலங்கள் அனைத்திலும்,
அதார் என்ற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாம் நாளன்று,
ஒரே நாளில் இவ்வாறு செய்வதென அறிவிக்கப்பட்டது.
13 அம்மடலின் நகல் ஒவ்வொரு மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும்
சட்டமாக அறிவிக்கப்பட்டது.
யூதரும் தம் பகைவரைப் பழிதீர்க்க இந்நாளில் ஆயத்தமாகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
14 அரசப் பணிக்குரிய புரவிகள் மீது அமர்ந்தேகும் விரைவு அஞ்சலர்
மன்னரின் ஆணையால் ஏவப்பட்டு,
வெளி மாநிலங்களுக்கு விரைந்தனர்.
சூசான் அரண்மனையிலும் இச்சட்டம் அறிவிக்கப்பட்டது.


15 நீலமும் வெண்மையுமான அரச உடையணிந்து,
பெரிய பொன் மகுடம் சூடி, கருஞ்சிவப்பு மென்துகில் அணிந்தவராய்
மொர்தக்காய் மன்னரின் முன்னிலையிலிருச்து வெளியேற,
சூசான் நகர் மகிழ்ந்து களிகூர்ந்தது.
16 இச்செய்தி யூதருக்கு நம்பிக்கை ஒளியாகவும்,
மகிழ்வுக்கும், அக்களிப்புக்கும் மதிப்பிற்கும் உரிய ஒன்றாகவும் விளங்கியது.
17 ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு நகரிலும்,
எங்கெல்லாம் மன்னரின் இந்த வாக்கும் நியமமும் எட்டினவோ,
அங்கெல்லாம் வாழ்ந்த யூதர் மகிழ்ந்து களிகூர்ந்தனர்.
அந்நாள் விருந்தாடும் விழா நாளாக விளங்கியது.
யூதரைப்பற்றிய அசச்ம் பிறர்மீது விழ,
நாட்டு மக்களில் பலர் யூதாராயினர்.


(தொடர்ச்சி): எஸ்தர்:அதிகாரங்கள் 9 முதல் 10 வரை