ரங்கோன் ராதா/அத்தியாயம் 2

விக்கிமூலம் இலிருந்து
அத்தியாயம் 2

"ராதாவை, நான் பார்க்க வேண்டும்; பழக வேண்டும்; தூய்மையாக நடந்து கொள்ள வேண்டும்; காதல் பிறக்க வேண்டும்; கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் நான் ஒப்புக் கொண்டால் மட்டுமே, அந்த விசித்திரமான கதையைக் கூறுவாயா? ஏன் நாகசுந்தரம்! அதுதானே உன் கட்சி?" என்று நான் கேட்டேன். "ஆமாம். இன்னும் ஒரு நிபந்தனை" என்று நாகசுந்தரம் சொன்னான். "கதையை யாரிடமும் சொல்லக்கூடாது" என்றான். "மேலும் மேலும் விந்தையாக இருக்கிறது" என்றேன் நான். "விசித்திரம்! விந்தை! விபரீதம் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லு. எனக்குக் கவலை எல்லாம் ராதா சுகப்பட வேண்டும்; என் தங்கையைக் கண்ணியம் தெரிந்த காதலனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்" என்றான். "என்னடா நாகு! திடீரென்று இப்படி ஒரு இலட்சியவாதி போல, ஆவேசம் கொண்டவன் போலாகி விட்டாய். இவ்வளவு இலட்சியம் பேசும் உன்னையே கேட்கிறேன், விளையாட்டுக்கல்ல, உண்மையாகவே! ஒரு பெண்ணைப் பற்றிய கதையைத் தெரிந்து கொள்வதற்காக, அவளைக் கலியாணம் செய்து கொள்வதாக முன்கூட்டியே வாக்களிப்பது எந்த இலட்சியத்துக்கு உகந்தது! கேட்டால் கூட சிரிப்பார்கள்!" என்றேன். நாகசுந்தரம் என் தோள்மீது கை வைத்துக் கொண்டு, துயரத்துடன் சொன்னான். "உன்னைத் தவிர வேறு யாரிடம் பரந்தாமா நான் உண்மையைச் சொல்வேன். நீ ஊரிலே உலாவும் பல இளைஞர்கள் போலப் பழைய நம்பிக்கைக்காரனல்ல. ஜாதி குலபேதத்தை அடியோடு மறுப்பவன். உனக்குக் குடும்பத்திலேயும் தொல்லை கிடையாது. உன் தகப்பனார் அறிவாளி, முற்போக்கான கொள்கை உடையவர். ஆகையால் ராதாவை மணம் செய்து கொள்வதற்கு ஒரு தடையும் ஏற்படாது. உனக்குச் சம்மதமாகிவிட்டால், பிறகு எல்லாம் இனிமையாகவே முடியும். ஒன்று மட்டும் முன்னதாகவே சொல்கிறேன். ராதா என் தங்கை! அதை உலகம் ஏற்காது! என் தங்கை ராதா என்று தெரிந்ததும், நான் ராதாவுக்காக எதையும் செய்யும் துணிவு பெற்றேன். உண்மையை மறைப்பானேன். பரந்தாமா! ராதாவுக்காக நான் திருடனானேன். என் தகப்பனாரின் வைரக்கடுக்கனை, மார்வாடிக் கடையில் அடகு வைத்துப் பணம் வாங்கித்தான் ராதாவைக் கல்லூரியில் சேர்த்தேன். ராதாவுக்காக இனியும் எதுவும் செய்வேன். ஆனால் உலகிலே, அவளை ஏற்றுக்கொள்ள, உன் போன்ற உத்தமன் முன் வந்தால் தான் முடியும் பரந்தாமா! ராதா, ஒரு விபச்சாரியின் மகள். ஐயோ! அந்த விபசாரி, வேறு யாருமில்லை; என் தாய், சொந்த அன்னை!" என்று கூறினான். அதுவரை கட்டுக்கு எப்படியோ அடங்கி இருந்த கண்ணீர் குபுகுபுவெனக் கிளம்பி என் நண்பனின் கன்னத்தில் வழியலாயிற்று. எனக்கு ஏற்பட்ட திகைப்பிலே என்ன செய்வதென்றே தோன்றவில்லை.

"உன் தாய்...?" என்று நான், ஏதோ கேட்க ஆரம்பித்தேன், வாய் மூடிக் கொண்டிருக்க முடியாத நிலையில்.

"இறந்து இருபது ஆண்டுகளாகின்றன. அப்படித்தான் அப்பா சொன்னார். சின்னம்மாவும் சொன்னது அதுதான். ஆனால் என் தாய் சாகவில்லை, தாயின் கௌரவம் செத்து விட்டது. உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால் உலகின் முன்பு, 'என் தாய்' என்று நான் அவர்களைக் கூற முடியாது. 'மகனே!' என்று அவர்கள் என்னை அழைக்க முடியாது! 'அண்ணா!' என்று ராதாவும், 'ராதா!' என்று நானும், பகிரங்கமாகப் பேசிக்கொண்டால், பழமையின் பிடியிலே உள்ள இந்தப் பாழும் உலகம் தூற்றும்; கேலி செய்யும் பரந்தாமா! நான் வேளாளர் குலம். ராதாவின் தாயாராகு முன்பு, ரங்கம்மாள், வேளாளகுலப் பெரியவர் வீரராகவ முதலியாரின் மகள்! இப்போது, ரங்கம்மாள், ஒரு விபசாரி! ராமசாமி நாயுடுவின் வைப்பு! ராதா, ஒரு கதம்பகுலப் பெண்! விபசாரியின் மகள்!" என்று கூறிவிட்டுக் கதறினான் என் நண்பன்.

நாகசுந்தரம், சொன்னது கேட்டு என் தலை சுழன்றது - ஊர் முழுவதும், அவன் தாயார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனதாகவும், அவளுடையே தங்கையையே அவர் கலியாணம் செய்துகொண்டதாகவும் நம்பி இருந்தது. நானும் அப்படித்தான். நண்பன் நாகசுந்தரம், திடீரென்றுதான், தன் தாயார் இறந்து போகவில்லை, வழுக்கி விட்டார்கள் என்ற பயங்கரச் செய்தியைக் கேள்விப் பட்டான் என்பது தெரிந்தது. எப்படித் தெரிந்து கொண்டான். ஊரார் அறியாத அந்த உண்மையைக் கூறியது யார்? என்று தெரிந்து கொள்ளத் துடித்தேன். நண்பனோ, புழுப்போலத் துடித்துக் கொண்டிருந்தான்.

உன் தாயார் எப்படி விபசாரியானார்கள்? ஏன் விபசாரியானார்கள்? என்று கேட்கும் துணிவு, எப்படி ஏற்பட முடியும்? எவ்வளவு வேதனை தரும் கேள்விகள் அவை. நான், நாகசுந்தரத்தின் பரிதாபத்திற்குரிய நிலை கண்டு மிகவும் கஷ்டப்பட்டேன். இருவரும் நெடுநேரம் பேசாமல் இருந்தோம். உலகிலே சகலமும் இருண்டுபோய், ஜீவராசிகள் யாவும் இறந்துபோய், சகல சப்தமும் அடங்கிப் போன நிலையில், நானும் அவனும் மட்டும் வீற்றிருப்பது போன்று எனக்குத் தோன்றிற்று. எங்கு நோக்கினாலும் ஒரே சூன்யமாக இருந்தது. விநாடிக்கு விநாடி, என் உள்ளத்திலே யாரோ சூட்டுக் கோலிடுவது போலிருக்கும். திரும்பிப் பார்ப்பேன், என் நண்பனை. அவனோ விம்மிக் கொண்டிருப்பான். அணைத்துக் கொண்டேன், ஏதும் பேசாமல், என்ன சொல்லி அவனுக்கு ஆறுதலை உண்டாக்க முடியும்? சாந்தி தரக்கூடிய விதத்தில் என்ன பேசுவது? என் தாய் விபசாரி என்று மகன் கூறிக் கதறும் போது, யாரால் தான் சமாதானம் கூற முடியும்! இந்த வேதனையான நிலைமை ஏன் ஏற்பட்டது, என்று எண்ணினேன். வேளாளர் குடிப்பிறந்து, தனவந்தனுக்கு வாழ்க்கைப்பட்டு, தங்கரூபன் போன்ற குழந்தையைப் பெற்றெடுத்த ரங்கம், விபசாரியாக வேண்டிய அவசியம் என்ன? ரங்கம் கிழவனுக்கல்ல வாழ்க்கைப்பட்டது. குடித்துவிட்டு வீதியில் புரளும் கோணல் சேட்டைக்காரனல்ல அவள் கணவன். குடிசையில் அல்ல அவள் வாழ்ந்தது. கண்டவர் மெச்சும் தனவான். பொருத்தமற்ற மணம் என்று, அந்தத் திருமணத்தைக் கூறிவிட முடியாது. ஏழ்மையால் வாட்டப்பட்டு, புருஷனால் கைவிடப்பட்டு, புலம்பித் தவிக்கும் பெண், பிறரின் போகப் பொருளானாள் என்று கேள்விப்படும்போதாவது, ஒரு சமயமில்லாவிட்டால் மற்றோர் சமயம், "ஆமாம் பாவம், அவள் என்ன செய்வாள்" என்று ஒருவர் இருவராவது கூற முடியும். அவள் வஞ்சிக்கொடி, அவனோ நெஞ்சில் ஈளைகட்டிய கிழவன். பணத்தாசையால் அவனை மணந்தாள், வாலிபப் பருவத்தின் சேட்டையால் வேறொருவனை நாடினாள், என்ற நிலையும் அல்ல, ரங்கம்மாளுக்கு ஏற்பட்டது. இப்போதுங்கூட அவர், ரங்கம்மாளுக்கு ஈடு அல்ல என்று கூற முடியாது. என்றாலும், ரங்கம்மாள் விபசாரியானாள்! ஏன்? எப்படி? என் மனதிலே, இவ்வெண்ணங்கள் புகுந்து குடைந்தன.

சரி, எப்படியோ ஒன்று விபசாரியாகிவிட்டாள். அந்தக் கள்ளிக்காகக் கண்ணீர் விடுவதா! காறித் துப்ப வேண்டும். கழுத்தை நெரிக்க வேண்டும் என்றல்லவா தோன்றும், யாருக்கும்? அதிலும், இப்படிப்பட்ட தாயால் எப்படிப்பட்ட இழிவும், பழியும் ஏற்படும் ஒரு மகனுக்கு; அவமானத்தையே அளிக்கும், அந்தத் தூர்த்தைக்காக அழுவதற்கு, எப்படி ஒரு மகனுக்கு மணம் வரும்? ஆனால், நாகசுந்தரம், தேம்பித் தேம்பி அழுகிறானே!! ஏன்? சோரம்போன மாதுக்காக ஏன், நாகசுந்தரம் இவ்வளவு உருகவேண்டும்? என்ற கேள்விகள், கிளம்பி என்னைக் கொட்டியபடி இருந்தன.

"உன் தாயாரைப் பார்த்தாயா?"

"ஆமாம்! என் தாய்! அந்த ராமசாமி நாயுடு! ராதா! அந்த மூவரையும் பார்த்தேன்."

"எங்கே? எப்போது?"

மேற்கொண்டு நான் கேள்விகள் போடவில்லை. நாகசுந்தரமே பேசலானான்.

"பரந்தாமா! எங்கள் பக்கத்து வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்த குடும்பம், குண்டு வீச்சுக்குப் பயந்து, ரங்கோனிலிருந்து வந்தது என்பது எனக்குத் தெரிந்ததும், நான் இயற்கையாக ஏற்படக்கூடிய ஆவலுடன், பர்மா சேதி பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்து, வந்தவர்கள் யாரார் என்று விசாரித்தேன்; தோட்டக்காரன் தகவல் சொன்னான்.

"அழகான பெண்! அடக்கமான தாயார்! குடிகாரக் கணவன்!" - இது அந்தக் குடும்பத்தினரைப் பற்றி அவன் எனக்குச் சொன்னது. பர்மா தகவலை விட, இந்தக் குடும்பத்தின் தகவலை விசாரிக்க வேண்டுமென்றே ஆவல் பிறந்தது.

"என்ன வயது இருக்கும்?" என்று நான் தோட்டக்காரனைக் கேட்டேன். அவன் "இருபது இருக்கும். இரதிதான் அழகில்" என்றான். நான் கேட்டது, அந்தக் குடிகாரக் கணவனைப் பற்றி.

"அவனுக்கு 40-க்கு மேலிருக்கும். சாயந்தரமானால் சாராயக் கடையில் தவறாமல் அவனைப் பார்க்கலாம். குடி வெறியில் வீண் சண்டைக்கு நிற்கிறான். யாரையும் மதிப்பதில்லை - அடி விழுகிறவரையில். அடித்தால் திருப்பி அடிக்கும் திறமையும் தைரியமும் கிடையாது. போலீஸ் கம்பெளையிண்ட் கொடுக்கிறேன், பிராது கொடுக்கிறேன் என்று மிரட்டுவான். அடிக்கடி ஆங்கிலம் பேசுகிறான் சட்டைக்காரன் போல. சாராயக் கடைக்கு கோட்டு ஹாட்டுடன் வருகிறவனே அவன் ஒருவன் தான். போஸ்டாபீஸ் சூபரிண்டாக இருந்தவனாம், ரங்கோனில். "சண்டை முடிந்ததும் போய்விடுவேன். இந்தத் தரித்திரம் பிடித்த ஊரில் எவன் இருப்பான். அங்கே தங்கம் விளைகிறது என்று பேசுகிறான்" என்று தோட்டக்காரன் சொன்னான்.

"பாவம்! அந்த அம்மா இருக்கிறார்களே, இலட்சுமி தேவிதான்! இந்தக் குரங்கு செய்கிற சேஷ்டையை எப்படித்தான் பொறுத்துக் கொள்கிறார்களோ தெரியவில்லை. அவ்வளவு அடக்கம். இவன் குடித்துவிட்டுக் கூத்தாடிக்கொண்டு வீட்டுக்கு வந்தால், அந்த அம்மாள் பாவம் தலை தலை என்று அடித்துக் கொள்கிறார்கள். அவன் கண்களை உருட்டி மிரட்டி அந்த அம்மாவை நடுநடுங்க வைக்கிறான். அந்தப் பெண் ராதா அழகி. சதா புத்தகமும் கையுமாக இருக்கிறது. பத்தாவதுவரை படித்திருக்கிறதாம். முகத்திலே எப்போதும் புன்னகை. யாரிடமும் அன்போடு பேசுகிறாள். அந்தக் குடிகாரனும் பொறுமையையே பூஷணமாகக் கொண்ட அந்த அம்மையாரும் சண்டை போட்டால்கூட, ராதா தன் படிப்பு உண்டு தான் உண்டு என்று இருந்துவிடுகிறாள். பாவம் இருக்கிற நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவு செய்கிறான் அந்தக் குடியன். என்றைய தினம் 'இதுகளை' நடுத் தெருவில் விட்டுவிட்டுப் போய்விடுகிறானோ தெரியவில்லை" என்று தோட்டக்காரன் எனக்குக் கூறினான். அவன் எங்கள் வீட்டுத் தோட்டக்காரன் மட்டுமல்ல, பக்கத்து வீட்டு வேலைக்காரிக்குத் தெரிந்தவன். ஆகவே, அங்கே நடப்பது பூராவும் இவனுக்குத் தெரியும்.

ரங்கோன் ராதாவின் குடும்பச் செய்தியைக் கேட்டது முதல், எனக்கு அவர்களைக் கண்டு பேசவேண்டும் என்ற ஆசை பிறந்தது; சமயம் வாய்க்கவில்லை.

என் அப்பாவும் சிற்றன்னையும், காசி யாத்திரை போயிருக்கிறார்கள் அல்லவா? காசித் தீர்த்தம் அனுப்பி இருந்தார் அன்று. அதையே சாக்காக வைத்துக்கொண்டு நான் அடுத்த வீட்டுக்குள் படை எடுத்தேன்.

"பர்மா நாயுடுவுக்கும் கொஞ்சம் கொடுங்கள்" என்று வீட்டுக்காரராகச் சொன்னார். அந்த வீட்டின் பின்புறமிருந்த ஒரு அறையில்தான் அவர்கள் குடியிருந்தார்கள். சமையலுக்கு, மாட்டுக் கொட்டகைக்குப் பக்கமாக இருந்த தாழ்வாரத்தையே உபயோகித்துக் கொண்டார்கள். நான், பின்புறம் சென்று மிக மரியாதையுடனும், கொஞ்சம் கூச்சத்துடனும், "சார்!" என்று கூப்பிட்டேன்.

"யாரது" என்று கேட்டுக்கொண்டே ராதா தன் எதிரே வந்து நின்றாள். "அவர்..." என்று நான் தடுமாறினேன்.

"அப்பாவும் அம்மாவும் ஆஞ்சநேய ஸ்வாமி கோயிலுக்குப் போயிருக்கிறார்கள்" என்று ராதா பதில் சொன்னாள்.

"நான் அடுத்த வீடு. என் அப்பா காசி யாத்திரை போயிருக்கிறார். காசித் தீர்த்தம் கொண்டு வந்திருக்கிறேன். தரலாம் என்று வந்தேன்" என்று நான் கூறிக்கொண்டே ஒரு சிறு செம்பைக் கொடுத்தேன். ராதா அதை மரியாதையாக வாங்கிக் கொண்டாள். ஒரு விநாடி மௌனமாக நின்றேன். ராதா, "அடுத்த வீடா தாங்கள்?" என்று கேட்டாள். "ஆமாம்! நாகசுந்தரம் என்று பெயர்" என்று கூறிவிட்டு, விடைபெற்றுக் கொண்டேன். பிறகு, அவர்களைச் சந்திக்கச் சமயமில்லை. உன்னிடம் ராதாவைப் பற்றி, ஒருநாள் மாலை சொன்னேனல்லவா, அன்று கூட எனக்குத் தெரியாது, நான் பேசியது என் தங்கையிடம் என்ற விஷயம். உன்னிடம் ராதாவைப் பற்றிப் பேசிவிட்டு வீடு திரும்பினேன். இரவு மணி பத்து இருக்கும் வீட்டுக்குள் நுழையும்போது.

"ஐயோ! அடபாவி! பாதகா!" என்று அழுகுரல் கேட்டது.

"அப்பா! அப்பா! ஐயோ!" என்று ராதாவின் குரலும் கேட்டது.

"கொன்றுவிடுவேன்; கொன்று போடுவேன்! ராஸ்கல்!" என்று மிரட்டும் குரல் கேட்டது.

தோட்டக்காரனை நோக்கினேன்.

"அதான், குடித்துவிட்டுக் கலாட்டா செய்கிறான் பர்மா நாயுடு" என்றான். இதற்குள் அழுகுரல் பலமாகிவிட்டது. வேகமாக ஓடினேன். அடுத்த வீட்டிற்குள். தன் கைத்தடியால் அந்தக் குடிகாரன் அந்த அம்மையை அடித்துக் கொண்டிருந்தான். ஒழுகும் இரத்தத்தையும் துடைக்க நேரமின்றி, அந்த அம்மையார் அலறிக் கொண்டிருந்தார்கள். ராதா இடையே நின்று தவித்தாள்.

"ஐயா! ஐயா! இது என்ன அக்ரமம்! ஒரு ஸ்திரீயை இப்படி இம்சை செய்கிறீரே, தகுமா" என்று கேட்டுக் கொண்டே பர்மா நாயுடு கையில் இருந்த தடியைப் பிடுங்கிக் கொண்டேன். அவன் முதலில் கொஞ்சம் திடுக்கிட்டுப் போனான். ஆனால் உடனே தைரியமடைந்து, என்னைப் பார்த்து, "இவள் என் சம்சாரம், நீ யார் இங்கே நுழைய? உன் வேலையைப் பார், இடியட்" என்றான்.

"உன் சம்சாரம் என்றால் அதற்காகச் சித்திரவதை செய்வதா?"

"நீ என்ன இந்த ஊருக்கு ராஜாவா? நியாயம் கேட்க வந்துவிட்டாயே! போடா மடையா! பெண்டாட்டி என்றால் பயப்பட்டுச் சாகும் பேடியல்லடா நான், கொடு தடியை, போ வெளியே."

"ஐயா! நியாயம் கேட்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு."

"உரிமையாவது எருமையாவது, போடா வெளியே."

என்னை அடிக்கக் கையை ஓங்கினான் பர்மா நாயுடு. ராதா, "அப்பா! அவர் நம்ம பக்கத்து வீடு. ஒன்றும் செய்யாதீர்" என்று கூவினாள். அவனோ என் கழுத்தைத் தாவிப் பிடித்தான். குடிவெறியில் ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது என்று திகில் உண்டாயிற்று. உண்டாகவே, எட்டி ஒரு உதை கொடுத்தேன், அவன் கீழே விழுந்தான்.