உள்ளடக்கத்துக்குச் செல்

கலிங்கத்துப் பரணி/அவதாரம்

விக்கிமூலம் இலிருந்து

திருமாலே தோன்றினான்

[தொகு]

232

அன்றிலங்கை பொருதழித்த வவனேயப் பாரதப்போர் முடித்துப் பின்னை
வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனவுதித்தான் விளம்பக் கேண்மின். 1

233

தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன் திருவயிற்றில் வசுதே வற்கு
மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. 2

கண்ணனே குலோத்துங்கனானான்

[தொகு]

234

இருள்முழுது மகற்றும்விது குலத்தோன் தேவி இகல்விளங்கு தபனகுலத் திராச ராசன்
அருள்திருவின் திருவயிற்றில் வந்து தோன்றி ஆலிலையில் அவதரித்தா னவனே மீள. 3

துந்துமி முழங்கிற்று

[தொகு]

235

வந்தருளி யவதாரஞ் செய்தலுமே மண்ணுலகும் மறைகள் நான்கும்
அந்தரநீங் கினவென்ன வந்தரதுந் துமிமுழங்கி யெழுந்த தாங்கே. 4

மலர்க்கையால் எடுத்தாள்

[தொகு]

236

அலர்மழைபோல் மழைபொழிய வதுகண்டு கங்கைகொண்ட சோழன் தேவி
குலமகள்தன் குலமகனைக் கோகனத மலர்க்கையா னெடுத்துக் கொண்டே. 5

பாட்டியார் கருத்து

[தொகு]

237

அவனிபர்க்குப் புரந்தரனா மடையாளம் அவயவத்தி னடைவே நோக்கி
இவனெமக்கு மகனாகி யிரவிகுலம் பாரிக்கத் தகுவ னென்றே. 6

இருகுலத்து அரசரும் மகிழ்ந்தனர்

[தொகு]

238

திங்களினி ளங்குழவி செம்மலிவ னென்றுஞ்
செய்யபரி திக்குழவி யையனிவ னென்றுந்
தங்களின் மகிழ்ந்திரு குலத்தரசர் தாமுந்
தனித்தனி யுவப்பதொர் தவப்பயனு மொத்தே. 7

நடை கற்றான்

[தொகு]

239

சினப்புலி வளர்ப்பதொர் சிறுப்புலியு மொத்தே
திசைக்களி றணைப்பதொர் தனிக்களிறு மொத்தே
அனைத்தறமு மொக்கவடி வைக்கவடி வைத்தே
அறத்தொடு மறத்துறை நடக்கநடை கற்றே. 8

ஐம்படைத் தாலி அணிந்தனன்

[தொகு]

240

பண்டுவசு தேவன்மக னாகிநில மாதின்
படர்களையு மாயனிவ னென்றுதெளி வெய்தத்
தண்டுதனு வாள்பணில நேமியெனு நாமத்
தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே. 9

மழலை மொழிந்தான்

[தொகு]

241

தாயர்தரு பால்முலை சுரக்கவரு நாளே
தானுமுல கத்தவர்த மக்கருள்சு ரந்தே
தூயமனு வுஞ்சுருதி யும்பொருள்வி ளங்கிச்
சொற்கள்தெரி யத்தனது சொற்கள்தெரி வித்தே. 10

பூணூல் அணிந்தான்

[தொகு]

242

திருமார்பின் மலர்மடந்தை திருக்கழுத்தின் மங்கலநா ணென்ன முந்நூற்
பெருமார்பின் வந்தொளிரப் பிறப்பிரண்டா வதுபிறந்து சிறந்த பின்னர். 11

மறை கற்றான்

[தொகு]

243

போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த அஞ்ஞான்று புகன்று சென்ற
வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. 12

வீர வாள் ஏந்தினான்

[தொகு]

244

நிறைவாழ்வைப் பெறல்நமக்கும் அணித்தென்று நிலப்பாவை களிப்ப விந்தத்
துறைவாளைப் புயத்திருத்தி யுடைவாளைத் திருவரையி னொளிர வைத்தே. 13

யானையேற்றம் கற்றான்

[தொகு]

245

ஈரிரும ருப்புடைய வாரணமு கைத்தே இந்திரனெ திர்ந்தவரை வென்றுவரு மேயான்
ஓரிரும ருப்புடைய வாரணமு கைத்தே ஒன்னலரை வெல்வனென வன்னதுப யின்றே. 14

குதிரையேற்றம் பயின்றான்

[தொகு]

246

இற்றைவரை யுஞ்செலவ ருக்கனொரு நாள்போல் ஏழ்பரியு கைத்திருள கற்றிவரு மேயான்
ஒற்றைவய மானடவி யித்தரைவ ளாகத் துற்றவிருள் தீர்ப்பனென மற்றதுப யின்றே. 15

படைக்கலம் பயின்றான்

[தொகு]

247

சக்கரமு தற்படையொ ரைந்துமுதல் நாளே தன்னுடைய வானவத னாலவைந மக்குத்
திக்குவிச யத்தின்வரு மென்றவைப யிற்றிச் செங்கைமலர் நொந்திலசு மந்திலத னக்கே. 16

பல்கலை தேர்ந்தான்

[தொகு]

248

உரைசெய்பல கல்விகளி னுரிமைபல சொல்லுவதெ னுவமையுரை செய்யி னுலகத்
தரசருள ரல்லரென அவைபுகழ மல்குகலை யவையவைகள் வல்ல பிறகே. 17

இளவரசன் ஆனான்

[தொகு]

249

இசையுடனெ டுத்தகொடி யபயனவ னிக்கிவனை யிளவரசில் வைத்த பிறகே
திசையரச ருக்குரிய திருவினைமு கப்பதொரு திருவுளம டுத்த ருளியே. 18

போர்மேல் சென்றான்

[தொகு]

250

வளர்வதொர்ப தத்தினிடை மதகரிமு கத்தினிடை
வளையுகிர்ம டுத்து விளையா
டிளவரியெ னப்பகைஞ ரெதிர்முனைக
ளைக்கிழிய எறிபடைபி டித்த ருளியே. 19

வடவரசரை வென்றான்

[தொகு]

251

குடதிசை புகக்கடவு குரகதர
தத்திரவி குறுகலு மெறிக்கு மிருள்போல்
வடதிசை முகத்தரசர் வருகத
முகத்தனது குரகத முகைத் தருளியே. 20

வயிராகரத்தை எறித்தான்

[தொகு]

252

புரமெரி மடுத்தபொழு ததுவிது வெனத்திகிரி புகையெரி குவிப்ப வயிரா
கரமெரி மடுத்தரசர் கரமெதிர் குவிப்பதொரு கடவரை தனைக் கடவியே. 21

களம் கொண்டான்

[தொகு]

253

குளமுதிர மெத்தியதொர் குரைகடல்
கடுப்பவெதிர் குறுகலர்கள் விட்ட குதிரைத்
தளமுதிர வெட்டியொரு செருமுதிர
ஒட்டினர்கள் தலைமலை குவித் தருளியே. 22

சக்கரக்கோட்டம் அழித்தான்

[தொகு]

254

மனுக்கோட்ட மழித்தபிரான் வளவர்பிரான் திருப்புருவத்
தனுக்கோட்ட நமன்கோட்டம் பட்டதுசக் கரக்கோட்டம். 23

சீதனம் பெற்றான்

[தொகு]

255

சரிக ளந்தொறுந் தங்கள் சயமகள் தன்னை மன்னப யன்கைப் பிடித்தலும்
பரிக ளுங்களி றுந்தன ராசியும் பாரி போகங் கொடுத்தனர் பார்த்திபர். 24

கைவேல் சிவந்தது

[தொகு]

256

பொருத ராதிபர் கண்கள் சிவந்தில போரி லோடிய கால்கள் சிவந்தன
விருத ராசப யங்கரன் செங்கையில் வேல்சி வந்தது கீர்த்தி வெளுத்ததே. 25

வீரராசேந்திரன் இறந்தான்

[தொகு]

257

மாவுகைத் தொருதனி யபய னிப்படி வடதிசை மேற்செல மன்னர் மன்னவன்
தேவருக் கரசனாய் விசும்பின் மேற்செலத் தென்றிசைக் குப்புகுந் தன்மை செப்புவாம். 26

சோழ நாட்டில் நிகழ்ந்தவை

[தொகு]

258

மறையவர் வேள்வி குன்றி மனுநெறி யனைத்து மாறித்
துறைகளோ ராறு மாறிச் சுருதியு முழக்கம் ஓய்ந்தே. 27

259

சாதிக ளொன்றொ டொன்று தலைதடு மாறி யாரும்
ஓதிய நெறியின் நில்லா தொழுக்கமும் மறந்த போயே. 28

260

ஒருவரை யொருவர் கைம்மிக் கும்பர்தங் கோயில் சோம்பி
அரிவையர் கற்பின் மாறி யரண்களு மழிய வாங்கே. 29

சோழநாடு அடைந்தான்

[தொகு]

261

கலியிருள் பரந்த காலைக் கலியிருள் கரக்கத் தோன்றும்
ஒலிகட லருக்க னென்ன உலகுய்ய வந்து தோன்றி. 30

நீதியை நிலைநிறுத்தினான்

[தொகு]

262

காப்பெலா முடைய தானே படைப்பதுங் கடனாக் கொண்டு
கோப்பெலாங் குலைந்தோர் தம்மைக் குறியிலே நிறுத்தி வைத்தே. 31

திரு முழுக்கு

[தொகு]

263

விரிபுனல் வேலை நான்கும் வேதங்க ணான்கு மார்ப்பத்
திரிபுவ னங்கள் வாழ்த்தத் திருவபி டேகஞ் செய்தே. 32

முடி புனைதல்

[தொகு]

264

அறைகழ லரச ரப்பொழு தடிமிசை யறுகெ டுத்திட
மறையவர் முடியெ டுத்தனர் மனுநெறி தலையெ டுக்கவே. 33

அறம் முளைத்தன

[தொகு]

265

நிரைமணி பலகு யிற்றிய நெடுமுடி மிசைவி திப்படி
சொரிபுன லிடைமு ளைத்தன துறைகளி னறம னைத்துமே. 34

புலிக்கொடி எடுத்தான்

[தொகு]

266

பொதுவற வுலகு கைக்கொடு புலிவளர் கொடியெ டுத்தலும்
அதுமுதற் கொடியெ டுத்தன அமரர்கள் முழவெ டுக்கவே. 35

நிலவு எறித்தது இருள் ஒளித்தது

[தொகு]

267

குவிகைகொ டரசர் சுற்றிய குரைகழ லபயன் முத்தணி
கவிகையி னிலவெ றித்தது கலியெனு மிருளொ ளித்ததே. 36

குடை நிழலின் செயல்

[தொகு]

268

அரனுறை யும்படி மலைகள் அடைய விளங்கின வனையோன்
ஒருதனி வெண்குடை யுலகில் ஒளிகொள் நலந்தரு நிழலில். 37

புகழ் மேம்பாடு

[தொகு]

269

அரிதுயி லும்படி கடல்கள் அடைய விளங்கின கவினின்
ஒருகரு வெங்கலி கழுவி உலவு பெரும்புகழ் நிழலில். 38

270

நிழலில டைந்தன திசைகள் நெறியில டைந்தன மறைகள்
கழலில டைந்தனர் உதியர் கடலில டைந்தனர் செழியர். 39

271

கருணையொ டுந்தன துபய கரமுத வும்பொருள் மழையின்
அரணிய மந்திர அனல்கள் அவையுத வும்பெரு மழையே. 40

272

பரிசில் சுமந்தன கவிகள் பகடு சுமந்தன திறைகள்
அரசு சுமந்தன இறைகள் அவனி சுமந்தன புயமும். 41

273

விரித்த வாளுகிர் விழித் தழற்புலியை மீது வைக்கவிம யத்தினைத்
திரித்த கோலில்வளை வுண்டு நீதிபுரி செய்ய கோலில்வளை வில்லையே. 42

274

கதங்க ளிற்பொரு திறைஞ்சிடா வரசர் கால்க ளிற்றளையும் நூல்களின்
பதங்க ளிற்றளையு மன்றி வேறொரு பதங்க ளிற்றளைக ளில்லையே. 43

275

மென்க லாபமட வார்கள் சீறடி மிசைச்சி லம்பொலிவி ளைப்பதோர்
இன்க லாம்விளைவ தன்றி யெங்குமொர் இகல்க லாம்விளைவ தில்லையே. 44

பொழுது போக்கு

[தொகு]

276

வருசெருவொன் றின்மையினால் மற்போருஞ் சொற்புலவோர் வாதப் போரும்
இருசிறைவா ரணப்போரு மிகன்மதவா ரணப்போரு மினைய கண்டே. 45

277

கலையினொடுங் கலைவாணர் கவியினொடும் இசையினொடுங் காதன் மாதர்
முலையினொடு மனுநீதி முறையினொடு மறையினொடும் பொழுது போக்கி. 46

பரிவேட்டையாட நினைத்தான்

[தொகு]

278

காலாற்றண் டலையுழக்குங் காவிரியின் கரைமருங்கு வேட்டை யாடிப்
பாலாற்றங் கரைமருங்கு பரிவேட்டை ஆடுதற்குப் பயண மென்றே. 47

படை திரண்டது

[தொகு]

279

முரசறைகென் றருளுதலு முழுதுலகும் ஒருநகருட் புகுந்த தொப்பத்
திரைசெய்கட லொலியடங்கத் திசைநான்கிற் படைநான்குந் திரண்ட வாங்கே. 48

வேட்டைக்குப் புறப்பட்டான்

[தொகு]

280

அழகின்மே லழகுபெற வணியனைத்தும் அணிந்தருளிக் கணித நூலிற்
பழகினார் தெரிந்துரைத்த பழுதறுநாட் பழுதற்ற பொழுதத் தாங்கே. 49

தானம் அளித்தான்

[தொகு]

281

அனக தானதரு மங்கண்மறை மன்னர் பெறவே
அபய தானமப யம்புகுது மன்னர் பெறவே
கனக தானமுறை நின்றுகவி வாணர் பெறவே
கரட தானமத வாரணமு மன்று பெறவே. 50

யானைமேல் ஏறினான்

[தொகு]

282

மற்ற வெங்கட களிற்றினுத யக்கி ரியின்மேல்
மதிக வித்திட வுதித்திடு மருக்க னெனவே
கொற்ற வெண்குடை கவிப்பமிசை கொண்டு கவரிக்
குலம திப்புடை கவித்தநில வொத்து வரவே. 51

பல்லியம் முழங்கின

[தொகு]

283

ஒருவ லம்புரி தழங்கொலி முழங்கி யெழவே
உடன் முழங்குபணி லம்பல முழங்கி யெழவே
பருவம் வந்துபல கொண்டல்கண் முழங்கி யெழவே
பலவி தங்களொடு பல்லிய முழங்கி எழவே. 52

வேறு பல ஒலிகள் எழுந்தன

[தொகு]

284

மன்னர் சீர்சய மிகுத்திடை விடாத வொலியும்
மறைவ லாளர்மறை நாள்வயின் வழாத வொலியும்
இன்ன மாகடல் முழங்கியெழு கின்ற வொலியென்
றிம்ப ரும்பரறி யாதபரி செங்கு மிகவே. 53

ஏழிசைவல்லபியும் உடனிருந்தாள்

[தொகு]

285

வாழி சோழகுல சேகரன் வகுத்த இசையின்
மதுர வாரியென லாகுமிசை மாத ரிதெனா
ஏழு பாருலகொ டேழிசை வளர்க்க உரியாள்
யானை மீதுபிரி யாதுட னிருந்து வரவே. 54

தியாகவல்லியும் சென்றாள்

[தொகு]

286

பொன்னின் மாலைமலர் மாலைபணி மாறி யுடனே
புவனி காவலர்கள் தேவியர்கள் சூழ்பிடி வரச்
சென்னி யாணையுடன் ஆணையை நடத்து முரிமைத்
தியாக வல்லிநிறை செல்வியுடன் மல்கி வரவே. 55

மகளிரும் மன்னரும் சூழ வருதல்

[தொகு]

287

பிடியின் மேல்வரு பிடிக்குல மநேக மெனவே
பெய்வ ளைக்கைமட மாதர்பிடிமீதின் வரவே
முடியின் மேன்முடி நிரைத்துவரு கின்ற தெனவே
முறைசெய் மன்னவர்கள் பொற்குடை கவித்து வரவே. 56

அரசரோடு வீரர் சூழ்ந்து வரல்

[தொகு]

288

யானை மீதுவரும் யானையு மநேக மெனவே
அடுக ளிற்றின்மிசை கொண்டர சநேகம் வரவே
சேனை மீதுமொரு சேனைவரு கின்ற தெனவே
தெளிப டைக்கலன் நிலாவொளி படைத்து வரவே. 57

முரசொலியும் கொடிநிரலும்

[தொகு]

289

முகிலின் மேன்முகின் முழங்கிவரு கின்ற தெனவே
மூரி யானைகளின் மேன்முரச திர்ந்து வரவே
துகிலின் மேல்வரு துகிற்குலமு மொக்கு மெனவே
தோகை நீள்கொடிகள் மேன்முகில் தொடங்கி வரவே. 58

புழுதி எழுந்தது

[தொகு]

290

தேரின் மீதுவரு தேர்களு மநேக மெனவே
செம்பொன் மேகலை நிதம்பநிரை தேரின் வரவே
பாரின் மீதுமொரு பாருளது போலு மெனவே
படல தூளியு மெழுந்திடையின் மூடி வரவே. 59

படை செல்லும் காட்சி

[தொகு]

291

யானை மேலிளம் பிடியின் மேனிரைத்
திடைய றாதுபோ மெறிக டற்கிணை
சேனை மாகடற் கபய னிம்முறைச்
சேது பந்தனஞ் செய்த தொக்கவே. 60

பல்லக்கும் முத்துக் குடையும்

[தொகு]

292

நீல மாமணிச் சிவிகை வெள்ளமும் நித்தி லக்குலக் கவிகை வெள்ளமுங்
காலி னான்வரும் யமுனை வெள்ளமுங் கங்கை வெள்ளமுங் காண்மி னென்னவே. 61

புலிக்கொடிச் சிறப்பு

[தொகு]

293

கெண்டை மாசுண முவணம் வாரணங் கேழ லாளிமா மேழி கோழிவிற்
கொண்ட வாயிரங் கொடிநு டங்கவே குமுறு வெம்புலிக் கொடிகு லாவவே. 62

மகளிர் கூட்டம்

[தொகு]

294

தொடைகள் கந்தரம் புடைகொள் கொங்கைகண்
சோதி வாண்முகங் கோதை யோதிமென்
நடைகண் மென்சொலென் றடைய வொப்பிலா
நகை மணிக்கொடித் தொகைப ரக்கவே. 63

மகளிர் தோற்றம்

[தொகு]

295

எங்குமுள மென்கதலி யெங்குமுள
தண்கமுக மெங்குமுள பொங்கு மிளநீர்
எங்குமுள பைங்குமிழ்க ளெங்குமுள
செங்குமுத மெங்குமுள செங்க யல்களே. 64

296

ஆறலைத ரங்கமுள வன்னநடை தாமுமுள
வாலைகமழ் பாகு முளவாய்
வேறுமொரு பொன்னிவள நாடுசய
துங்கன்முன்வி தித்ததுவு மொக்கு மெனவே. 65

மலைக் காட்சி

[தொகு]

297

வேழம்நிரை வென்றுமலை யெங்குமிடை
கின்றவயில் வென்றியப யன்ற னருளால்
வாழவப யம்புகுது சேரனொடு
கூடமலை நாடடைய வந்த தெனவே. 66

298

அக்கிரிகு லங்கள்விடு மங்குலியின்
நுண்திவலை யச்செழிய ரஞ்சி விடுமத்
திக்கிலுள நித்திலமு கந்துகொடு
வீசியொரு தென்றல்வரு கின்ற தெனவே. 67

தில்லைக் கூத்தனை வணங்கினான்

[தொகு]

299

தென்றிசையி னின்றுவட திக்கின்முகம்
வைத்தருளி முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டுவிடை
கொண்டதிகை மாநகருள் விட்ட ருளியே. 68

காஞ்சியை அடைந்தான்

[தொகு]

300

விட்டவதி கைப்பதியி னின்றுபய
ணம்பயணம் விட்டுவிளை யாடி யபயன்
வட்டமதி யொத்தகுடை மன்னர்தொழ
நண்ணினன்வ ளங்கெழுவு கச்சி நகரே. 69

கலிங்கப்பேய் ஓடிவந்தது

[தொகு]

301

என்னுமித னன்மொழியெ டுத்திறைவி சொல்லுவதன் முன்னமிகல் கண்ட தொருபேய்
தன்னுடைய கால்தனது பிற்பட மனத்துவகை தள்ளிவர வோடி வரவே. 70

கலிங்கப் பேயின் மொழிகள்

[தொகு]

302

கலிங்கர் குருதி குருதி கலிங்க மடைய வடைய
மெலிந்த வுடல்கள் தடிமின் மெலிந்த வுடல்கள் தடிமின். 71

303

உணங்கள் வயிறு குளிர உவந்து பருக பருக
கணங்க ளெழுக வெழுக கணங்க ளெழுக வெழுக. 72

304

என்செயப் பாவி காளிங் கிருப்பதங் கிருப்ப முன்னே
வன்சிறைக் கழுகும் பாறும் வயிறுகள் பீறிப் போன. 73

305

வயிறுக ளென்னிற் போதா வாய்களோ போதா பண்டை
எயிறுக ளென்னிற் போதா என்னினு மீண்டப் போதும். 74

306

சிரமலை விழுங்கச் செந்நீர்த் திரைகடல் பருக லாகப்
பிரமனை வேண்டிப் பின்னும் பெரும்பசி பெறவும் வேண்டும். 75

பேய்களின் பேரின்பம்

[தொகு]

307

என்ற வோசை தஞ்செ விக் கிசைத்த லுந்த சைப்பிணந்
தின்ற போற்ப ருத்து மெய் சிரித்து மேல்வி ழுந்துமே. 76

308

ஓகை சொன்ன பேயின் வாயை ஓடி முத்த முண்ணுமே
சாகை சொன்ன பேய் களைத் தகர்க்க பற்க ளென்னுமே. 77

309

பிள்ளை வீழ வீழ வும்பெ ருந் துணங்கை கொட்டுமே
வள்ளை பாடி யாடி யோடி வாவெனாவ ழைக்குமே. 78

310

எனாவு ரைத்த தேவி வாழி வாழி யென்று வாழ்த்தியே
கனாவு ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. 79

காளி போர்நிலை கேட்டல்

[தொகு]

311

ஆடிவரு பேய்களின லந்தலைத விர்த்தடுப றந்தலைய றிந்த தனினின்
றோடிவரு பேயையிக லுள்ளபடி சொல்கெனவு ரைத்தனளு ரைத்த ருளவே. 80