கலிங்கத்துப் பரணி/போர் பாடியது
Appearance
போரின் பேரொலி
[தொகு]404
- எடுமெடு மெடுமென வெடுத்ததோர் இகலொலி கடலொலி யிகக்கவே
- விடுவிடு விடுபரி கரிக்குழாம் விடும்விடு மெனுமொலி மிகைக்கவே. 1
405
- வெருவர வரிசிலை தெறித்தநாண் விசைபடு திசைமுகம் வெடிக்கவே
- செருவிடை யவரவர் தெழித்ததோர் தெழியுல குகள்செவி டெடுக்கவே. 2
இருபடைகளும் குதிரைகளும்
[தொகு]406
- எறிகட லொடுகடல் கிடைத்தபோல் இருபடை களுமெதிர் கிடைக்கவே
- மறிதிரை யொடுதிரை மலைத்தபோல் வருபரி யொடுபரி மலைக்கவே. 3
யானைப் படையும் குதிரைப் படையும்
[தொகு]407
- கனவரை யொடுவரை முனைத்தபோற் கடகரி யொடுகரி முனைக்கவே
- இனமுகின் முகிலொடு மெதிர்த்தபோல் இரதமொ டிரதமு மெதிர்க்கவே. 4
வீரர்களும் அரசர்களும்
[தொகு]408
- பொருபுலி புலியொடு சிலைத்தபோற் பொருபட ரொடுபடர் சிலைக்கவே
- அரியினொ டரியின மடர்ப்பபோல் அரசரு மரசரு மடர்க்கவே. 5
விற்போர்
[தொகு]409
- விளைகனல் விழிகளின் முளைக்கவே மினலொளி கனலிடை யெறிக்கவே
- வளைசிலை யுருமென விடிக்கவே வடிகணை நெடுமழை படைக்கவே. 6
குருதி ஆறு
[தொகு]410
- குருதியின் நதிவெளி பரக்கவே குடையின நுரையென மிதக்கவே
- கரிதுணி படுமுட லடுக்கியே கரையென விருபுடை கிடக்கவே. 7
யானைப் போர்
[தொகு]411
- மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
- நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே. 8
412
- நிழற்கொடி தழற்கது வலிற்கடி தொளித்தவை நினைப்பவர் நினைப்ப தன்முனே
- அழற்படு புகைக்கொடி யெடுத்தன புதுக்கொடி யனைத்தினு நிரைத்த தெனவே. 9
413
- இடத்திடை வலத்திடை யிருத்திய துணைக்கரம் நிகர்த்தன வடுத்த கரியின்
- கடத்தெழு மதத்திடை மடுத்தன சிறப்பொடு கறுத்தன வவற்றி னெயிறே. 10
414
- எயிறுக ளுடையபொ ருப்பை வலத்திடை எதிரெதி ரிருபணை யிட்டுமு றுக்கிய
- கயிறுக ளிவையென அக்கர டக்கரி கரமொடு கரமெதிர் தெற்றிவ லிக்கவே. 11
குதிரைகளின் தோற்றம்
[தொகு]415
- முடுகிய பவனப தத்திலு கக்கடை முடிவினி லுலகமு ணச்சுடர் விட்டெழு
- கடுகிய வடவன லத்தினை வைத்தது களமுறு துரகக ணத்தின்மு கத்திலே. 12
வீரர்களின் பெருமிதம்
[தொகு]416
- களமுறு துரகக ணத்தின்மு கத்தெதிர் கறுவிலர் சிலர்கல வித்தலை நித்தில
- இளமுலை யெதிர்பொரு மப்பொழு திப்பொழு தெனவெதிர் கரியின்ம ருப்பின்மு னிற்பரே. 13
வாள் வீரர்களின் சிறப்பு
[தொகு]417
- எதிர்பொரு கரியின்ம ருப்பையு ரத்தினில் இறவெறி படையினி றுத்துமி றைத்தெழு
- சதுரர்கண் மணியக லத்தும ருப்பவை சயமகள் களபமு லைக்குறி யொத்ததே. 14
குதிரை வீரர்களின் சிறப்பு
[தொகு]418
- சயமகள் களபமு லைக்கணி யத்தகு தனிவட மிவையென மத்தக முத்தினை
- அயமெதிர் கடவிம தக்கரி வெட்டினர் அலைபடை நிரைகள்க ளத்துநி ரைக்கவே. 15
வில் வீரரின் சிறப்பு
[தொகு]419
- அலைபடை நிரைகள்நி றைத்தசெ ருக்களம் அமர்புரி களமென வொப்பில விற்படை
- தலைபொர வெரியநெ ருப்பினின் மற்றது தழல்படு கழைவன மொக்கினு மொக்குமே. 16
420
- தழல்படு கழைவன மெப்படி யப்படி சடசட தமரமெ ழப்பக ழிப்படை
- அழல்படு புகையொடி ழிச்சிய கைச்சிலை அடுசிலை பகழிதொ டுத்துவ லிப்பரே. 17
421
- அடுசிலை பகழிதொ டுத்துவி டப்புகும் அளவினி லயமெதிர் விட்டவர் வெட்டின
- உடல்சில இருதுணி பட்டன பட்டபின் ஒருதுணி கருதுமி லக்கைய ழிக்குமே. 18
422
- ஒருதுணி கருதுமி லக்கைய ழித்தன உருவிய பிறைமுக வப்பக ழித்தலை
- அரிதரி திதுவுமெ னப்பரி யுய்ப்பவர் அடியொடு முடிகள்து ணித்துவி ழுத்துமே. 19
குதிரை வீரரின் சிறப்பு
[தொகு]423
- அடியொடு முடிகள்து ணித்துவி ழப்புகும் அளவரி தொடைசம ரத்தொட ணைத்தனர்
- நெடியன சிலசர மப்படிப் பெற்றவர் நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவே. 20
424
- நிறைசர நிமிரவி டத்துணி யுற்றவர் நெறியினை யொடியெறி கிற்பவ ரொத்தெதிர்
- அறைகழல் விருதர்செ ருக்கற வெட்டலின் அவருட லிருவகிர் பட்டன முட்டவே. 21
கலிங்க வீரர் தடுத்தனர்
[தொகு]425
- விடுத்த வீர ராயு தங்கள் மேல்வி ழாம லேநிரைத்
- தெடுத்த வேலி போற்க லிங்கர் வட்ட ணங்க ளிட்டவே. 22
கேடகங்கள் துளைக்கப்பட்டன
[தொகு]426
- இட்ட வட்ட ணங்கண் மேலெ றிந்த வேல்தி றந்தவாய்
- வட்ட மிட்ட நீண்ம திற்கு வைத்த பூழை யொக்குமே. 23
வாளும் உலக்கையும்
[தொகு]427
- கலக்க மற்ற வீரர் வாள்க லந்த சூரர் கைத்தலத்
- துலக்கை யுச்சி தைத்தபோ துழுங்க லப்பை யொக்குமே. 24
துதிக்கையும் சக்கரமும்
[தொகு]428
- மத்த யானை யின்க ரஞ்சு ருண்டு வீழ வன்சரந்
- தைத்த போழ்தி னக்க ரங்கள் சக்க ரங்க ளொக்குமே. 25
வீழ்ந்த முத்துக்கள்
[தொகு]429
- வெங்க ளிற்றின் மத்த கத்தின் வீழு முத்து வீரமா
- மங்கை யர்க்கு மங்க லப்பொ ரிசொ ரிந்த தொக்குமே. 26
கேடகங்களுடன் வீரர்கள்
[தொகு]430
- மறிந்த கேட கங்கி டப்ப மைந்தர் துஞ்சி வைகுவோர்
- பறிந்த தேரின் நேமி யோடு பார்கி டப்ப தொக்குமே. 27
தண்டும் மழுவும்
[தொகு]431
- களித்த வீரர் விட்ட நேமி கண்டு வீசு தண்டிடைக்
- குளித்த போழ்து கைப்பி டித்த கூர்ம ழுக்க ளொக்குமே. 28
குறையுடல்களும் பேய்களும்
[தொகு]432
- கவந்த மாட முன்பு தங்க ளிப்பொ டாடு பேயினம்
- நிவந்த வாட லாட்டு விக்கும் நித்த கார ரொக்குமே. 29
ஒட்டகம் யானை குதிரை
[தொகு]433
- ஒட்டகங்கள் யானை வாலு யர்த்தமா வழிந்த போர்
- விட்ட கன்று போகி லாது மீள்வ போலு மீளுமே. 30
யானைகள் மேகங்களை ஒத்தன
[தொகு]434
- பிறங்கு சோரி வாரி யிற்பி ளிற்றி வீழ்க ளிற்றினங்
- கறங்கு வேலை நீரு ணக் கவிழ்ந்த மேக மொக்குமே. 31
வீரர் துருத்தியாளரை ஒத்தனர்
[தொகு]435
- வாளில் வெட்டி வாரணக்கை தோளி லிட்ட மைந்தர் தாம்
- தோளி லிட்டு நீர்வி டுந் துருத்தி யாள ரொப்பரே. 32
வில் வீரர் செயல்
[தொகு]436
- நேர்முனையிற் றொடுத்த பகழிகள் நேர்வளைவிற் சுழற்று மளவினின்
- மார்பிடையிற் குளித்த பகழியை வார்சிலையிற் றொடுத்து விடுவரே. 33
குதிரை வீரர் செயல்
[தொகு]437
- அசையவுரத் தழுத்தி யிவுளியை அடுசவளத் தெடுத்த பொழுதவை
- விசையமகட் கெடுத்த கொடியென விருதர்களத் தெடுத்து வருவரே. 34
தொடை அறுந்த வீரர் செயல்
[தொகு]438
- இருதொடையற் றிருக்கு மறவர்கள் எதிர்பொருகைக் களிற்றின் வலிகெட
- ஒருதொடையைச் சுழற்றி யெறிவர்கள் ஒருதொடையிட் டுவைப்ப ரெறியவே. 35
வாள் வீரர் மடிந்தனர்
[தொகு]439
- இருவருரத் தினுற்ற சுரிகையின் எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில்
- ஒருவரெனக் கிடைத்த பொழுதினில் உபயபலத் தெடுத்த தரவமே. 36
யானை வீரரோடு பொருநர்
[தொகு]440
- பொருநர்கள் சிலர்தமு ரத்தி னிற்கவிழ் புகர்முக மிசையடி யிட்ட திற்பகை
- விருதரை யரிவர்சி ரத்தை யச்சிரம் விழுபொழு தறையெனு மக்க ளிற்றையே. 37
படைக்கருவி இல்லாதவர் செயல்
[தொகு]441
- விடுபடை பெறுகிலர் மற்றி னிச்சிலர் விரைபரி விழவெறி தற்கு முற்பட
- அடுகரி நுதற்பட விட்ட கைப்படை அதனையொர் நொடிவரை யிற்ப றிப்பரே. 38
வீரர்கள் நாணினர்
[தொகு]442
- அமர்புரி தமதக லத்தி டைக்கவிழ் அடுகரி நுதலில டிப்ப ரிக்களி
- றெமதென விருகண்வி ழிக்க வுட்கினர் எனவிடு கிலர்படை ஞர்க்கு வெட்கியே. 39
கருணாகரன் போரில் ஈடுபட்டான்
[தொகு]443
- அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி
- உலகு புகழ்கரு ணாக ரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே. 40
இருபடைகளும் வெற்றிகாண முற்படல்
[தொகு]444
- உபய பலமும்வி டாது வெஞ்சமம் உடலு பொழுதினில் வாகை முன்கொள
- அபயன் விடுபடை யேழ்க லிங்கமும் அடைய வொருமுக மாகி முந்தவே. 41
இருபுறப் படைகளும் அழிந்தன
[தொகு]445
- அணிக ளொருமுக மாக வுந்தின அமர ரமரது காண முந்தினர்
- துணிகள் படமத மாமு றிந்தன துரக நிரையொடு தேர்மு றிந்தவே. 42
காலாட் படையின் அழிவு
[தொகு]446
- விருத ரிருதுணி பார்நி றைந்தன விடர்கள் தலைமலை யாய்நெ ளிந்தன
- குருதி குரைகடல் போற்ப ரந்தன குடர்கள் குருதியின் மேன்மி தந்தவே. 43
களத்தில் பேரொலி
[தொகு]447
- கரிகள் கருவிக ளோடு சிந்தின கழுகு நரியொடு காக முண்டன
- திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. 44
அனந்தவன்மன் தோற்று ஓடினான்
[தொகு]448
- புரசை மதமலை யாயி ரங்கொடு பொருவ மெனவரு மேழ்க லிங்கர்தம்
- அரச னுரைசெய்த வாண்மை யுங்கெட அமரி லெதிர்விழி யாதொ துங்கியே. 45
449
- அறியு முழைகளி லோப துங்கிய தரிய பிலனிடை யோம றைந்தது
- செறியு மடவியி லோக ரந்தது தெரிய வரியதெ னாவ டங்கவே. 46
கலிங்கர் நடுங்கினர்
[தொகு]450
- எதுகொ லிதுவிது மாயை யொன்றுகொல் எரிகொன் மறலிகொ லூழி யின்கடை
- அதுகொ லெனவல றாவி ழுந்தனர் அலதி குலதியொ டேழ்க லிங்கரே. 47
கலிங்கர் சிதைந்தோடினர்
[தொகு]451
- வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
- இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர் இருவ ரொருவழி போக லின்றியே. 48
452
- ஒருவ ரொருவரி னோட முந்தினர் உடலி னிழலினை யோட வஞ்சினர்
- அருவர் வருவரெ னாவி றைஞ்சினர் அபய மபயமெ னாந டுங்கியே. 49
குகைகளில் நுழைந்தனர்
[தொகு]453
- மழைக ளதிர்வன போலு டன்றன வளவன் விடுபடை வேழ மென்றிருள்
- முழைகள் நுழைவர்கள் போரி லின்றுநம் முதுகு செயுமுப கார மென்பரே. 50
கலிங்கம் இழந்த கலிங்கர்
[தொகு]454
- ஒருக லிங்கமொ ருவன ழித்தநாள்
- ஒருக லிங்கமொ ருவரு டுத்ததே. 51
== சோழர் யானை குதிரைகளைக் கைப்பற்றினர் -- 455
- அப்படிக் கலிங்க ரோட அடர்த்தெறி சேனை வீரர்
- கைப்படு களிறும் மாவுங் கணித்துரைப் பவர்கள் யாரே. 52
களிறுகளின் தன்மை
[தொகு]456
- புண்டரு குருதி பாயப் பொழிதரு கடமும் பாய
- வண்டொடும் பருந்தி னோடும் வளைப்புண்ட களிற நேகம். 53
457
- ஒட்டறப் பட்ட போரி லூர்பவர் தம்மை வீசிக்
- கட்டறுத் தவர்போல் நின்று கட்டுண்ட களிற நேகம். 54
458
- வரைசில புலிக ளோடு வந்துகட் டுண்ட வேபோல்
- அரைசருந் தாமுங் கட்டுண் டகப்பட்ட களிற நேகம். 55
சோழ வீரர்கள் கைப்பற்றியவை
[தொகு]459
- நடைவ யப்பரி யிரத மொட்டகம் நவநி திக்குல மகளிரென்
- றடைவ வப்பொழு தவர்கள் கைக்கொளும் அவைக ணிப்பது மருமையே. 56
கருணாகரன் கட்டளை இட்டான்
[தொகு]460
- இவைக வர்ந்தபி னெழுக லிங்கர்தம் இறையை யுங்கொடு பெயர்துமென்
- றவனி ருந்துழி யறிக வென்றனன் அபயன் மந்திரி முதல்வனே. 57
ஒற்றர்கள் தேடினர்
[தொகு]461
- உரைகள் பிற்படு மளவி லொற்றர்கள் ஒலிக டற்படை கடிதுபோய்
- வரைக ளிற்புடை தடவி யப்படி வனமி லைப்புரை தடவியே. 58
ஒற்றர்களின் பேச்சு
[தொகு]462
- சுவடு பெற்றில மவனை மற்றொரு சுவடு பெற்றன மொருமலைக்
- குவடு பற்றிய தவன டற்படை அதுகு ணிப்பரி தெனலுமே. 59
மலையை அடைந்தனர்
[தொகு]463
- எக்குவடு மெக்கடலு மெந்தக் காடும் இனிக்கலிங்கர்க் கரணாவ தின்றே நாளும்
- அக்குவடு மக்கடலும் வளைந்து வெய்யோன் அத்தமனக் குவடணையு மளவிற் சென்றே. 60
விடியளவும் வெற்பைக் காத்தனர்
[தொகு]464
- தோலாத களிற்றபயன் வேட்டைப் பன்றி தொழுவடைத்துத் தொழுவதனைக் காப்பார்போல
- வேலாலும் வில்லாலும் வேலி கோலி வெற்பதனை விடியளவுங் காத்து நின்றே. 61
மலை சிவந்தது
[தொகு]465
- செம்மலையா யொளிபடைத்த தியாதோ வென்றுஞ்
- செங்கதிரோ னுதயஞ்செய் துதய மென்னும்
- அம்மலையோ விம்மலையு மென்னத் தெவ்வர்
- அழிகுருதி நதிபரக்க வறுக்கும் போழ்தில். 62
சிலர் திகம்பரரானார்
[தொகு]466
- வரைக்கலிங்கர் தமைச்சேர மாசை யேற்றி
- வன்றூறு பறித்தமயிர்க் குறையும் வாங்கி
- அரைக்கலிங்க முரிப்புண்ட கலிங்க ரெல்லாம்
- அமணரெனப் பிழைத்தாரு மநேக ராங்கே. 63
சிலர் வேதியரானார்
[தொகு]467
- வேடத்தாற் குறையாது முந்நூ லாக
- வெஞ்சிலைநாண் மடித்திட்டு விதியாற் கங்கை
- ஆடப்போந் தகப்பட்டேங் கரந்தோ மென்றே
- அரிதனைவிட் டுயிர்பிழைத்தா ரநேக ராங்கே. 64
சிலர் புத்தத் துறவியரானார்
[தொகு]468
- குறியாகக் குருதிகொடி யாடை யாகக்
- கொண்டுடுத்துப் போர்த்துத்தங் குஞ்சி முண்டித்
- தறியீரோ சாக்கியரை யுடைகண் டாலென்
- அப்புறமென் றியம்பிடுவ ரநேக ராங்கே. 65
சிலர் பாணர் ஆனார்
[தொகு]469
- சேனைமடி களங்கண்டேந் திகைத்து நின்றேம்
- தெலுங்கரே மென்றுசில கலிங்கர் தங்கள்
- ஆனைமணி யினைத்தாளம் பிடித்துக் கும்பிட்
- டடிப்பாண ரெனப்பிழைத்தா ரநேக ராங்கே. 66
கலிங்க வீரர் முற்றும் அழிந்தனர்
[தொகு]470
- இவர்கண்மே லினியொருவர் பிழைத்தா ரில்லை
- எழுகலிங்கத் தோவியர்க ளெழுதி வைத்த
- சுவர்கண்மே லுடலன்றி யுடல்க ளெங்குந்
- தொடர்ந்துபிடித் தறுத்தார்முன் னடைய வாங்கே. 67
அடி சூடினான் தொண்டைமான்
[தொகு]471
- கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
- கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
- சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
- சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே. 68