560
சங்க இலக்கியத்
மரத்தின் சிறிய கொம்புகளில் பூத்த நறிய பூக்களைப் பறிக்கும் மகளிர், “புலி! புலி!” என்று பூசலிடும் ஆரவாரம் ஒருபால். இவற்றுடன் கரிய பன்றியைக் கொல்லுகின்ற புலியினது ஆரவாரம் ஒருபால் கேட்கும். மேலும் குறிஞ்சிக் காற்றறையில் இஞ்சி, மஞ்சள், மிளகு முதலிய பண்டங்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருக்கும் என்பார்.
அன்றி, குறிஞ்சிப் பண்ணைப் பரதவர் பாடுவர் என்று முடத்தமாக் கண்ணியார் கூறுவர். ‘குறிஞ்சிப் பரதவர் பாட’ (பொருந. 218). இது திணை மயக்கம்.
குறிஞ்சி, பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் என்ற கருத்து தமிழ் நாட்டில் நிலவி வருகின்றது. இஃது ஓர் தாவரவியல் உண்மையாகும். தமிழ்ச் சான்றோர் அளவிகந்து புனைந்துரையார் என்பது உண்மை. குறிஞ்சிப் பூ நன்றாகப் பூத்துள்ள நாளில், மலை முழுதும் அழகொழுகும். நல்ல நீலமாகக் காணப்படும். நீலகிரி இதனாற்றான் இப்பெயர் பெற்றது எனலாம். இக்காலத்தில் இம்மலைப்பாங்கில் வளரும் யூகலிப்டஸ் (Eucalyptus) மரத்தைப் புளு கம் (Blue Gum) என்று கூறி, இதனால், நீலகிரி இப்பெயர் பெற்றதென்பார். இது பொருந்தாது. இம்மரம் நீலமலையில் தொன்று தொட்டு வளர்ந்து வரும் மரமன்று. இது குறிஞ்சி பூக்கும் நீலமலையில் அண்மைக் காலத்தில் பயிரிடப்பட்டது. குறிஞ்சி தமிழ் நாட்டுக்குரிய செடி. (indigenous plant) ஆகும். இது இரண்டு முதல் மூன்றடி உயரம் வரை (60 முதல் 100 செ. மீ.) பல்லாண்டு வளரும் புதர்ச் செடியாகும். இதனைத் தாவர நூலார் ஸ்ட்ரொபிலாந்தெஸ் குந்தியானஸ் என்பர். தற்போது இதன் பெயர் பீலோபில்லம் குந்தியானம் என்று மாற்றப்பட்டுள்ளது என்று கோவையிலுள்ள இந்தியத் தாவர மதிப்பீட்டு மையம் அறிவித்துள்ளது. இப்பெயர் குறிஞ்சியின் வேறு பெயராக ஹூக்கர் குறிப்பிட்டுள்ளார். இது அக்காந்தேசி (Acanthaceae) என்னும் தாவரக் குடும்பத்தின் பாற்படும். பல்லாண்டுகள் வளர்ந்து முற்றுதலின் குறிஞ்சியின் தண்டு மிக வன்மையுடைத்தாக இருக்கும்.
“கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு”-குறுந். 3 : 2
“கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாட”-புறநா. 374 : 8
“கருங்கோற் குறிஞ்சி நும் உறைவின் ஊர்க்கே”-அகநா. 308 : 16
“கருங்கோற் குறிஞ்சி மதனில் வான்பூ”-நற். 268
“நீள்மலைக் கலித்த பெருங்கோற் குறிஞ்சி”-நற். 301 : 1
“கருங்காற் குறிஞ்சி சான்ற வெற்பணிந்து”-மதுரைக். 300