பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

ஜேம்ஸ் ஆலன்


குறிக்கோள்களை அடையும் விலையுயர்ந்த கருவியைக் கொண்டவனாகிறான். அவன் நிகழ்ச்சிகள் அனைத்திலும், குணவியல்பின் கேடுபயக்கும் தவறுகளுக்கு எதிராக முழு விழிப்புணர்ச்சியுடன் இருப்பான் எனின், எந்த நிகழ்ச்சி, எந்தச் சூழ்நிலை, எந்தப் பகைவன் அவனைப் பின்னொதுக்கிப் போரிட முடியும்? அவன் முறைப்படியான பயனைப் பெறுவதை எவைதாம் தடுத்துவிட முடியும்?

விடாமுயற்சி களிப்பையும், செழிப்பையும் தருகின்றது. ஊக்கஞ் செறிந்த ஆள்வினையுடையராய மக்களே சமூகத்தின் மகிழ்ச்சியுடைய உறுப்பினராவர். தேவைக்கு மிகுந்த பணம் படைத்திருத்தலையே செல்வமெனக் கொண்டால் அவர்கள் எப்போதுமே செல்வராயிருப்பதில்லை. ஆனால், அவர்கள் எப்போதும் சிறிதும் கவலையற்றவராய், களிப்புடையராய் இருக்கின்றார். தாம் செய்வதிலும் தம்மிடம் இருப்பதிலும் மிகுந்த மனநிறைவு காணுகின்றனர். எனவே, பெருமளவில் அருளுடையராய் இருப்பவரையே செல்வரெனப் பொருள் கொண்டால் அவர்களே செல்வராவர்.

மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள்களே மெருகேற்றப் பட்டதாயிருக்கின்றன. மிகுதியாக உழைப்பில் ஈடுபடுகின்ற மக்கள் தம் மெருகையும், மதிப்பாற்றலையும் நன்னிலையில் கொண்டிருக்கின்றனர். பயன் படுத்தப்படாத பொருள்கள் விரைந்து கறைபடுகின்றன; காலம் கொல்வோன், களைப்பாலும் பதனிழந்த பகற்கனவாலும் அழிக்கப் படுகின்றான். ஏனெனில், அறிவு, பயனுடை எனும் வண்மைகள் பெருகிய உலகில், தன் கையாட்சியில் குறுகிய வாழ்வைக் கொண்ட