5
முறைதவறாமல் - உறவு விட்டுப் போகாமல் - இருக்க சிறிதேனும் பொருத்தமில்லாத, ஏறு மாறான பண்புகளுடைய பெண்ணையும் ஆணையும் ஜோடிசேர்த்து விடுகிறார்கள். இதனால் இருவர் வாழ்வும் பாழாகிறது.
மாமன் மகனைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகிறவர்களும், அத்தைமகளையே மணம் செய்ய வேணும் என்று முறைக்குள் அடங்குகிறவர்களும், இம்மாதிரி உறவு முறை "முடிச்சுப் போட்டு" எப்படியாவது கல்யாணம் செய்துவைக்க ஆளாகிறவர்களும் இனைறைய சமுதாயத்தில் ஏராளம்.
'அத்தைமகள் வயதுக்கு மூத்தவளாக இருந்தாலும் பாதகமில்லை எத்தனை வயசு அதிகமோ அத்தனை புளியங்கொட்டையை முழுங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று 'பொட்டைக் கணக்கு' போட்டு 'அட்ஜஸ்ட்' செய்கிற மக்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல !
***
என்னத்தைச் சொல்வதற்கிருக்கிறது! நாட்டு நிலைமையே இந்த ரகம்தானே!
பிள்ளைப் பெறுவத்றகாக அரசமரத்தைச் சுற்றுபவர்களும், அர்ச்சனை பண்ணுகிறவர்களும், 'நாகப்பிரதிட்டணை' அது இது என்று வீண் செலவு செய்கிறவர்களும், சாக்கடையில் நெளியும் பிள்ளைப் பூச்சியை உயிரோடு விழுங்கிவிட்டால், பிள்ளை உண்டாகாமலிருப்பவள் கருத்தரித்து விடுவாள் என்றெல்லாம் மடத்தனமாக நம்பி அனுஷ்டித்து வருகிறவர்கள் பெருத்தநாட்டிலே அறியாமை அரசு செலுத்துவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ?