அங்கும் இங்கும்/கலையின் விளக்கம்

விக்கிமூலம் இலிருந்து
15. கலையின் விளக்கம்

கிடைத்தவர்கள் அத்தனை பேரையும் கொண்டு, எழுத்தறிவிப்பு இயக்கத்தைச் சட்டென்று நாடு முழுவதும் தொடங்கினார்கள். அப்போது அவர்கள் அரசியல் பொருளாதார நிலை எப்படி என்று கேட்டோம். எழுத்தறிவிப்பு இயக்கத்தைத் தொடங்கியபோது அரசியல் அமளி அடங்க வில்லை உள்நாட்டுக் குழப்பம் ஒரு பக்கம் வெளி நாடு களின் எதிர்ப்பு ஒரு பக்கம். பொருளாதார நிலையும் மோசம். இத்தனை இடையூறுகளுக்கு இடையிலேதான் அறிவுப் பேரியக்கம் வளர்ந்தது.

அலை ஒய்ந்து, தலை முழுகுவதென்றால் அது எப்போது முடியுமோ ? இடையூறுகளெல்லாம் நீங்கி, பொருள் குவிந்த பிறகே, பொது மக்களுக்குக் கல்வி என்றால் அது என்றைக்கு நடக்கும்?

சோவியத் ஆட்சித் தலைவர், தோழர் காலினின் அவர் களையே தலைவராகக் கொண்ட, எழுத்தறியாமை ஒழிப்புக் கழகத்தை அமைத்தனர். அக்கழகத்தில் ஐம்பது இலட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தனர். ஆகவே ஐம்பதினாயிரம் கிளை கள் தோன்றின. ‘அறியாமை அழிக’ என்ற முழக்கத்தை நாடு முழுவதும், ஊர்தோறும், வீடுதோறும் கலையின் விளக்கம் கண்டனர். எப்படி ?

உள்ளுர்க் கல்விக்கூடம், ‘கிளப்’, பொதுவிடம், எது கிடைத்ததோ, அங்கே, முதியோர் கல்விக்கூடங்களைத் தொடங்கினர் முதியோரைக் கொண்டுவந்து சேர்த்தனர்.

இம் முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை இருந்தது. தொடக்கத்தில் ஆண்களையே கல்விக் கூடங்களுக்கு இழுக்க முடிந்தது. வழிவழி வந்த பழக்கக் கொடுமையால் ‘கோஷா’ முறையால், குடும்பப் பொறுப்புச் சுமையால், பெண்கள் முதியோர் கல்விக்கூடங்களுக்கு அவ்வளவாகச் செல்ல வில்லை.

இதற்கு என்ன பரிகாரம் ? பெண்களின் வீடு தேடி, கல்வித் தொண்டர்கள் சென்றனர். அவரவர் வீட்டிலேயே. பாடங்கற்றுக் கொடுத்தனர். இரண்டொருவரே படிக்க வந்த போதிலும், அவர்களையும் ஒதுக்கிவிடாது பாடங்கற்றுக் கொடுத்தனர். எழுதப்படிக்க மட்டுமா கற்றுக் கொடுத்தனர்? இல்லை.

தாய்மார்களின் சிந்தையெல்லாம் குழந்தைகளைப் பற்றி யல்லவா ? குழந்தை வளர்ப்பைப் பற்றியும் குடும்ப நலனைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தனர் அன்றாட வேலைக்குப் பயனுள்ள, தையல், பின்னல் வேலைகளும் கற்றுக் கொடுத்தனர்.

முதியோர் கல்வி, குடும்பத்திற்குத் தேவையான அறிவை யும் திறமையையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதை உணர்ந்த பெண் இனம், மெல்ல மெல்ல அக்கல்வியின் பால் இழுக்கப்பட்டது. காலப்போக்கில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகக் கல்வி பெற்றனர். இன்று ஆணும் பெண்ணும் ஒரு நிறை.

நாடு முழுவதும் விழித்தெழுந்து, பெருந் தலைவர்களே, பெரும் பாடுபட்டுப் பல்லாண்டு தொடர்ந்து அறியாமையை அழிக்கப் பணிபுரிந்ததால், இன்று அந்நாட்டு மக்கள் ‘எங்கள் நாட்டில் எல்லாரும் எழுத்தறிவு பெற்றவர்கள்’ என்று பெருமிதம் கொள்கின்றனர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டல்லவா? இது மனமுண்டானால் இடமுண்டு என்பதையும் காட்டுகிறது இது.

“எய்தற் கரியது இயைந்தக்கால் அங்நிலையே
  செய்தற் கரிய செயல்”

என்ற குறள் இலக்கணத்திற்கு இக்கால இலக்கியமாக விளங்குவது, சோவியத் நாட்டின் எழுத்தறிவிப்பு இயக்கமாகும்.

‘பசி நோக்காது, கண் துஞ்சாது, செவ்வி அருமையும் பாராது, கருமமே கண்ணாயிருந்து’ முதியோர்க் கெல்லாம் எழுத்தறிவு ஊட்டினார்களே. அது எவ்வளவு தூரம் பச்சென்றிருக்கிறது ? அறிவுப்பயிர் பச்சென்றிருப்பதற்கு அடையாளங்கள் எவை ? இருது அடையாளங்களை நாம் அறிந்தோம்.

முதல் அடையாளம் அம்முதியோர்களின் தொடர் கல்வி. கனவுகூட காணாத எழுத்தறிவு எப்படியோ கிட்டிவிட்டது. இது போதுமே’, என்று அங்குள்ள முதியோர் இல்லை. ஆணாயினும் சரி, பெண்ணயினும் சரி, மூன்று நான்கு திங்களில் பெற்ற எழுத்தறிவின் துணை கொண்டு மேலும் படித்தனர். ஏழெட்டு மாதங்களில் நன்றாகப் படிக்கக் கற்று கொண்டனர். பின்னரும் தொடர்ந்து படித்து எட்டாவது, பத்தாவது தேறிய முதியோர்களை ஏராளமாகக் காணலாம்.

“பாட்டாளிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதாதா? என்று கருதுவதில்லை. வெறும் பாட்டாளியாகத் தொடங்கிய முதியோர், நுட்பத் தொழிலாளியாக, நிபுணராகத் தகுதி தேடிக் கொண்டு உயர்வது அந் நாட்டில் சாதாரணமாகக் காணக் கூடியது.

உயர் தொடக்கக் கல்வி ; உயர்நிலைக் கல்வி, கல்லுரரிக் கல்வி ஆகிய பொதுக் கல்வி தவிர, ஏறத்தாழ முந்நூற்று இருபது, ‘தனிக் கல்வி’ வகைகள் சோவியத் நாட்டில் இருக்கின்றன.

இக்கல்லி வகைகளைப் பெறுவோர் அனைவரும் படிப்பைத் தவிர வேறு வேலை செய்யாத முழு நேர மாணவ மாணவியரா ? இல்லை.

முழு நேர மாணவரை விட, அலுவலிலோ தொழிலிலோ இருந்துகொண்டே, பகுதி நேரக் கல்விக்கூடத்திலோ, அஞ்சல் கல்விக்கூடத்திலோ சேர்த்து படிப்போரே அதிகம் பேர்.

பகுதி நேரக் கல்வி முறையும் அஞ்சல் கல்வி முறையும் மிகப் பரவலாக இருப்பதனால் மட்டுமே, இத்தனை ஏராள மானவர்களுக்கு, மூன்றில் ஒருவருக்கு ‘ஏழு கோடியே எழுபது இலட்சம் மக்களுக்கு, கல்வி வசதி செய்து கொடுக்கும் சுமையைத் தாங்க முடிகிறது. முதியோர் கல்வி பளிச்சென்று வளர்வதற்கு இரண்டாம் அடையாளம் ‘தனிக்கல்வி’ ஈடுபாடு ஆகும்.

பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும் குறிப்பிட்ட நோக்கத்தைக் கொண்டவை-பயிற்சி அளிப்பதையோ, சான்றிதழ் வழங்குவதையோ, நோக்கமாகக் கொண்டவை. பகுதி நேரக் கல்வியும், அஞ்சல் முறைக் கல்வியும்-அமைப்பு முறைக் கல்வி குறிப்பிட்ட பயிற்சியையோ, சான்று இதழையோ நினைவில் கொண் டது. அமைப்பு முறைகளுக்கு அப்பால், தன்னிச்சையாக நடக்கும் கல்வி ஒன்றுண்டு. அது எது ?

அது நூல் படிப்பு. தாமே விரும்பி நூலை விலை போட்டு வாங்கிப் படிப்பதும், நூலகத்திலிருந்து நூலைக் கடன் வாங்கிப் படிப்பதும் அமைப்பில் அடங்காக் கல்வி. இத்தகைய கல்வியும் பெருமளவில் நடக்கிறது.

சோவியத் நாட்டில் நூல்கள் வெளியீடு மிக அதிகம். நூல்கள் வெளியானதும் விரைவிலே விற்று விடுகின்றனர். மக்கள் ஆர்வத்தோடு நூல்களை வாங்குகின்றனர். ஆட்சி யாளரும் ஆர்வத்தோடு ஊக்குவிக்கின்றனர். எப்படி ? நூல்களின் விலை மலிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதால்.

சோவியத் மக்களின் படிப்பார்வம் எத்தகையது ?

வெளியாகும் நூல்களில் நூற்றுக்கு இருபதையே சாதாரண மாகப் புரட்டிக்கொண்டே படித்துவிடலாம், மற்ற எண்பதும் கவனித்துக் கற்க வேண்டிய 'சீரியஸ்' பொருள் உடையவை என்பதை விளக்கினார்கள்.

சோவியத் மக்கள், மிகப் பெரும் அளவில் பொருள் உடைய நூல்களையே வாங்கியோ, எடுத்தோ படிக்கிறார்கள்; மக்கள் கல்வி வீண் போகவில்லையென்பதற்கு, இது மற்றோர் அடையாளம்.