அங்கும் இங்கும்/மெய்யான செல்வம்

விக்கிமூலம் இலிருந்து



9. மெய்யான செல்வம்

சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.

அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் ?

சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஸ்டாலின் ஆகிய மூவர். அவர்கள் அங்குக் கூடினர். உலகப் போரை வெற்றிகரமாக முடிப்பதைப் பற்றித் திட்டமிட்டனர். வெற்றிக்குப் பிறகு, உலக அமைதிக்கு என்னென்ன செய்யவேண்டுமென்றும் கலந்து ஆலோசித்தனர். விரிவாகத் திட்டமிட்டனர்.

தலைவர்கள் கூடிய அந்நகருக்கு, தொண்டர்களாம், கல்வித் தொண்டர்களாம், நாங்கள் மூவரும் போய்ச் சேர்ந்தோம்.

அந்நகருக்குப் பல கிலோமீட்டர் துரத்திலிருந்தே, கருங்கடலை அடுத்து, பலப்பல பெரிய அழகிய மாளிகைகளையும் கட்டிடங்களையும் கண்டோம். அதோ அந்த மேட்டிலே தெரிகிறதே அம்மாளிகை....கோமகனுடையது. அது அந்தக் காலம் பிரபுத்துவம் போய்விட்ட காலம் இது. இப்போது, அம்மாளிகை.......நெம்பர் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நலவிடுதி”

“இதோ கடலை யொட்டியுள்ள கடலகம், முன்பு ஒரு கோடீசுவரனுடைய மாளிகை.இன்று ஆசிரியர்கள் நலவிடுதி,” இப்படிப் பல பெரிய கட்டிடங்களை சுட்டிக் காட்டினார். எங்களைச் சிம்பராபல் விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனவர் ஒவ்வொரு சாராருக்கும் ‘நலவிடுதி’ என்று குறிப்பிட்டு வந்தார்.

“ நலவிடுதி என்றால் என்ன?” எனும் ஐயத்தைக் கிளப்பினோம்

“உடல் நலத்திற்கேற்ற தட்ட வெப்பநிலையும், நற்காற்றும், இயற்கைச் சூழ்நிலையும் உடைய பல மலையூர்களையும் கடற்கரைப் பட்டினங்களையும் ஆரோக்கிய ஆஸ்ரமங்களாகக் காத்து வருகிறார்கள். பலதுறைகளிலும் பாடுபடும் பாட்டானிகளும், அலுவலர்களும் ஊழியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் அத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கி ஒய்வு பெறுவார்கள். உடல் நலத்தோடும் உள்ள ஊக்கத்தோடும் வேலைக்குத் திரும்புவார்கள். இதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆரோக்கியபுரியிலும் வெவ்வேறு பிரிவுத் தொழிலாளருக்கென்றும் தனித்தனி விடுதி உண்டு.

“எடுத்துக்காட்டாக இரயில்வே தொழிலாளிகளுக்கென்று அவர்கள் தொழிற்சங்கத்தின் பராமரிப்பில் விடுதி அமைத்திருப்பார்கள். அதேபோல மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் விடுதி அமைத்திருப்பார்கள். ஆலை தொழிலாளர்களுக்கென்று ஒரு விடுதி இருக்கும் ஆசிரியர்களுக்கென்று, அவர்கள் சங்கம் ஒரு விடுதியை நடத்தும். 

“இப்படி நாடு முழுவதும், பல ஊர்களில், பல பிரிவினருக்கும் விடுதிகன் இருப்பதால், எளிதாக அதிகச் செலவில்லாமல், விடுமுறை விடுதிகளால் நலம் பெறுகின்றனர் எங்கள் மக்கள்” - இது தோழரின் பதில்.

கருங்கடலைச் சுற்றி இத்தஃகைய நலவிடுதிகள் ஏராளம். இங்கு, அச்சமின்றி கடல் நீராட ஏராளமான இடங்கள் இயற்கையாக அமைந்துள்ளனவாம். கருங்கடலும் அதிக கொந்தளிப்பு இல்லாதது. நாங்கள் சென்றபோது பெரிய ஏரிகளில் வீசுகிற அளவு அலைகூட இல்லை. பல இடங்களில் கரையிலிருந்து நெடுந்தூரத்திற்கு ஆழம் மிகக் குறைவு. எனவே ஆபத்தின்றி கடல் நீராடலாம்.

இதை அறிந்து, நாங்கள் அதற்கேற்ற உடையோடும். மனப்போக்கோடும் யால்டா பேய்ச் சேர்த்தோம். அங்குப்போ ய்ச் சேர பிற்பகல் ஆகிவிட்டது. ஆகவே, உண்டு, சிறிது இளைப்பாறி விட்டு, ஊர் கற்றிப் பார்த்தோம்.

பின்னர் துறையொன்றிற்குச் சென்றோம்; வழியிலே வயோதிகர் ஒருவர் எங்களைக் கண்டார்; வழிமறித்தார்.

அவர் பழுத்த பழமாக இருந்தார்; எங்களுடன் வந்த அம்மையாரை - இந்தியப் பெண்மணியை - உற்றுப் பார்த்தார். கண்ணிர் பொலபொலவென்று உதிர்ந்தது. “பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஒரே மகளைப் போலவே நீர் இருக்கிறாய் அம்மா ! நீ வாழ்க!” என்று தலைமேல் கையை வைத்து வாழ்த்தினார். தம்மோடு ஒட்டலுக்கு வந்து தேநீர் அருந்தும்படி வேண்டினார். இவற்றை எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்ன மொழிபெயர்ப்பாளர் எங்கள் பணிவான மறுப்பை அப்பெரியவருக்குச் சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார்.

பெரியவரின் கண்ணி, என் துக்கத்தை எனக்கு நினைவு படுத்திவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, மற்றவர் காணாவண்ணம் சமாளித்துக் கொண்டேன். படகுத் துறையைச் சேர்ந்தோம். மோட்டார் படகொன்றில் ஏறி,கருங்கடலில் பல மணிநேரம் பயணஞ் செய்து திரும்பினோம். இனிய, அதிகக் குளிரில்லாத நற்காற்று எங்களை உற்சாகப்படுத்தியது

மொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியும். ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள். என்னுடன் வந்த இந்திய நண்பர்கள் இருவரும் அதைக் கேட்பதும், நோட்டம் பார்ப்பதும், கேள்வி கேட்பதுமாக இருந்தார்கள். பெரியவரின் கண்ணீரால் சென்னைக்குத் திருப்பப்பட்ட என் சிந்தனை,தமிழ் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

காலஞ்சென்ற அழகப்ப செட்டியார் தமது கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் சென்று தங்கி மகிழ்வதற்காக, கோடைக்கானலில் பங்களா ஏற்பாடு செய்திருந்தது கண் முன்னே நின்றது. அதை ஆசிரியர்கள் பயன்படுத்தாது என் நினைவிற்கு வந்தது. நம் கல்லூரிப் பேராசிரியர்களிடம்கூட, விடுமுறைகளை ஆரோக்கிய புரிகளில் கழிக்கும் மனப்போக்கோ அதற்கான பொருள் நிலையோ இல்லையே என்று ஏங்கிற்று உள்ளம். நம் பிஞ்சுகளையாவது வறுமையின்றி, வாட்டமின்றி துள்ளி வளர வழிசெய் என்றது மனசாட்சி. பள்ளிப்பகலுணவும் சீருடையும் மின்னின. அதற்கும் குறுக்குச்சால் ஓட்டிய நல்லவர்களெல்லாரும் மின்னி நகைத்தனர்.

'அப்பா ! கவலைப்படாதீர்களப்பா ! இங்கு நல்லது செய்யவும் மாட்டார்கள் ; செய்கிறவர்களை சும்மா விடவும்மாட்டார்கள். இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று, என் மறைந்த மகன் வள்ளுவன் சொன்னதும் மின்னி, உறுதியை வளர்த்தது.

தமிழ்நாட்டின் அரைத்த மாவுப் பேச்சாளர்கள் சிலர், பகலுணவுத் திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு, 'பஞ்சர்' செய்ய முயன்றபோது, அவன் எனக்குக் கொடுத்த ஊக்க ஒலி அது.

இன்னும் தமிழ்நாட்டில் எங்கெங்கோ பாய்ந்தது. என் சிந்தனை, எத்தனையோ நிகழ்ச்சிகளையும், ஆள்களையும் பிடித்து, விட்டுத்தாவி, மீண்டும் 'யால்டா' வர நெடுநேரமாகிவிட்டது. இதற்குள் படகு திரும்பி வந்து துறையில் நின்றது. வழிகாட்டி ஆண்மகன்-படகிலிருந்து கரைக்குத் தாண்டிக் குதித்தார். நாங்கள் பத்திரமாக இறங்கி வந்தோம்.

அடுத்த நாள் காலை கடலில் குளிக்கத் திட்டமிட்டோம். எங்களோடு சேர்ந்து குளிக்கும்படி வேண்டினோம், வழி காட்டியை. தாம் வந்து எங்களைக் குளிக்க அழைத்துப் போவதாகவும், ஆனால் தாம் எங்களோடு குளிப்பதற்கு இல்லை என்றும் மறுத்தார். நாங்கள் இரண்டொரு முறை வற்புறுத்தினோம். உறுதியாக உணர்ச்சி ஏதும் காட்டாமல் மீண்டும் மீண்டும் மறுத்தார்.

அடுத்த நாள் கலை கடல் நீராட , எங்களை அழைத்துப் போக வந்தார் வழிகாட்டி. அவரை எங்களோடு சேர்ந்து நீராடும்படி மீண்டும் வேண்டினோம். அப்போது கூறின பதில் எங்களைத் திடுக்கிடச் செய்தது. நம்ப முடியவில்லை அச்செய்தியை ஏன் ? அப்போதும் சரி, அதற்கு முன்பும், துக்கத்தின் சாயலை அவரிடம் காணவில்லை. அச்சத்தின் நிழல் படரவில்லை அவர் அழகு முகத்தில்.

தமது கால்களில் ஒன்று பொய்க்கால், என்று அவர் கூறிய போது அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியாவென்று வியந்தோம். சென்ற உலகப் போரில், ஈடுபட்டு, காலை இழந்துவிட்டதாக விளக்கம் கூறினார். பின்னர் பொய்க்கால் பெற்றார். அதனோடு வாழ்கிறார். அவரது நடையில் பொய்க்கால் நடையென்று சந்தேகப்படுவதற்கு இல்லாமல் சாமர்த்தியமாக நடந்துகொண்டு வந்தார், அவ்விளைஞர்-அல்ல. முப்பத்தைந்து நாற்பது வயதுடைய-அவர்.

“போரிலே ஈடுபட்டு ஊனப்பட்ட யாரும் சுமையாக உட்கார்ந்ததில்லை. பரிகாரம் தேடிக்கொண்டு, ஏதாவது ஒரு வேலைக்குப் பயிற்சி பெற்றுத் தாமே உழைப்பதைக்காணலாம். அத்தனை பேருடைய உழைப்பும் நாட்டின் வளத்திற்குத் தேவை. பலரும், சென்ற காலத் தியாகத்தைக் காட்டி, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால், நாட்டில் வளர்ச்சியும் வளமும் எப்படி ஏற்படும் ?” இது, அவரது படப்பிடிப்பு

எங்களிலே ஒருவருக்குக் காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதைச் சாக்காகக் காட்டி, நாங்களும் குழாய் நீராடி, உண்டுவிட்டு, ‘ஆர்டெக்’ மாணவர் நலவிடுதிக்குச் சென்றோம்.

ஆர்டெக் மாணவர் இல்லத்தைக் காணும் பொருட்டே நாங்கள் இவ்வளவு நெடுந்தூரம் வந்தோம். நாங்கள் சென்ற போது உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், நீராடிவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் எங்களைக் கண்டதும் வணக்கம் கூறிவிட்டுச் சென்றனர்.

இல்லப் பொறுப்பாளர், எங்களை அழைத்துக் கொண்டு போய் பல இடங்களையும் காட்டினார்; இந்த இல்லம் கருங்கடல் கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அறுநூறு பேர் ஏககாலத்தில் தங்கக்கூடிய அளவில் விடுதி ஒவ்வொன்றும் இருந்தது. இப்படி மூன்று விடுதிகள்.தனித்தனியே அவை வளைவுக்குள் இருந்தன. நான்காவது விடுதியொன்றை கட்டிக் கொண்டிருந்தனர். அது முடிந்தால் 2400 பேர் ஒரே நேரத்தில் தங்கலாம்.

இவை, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக தனித் தனியே ஒதுக்கப்பட்டவை. இருபாலரும் அங்கு தங்கியிருக்கக் கண்டோம். இது, நாடு முழுவதற்குமான, மாணவர் இல்லம். ஆகவே பல இராச்சியங்களிலிருந்தும் இங்கு வந்து தங்குகிறார்கள். பதினைந்து நாள்களுக்கு மட்டுமே இங்குத் தங்கலாம். ஆண்டு முழுவதும் இல்லம் திறந்திருக்கும். ஆண்டு முழுவதும், இல்லம், விடு முறையின்றி நிறைந்திருக்கும்.

மாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல. பள்ளிப் படிப்பிலோ, விளையாட்டிலோ சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியரே இங்கு வரலாம். அந்நிலை பெற்றவர்களுக்கு, முறைப்படி இடம் கிடைக்கும். எந்த மாதத்தில் என்று சொல்லமுடியாது. விடுமுறைக் காலத்தில் இல்லாமல் பள்ளிக்கூட காலத்திலும் முறை வரலாம்.

“பள்ளிக்கூட காலத்தில் பதினைத்து நாள் அங்கு வந்து விடுவதால் படிப்புக் கெட்டுப் போகாதா?” இக்கேள்வியைக் கேட்டோம்.

அங்குள்ள முழு உயர்நிலைப்பள்ளியைக் காட்டினர். எல்லா வசதிகளும் உள்ள பள்ளி அது. போதிய ஆசிரியர்களும் கருவிகளும் உள்ள பள்ளி அது. பாடம் நடந்துகொண்டிருக்கும் பள்ளி அது. சிறப்பிடம் பெறாதவர்களுக்கு அங்குத் தங்க வாய்ப்பு இல்லையா ? உண்டு நூற்றுக்கு இருபது இடத்தை அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் வருகிறவர்கள் செலவிற்குப் பணம் கொடுக்க வேண்டும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இலவசத் தங்கல், உணவு.

கடற்கரைக்குச் சென்றோம். மாணவ. மாணவியர் பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடன் இருந்து கற்றுக் கொடுத்தார்கள். அங்கு ஆழமும் இல்லை; அலையும் இல்லை. அரை கிலோ மீட்டர் துரங்கூட அப்படியே இருக்குமாம். ஆகவே, மூழ்கிப் போவோமோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியோடு அவர்கள் நீந்தப் பழகிக் கொண்டிருந்தனர்.

இல்ல வளைவில் ஒருபால், பலர் பாடல்கள் பயின்று கொண்டிருந்தனர்; மற்றொருபால், பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்; சிலர் ஓடி வந்து எங்களைப் படமெடுத்தனர்.

இதைப் போன்ற மாணவர் இல்லம் சில, இராச்சியம் தோறும் உண்டாம். வளரும் மாணவர், மகிழ்ச்சியோடும், உடல் நலத்தோடும், உள்ள ஊக்கத்தோடும் வளர வேண்டும் என்பதில் தான் எத்தனை அக்கறை! எத்தனை கவனம் !

அடுத்த நாள், 'யால்டா' விலிருந்து கீவ் நகரத்திற்குப் புறப்பட்டோம். 'சிம்பராபல்' நகர விமான நிலையம் வரை வந்தார் வழிகாட்டி. பேச்சு பலவற்றின் மேல் பறந்தது.

“மெய்யான செல்வம் மக்கட் செல்வமே. குழந்தைகள் குழந்தைகளாக மகிழ்ந்தாட வேண்டும், சிறுவர் சிறுமியர் சுமையேதுமின்றிச் சிரிப்போடும் துடிப்போடும் துள்ளி வளர வேண்டும். இளைஞர் இணையற்ற ஊக்கத்தோடும் அறிவோடும் ஆர்வத்தோடும் வளரவேண்டும். வாலிபர் வலிமை மிக்கவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, கூடித் தொழில் புரிபவர்களாக, பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டியதை யெல்லாம் செய்து வருகிறார்கள். எங்கள் நாட்டில்...”-வழிகாட்டி பேச்சை முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.

இவ்வளவு நன்முயற்சிகளுக்கிடையில், போர் என்ற பெயரால், எத்தனை உயிர்களைப் பலியாக்கி விடுகிறோம். எத்தனை காளையர் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அவதிப்படுகிறார்கள். நல் வளர்ச்சி ஒரு பக்கம். பெரும் அழிவு ஒரு பக்கம். என்ன உலகம்” என்று அங்கலாய்த்தேன்.

“ஆம். போர், பெருங்கொடுமை. அது கொள்ளும் பலி, பல இலட்சம். அது விட்டுச் செல்லும் ஊனர்கள் அதைவிட அதிகம். இதைவிடக் கொடுமை-பெருங்கொடுமை-ஒன்று மில்லை. இதை நாங்கள் அண்மையில் அனுபவித்தவர்கள். ஆகவே, அமைதியை, ஆர்வத்தோடு விரும்புவர் ' என்று பரவசத்தோடு பகன்றார்.

சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா ? சண்டையால் உலகம் உடைவது நன்றா? சண்டையால் நொண்டியாவது நன்றா?