உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலகத்தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜினிவாவில் முதல் நாள்

29

திற்கு இரு பக்கமும் மலைத் தொடர். பனிமலைத் தொடரும் கண்டோம். அதற்குப் பெயர் ஆல்ப்ஸ் மலைத் தொடர். மலையுச்சியிலும், பள்ளத் தாக்குகளிலும் ஊர்கள் தென்பட்டன. அப்பகுதியில் மலைக் காட்சி ரம்மியமானது. எங்கும் பசுமைத் தோற்றம். உயர்ந்த மரக் காடுகள் இருபக்கங்களிலும் அழகிய மலைக் காட்சிகளைக் கண்டுகொண்டே இருக்கையில் ஜினிவாவை நாங்கள் நெருங்கிவிட்டோம். அதற்கான அறிவிப்பு வந்தது. அவர்கள் ஆணைப்படி இருக்கைக் கச்சையைக் கட்டிக்கொண்டோம். புகை பிடித்துக் கொண் டிருந்தவர்கள் சிகரெட்டை அணைத்து விட்டார்கள்.

கீழே நீர் மயம். அது ஜினிவா ஏரி. அதன் நீளம் 96 கிலோ மீட்டர்கள். அதன் தென் கரையில் ஜினிவா நகரம் உள்ளது. கரையோரம் முழுதும் சிற்றுார்கள். நகரங்கள். ஏரியில் ஏராளமான படகுகள் மின்னின. இதுவும் பார்க்கத்தக்க காட்சி.

பிராங்க்போர்ட்டிலிருந்து ஜினிவாவிற்குப் போய்ச் சேர ஐம்பத்தைந்து நிமிடங்களே பிடித்தன. இதற்கிடையில் சிற்றுண்டி-பலமான உண்டியே பரிமாறினார்கள். ஆனால் எனக்குப் பயனில்லை. ஏன்? மரக்கறிச் சிற்றுண்டி இல்லை. அதற்கான தகவல் வரவில்லையென்று தங்களுக்கு வந்த குறிப்பினைப் பார்த்து விட்டுக் கையை விரித்துவிட்டார்கள். நல்ல வேளையாகக் காப்பியும் பிஸ்கோத்தும் கைகொடுத்தன.

ஜினிவா நகரம், ஏரியின் கரையில் அமைந்துள்ள அழகிய நகரம்; பெருநகரமன்று, அதன் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்குக் காரில் செல்லுவதானால் பதினைந்து நிமிடங்களுக்குமேல் தேவை இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/28&oldid=480554" இலிருந்து மீள்விக்கப்பட்டது