உமார் கயாம்/புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்

விக்கிமூலம் இலிருந்து

(Upload an image to replace this placeholder.)

1. புத்தகப் பித்தனிடம் பூங்கொடியின் உள்ளம்

பழைய நிஜாப்பூர் நகரத்தில், பழைய புத்தகக் கடைகள் நிறைந்த ஒரு பஜார். புத்தக வியாபாரிகள் தூங்கி விழுந்து கொண்டிருந்தார்கள். வீதியில் பெண்கள் தங்க வாத்துகளைப் போல, தண்ணிர் ஜாடிகளுடன் போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒரு பழைய புத்தகக் கடையில் ரோஜா மொட்டைப் போல யாஸ்மி உட்கார்ந்திருந்தாள்.

யாஸ்மி ஒரு சின்னப் பெண். வயது பனிரெண்டிருக்கும். தலையில் ஒரு சின்ன முக்காட்டைப் போட்டுக் கொண்டு அவளுடைய தகப்பனாருடைய புத்தகக் கடையில் உட்கார்ந்திருப்பாள்.

அவளுக்கு ஓர் ஏக்கம். வீதியில் போகிற ஒரு பையன் கூடத் தன்னைக் கவனிப்பதில்லையே என்பதுதான் அது. சில சமயம் அவளுக்குத் தன் வீட்டில் உள்ளவர்கள் மேலேயே கோபம் கோபமாக வரும். வீட்டில் ஏதாவது வேலையாயிருந்தால்தான் அவளைப் பற்றி நினைப்பார்கள். இல்லாவிட்டால் கவனிப்பதேயில்லை. தகப்பனாருக்குப் புத்தகங்களும் அவற்றின் விலை மதிப்பும்தான் பெரிது. பெண் பெரிதல்ல.

எல்லோரும் தன்னை அலட்சியப் படுத்துவதற்கு என்ன காரணம்? அவள் அழகாக இல்லையா? இல்லை. அவள் இன்னும் பெரியவள் ஆகவில்லையாம்.

அவள் மட்டும் பெரிய முக்காடாகப் போட்டுக் கொண்டு, பெண்கள் வசிக்கும் அந்தப்புரப் பகுதியிலேயே யிருந்தால் அவளை எட்டிப் பார்க்க எத்தனை பையன்கள் ஆசைப்படுவார்கள். இப்பொழுது அவள் தகப்பனாருடைய புத்தகக் கடையில் இருந்துகொண்டு அவருக்கு, அதையிதை எடுத்துக் கொடுப்பதும், உள்வீட்டுக்கும் கடைக்கும் தூது போவதற்கும் உதவியாக இருந்தாள். சும்மாயிருக்கிற நேரங்களிலே, ஏதாவது துணியை எடுத்துக் கொண்டு பூப்பின்னுவாள். அவளிடம் சாம்பல் நிறமான பூனைக்குட்டி இருந்தது. அதனுடன் விளையாடுவதும் உண்டு.

 அவர்களுடைய புத்தகக் கடையில் எல்லாவிதமான பழைய புத்தகங்களும் இருக்கும். அந்த வீதியிலே புத்தக வியாபாரிகள் அதிகம். காரணம், அந்த வீதியின் கோடியில்தான் பள்ளி வாசலும், அதையடுத்து ஒரு பள்ளிக் கூடமும் இருந்தன. பள்ளிக்கூடம் விட்டதும் பையன்கள் கத்திக் கொண்டே ஓடுவார்கள். இது யாஸ்மிக்குப் பிடிக்காது. சில சிறுவர்கள் புத்தகக் கடைக்கு வருவார்கள். அவளுடைய தகப்பனார், புத்தகங்களின் முக்கியமான பகுதிகளை அவர்களுக்குப் படித்துக் காட்டுவார். அப்போதெல்லாம் யாஸ்மி அவற்றைக் கவனிப்பாள். ஆனால், புரிந்துகொள்ள முயற்சிப்பதுமில்லை. கண்ணுக்குத் தெரியாத எவரெவரையோ பற்றியும் அவர்கள் முன்னே தொங்கும் திரையைப் பற்றியும், இரவு நேரத்திலே ஆகாயத்தில் தோன்றும், அதிசய வாத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டியது, ஆடவர்களின் வேலையாக இருக்கலாம். ஒரு பெண்ணுக்கு அதில் என்ன அக்கறை வேண்டியிருக்கிறது? பெண்ணுக்கு ஆத்மா இல்லையென்று கருதப்படுகிறபொழுது அவள் வாழ்வு முடிந்தபின், பூனையும் குதிரையும் போகிற இடத்திற்குப் போய்ச் சேர வேண்டியது தானே? ஐந்து வேளையும் அயராமல் தொழுகை புரியும் ஆடவர்கள் போகும் இடத்துக்குப் போக முடியுமா?

அப்படி வருகிற பையன்களிலே, வயது வந்த இரண்டு பையன்கள் அடிக்கடி அவர்களுடைய புத்தகக் கடைக்கு வருவதும் ஏதாவது புத்தகங்கள் வாங்குவதும் பழக்கம். அவர்களிலே உயரமாக இருந்தவன் பெயர் ரஹீம்.

ரஹீம்சேடா என்பது அவன் முழுப் பெயர். அவனுடைய தந்தை நிஜாப்பூரிலே ஒரு நிலச்சுவான்தார். ரஹீம் அழகாக இருப்பான். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஒரு நாள் ரஹீம் அவர்கள் கடையில் ஒரு புத்தகம் வாங்கினான். அந்த புத்தகத்தின் அட்டையில், ஒரு சுல்தான் படம் போட்டிருந்தது. சுல்தான் குதிரை மீது இருந்தபடி, வாளை வீசி, ஒரு மதவிரோதியான மேலை நாட்டானின் கழுத்தைச் சீவிக் கொண்டிருக்கிறான். அந்தப் படம் ரஹீமுக்கு அதிகம் பிடித்ததாக இருக்க வேண்டும். அந்தப் படத்துக்காகவே அவன் அதை வாங்கியிருக்கவும் கூடும்.

ஆனால், சுல்தான், சண்டை, மத விரோதி போன்றவையெல்லாம் ஆடவர் உலகத்தைச் சேர்ந்த விஷயங்கள். யாஸ்மிக்குப் புரியாதவை. புரிந்தாலும் பயனில்லாதவை.

அவள் நேருக்கு நேரே பார்த்ததெல்லாம் சில சமயங்களில் அந்த வீதி வழியாகப் போகும் ராஜ அமீர்தான்! வெள்ளைக் குதிரையொன்றின் மீது வீரவாளுடன் செல்லும் அமீரைத்தான் அவள் பார்த்திருக்கிறான். அந்த அமீர், ராஜ உடையும், வெல்வெட்டுப் பட்டயமும் அணிந்திருப்பான். அவனைத் தொடர்ந்து, பத்துப் பன்னிரெண்டு துருக்கிய வீரர்கள் தூக்கிப்பிடித்த வாளுடன் செல்வார்கள்.

யாஸ்மி, தன் கணவனாக வருபவனும் அந்த அமீரைப் போல் இருக்கவேண்டுமென்று கனவு கண்டிருக்கிறாள். என்றாவது ஒரு நாள் வீதியிலே செல்லும் இளவரசனான அவன், தன்னைப் பார்த்துத் தன் அழகில் மயங்கித் தன் தகப்பனாரிடம் வந்து பெண் கேட்பான். வெள்ளிக் காசுகளும் ஒளி வீசும் நவரத்தினக் கற்களும் அள்ளி அள்ளித் தன் தகப்பனாருடைய பையில் கொட்டி நிரப்பி விட்டுத் தன்னையும் அந்த அழகான வெள்ளைக் குதிரையிலே தூக்கி வைத்துக் கொண்டு போய்விடுவான். ஆற்றங்கரையின் அருகிலே உள்ள அரண்மனையொன்றிலே தன்னைக் கொண்டுபோய் ராணி போல் வைத்திருப்பான். அங்கே தெள்ளிய நீர் தடாகங்கள் இருக்கும். அவற்றிலே வெள்ளை நிற அன்னப் பறவைகள் மிதந்து வரும். வாசலுக்கு வாசல் பலகணிக்குப் பலகணி பட்டுத் திரைச் சீலைகள் கட்டித் தொங்கவிடப் பட்டிருக்கும். வெள்ளித் தட்டுக்களிலே விதவிதமான பழங்களைக் கொண்டு வரும் வேலைக்காரிகள் அவள் ஆணைக்குக் காத்துக் கிடப்பார்கள். வெள்ளைக் குதிரை வீரனான அந்த இளவசரன் உள்ளங் கொள்ளை கொண்ட தன்னையே சுற்றிச் சுற்றி ஓடி வருவான். மற்ற மனைவிகளை மதிக்க மாட்டான். தனக்குப் பிறக்கும் குழந்தைகளையே அதிகமாக நேசிப்பான். இவ்வளவிருந்தும், அவன் சிரிப்பதே கிடையாது. இளவரசர்கள் சிரிப்பதில்லை போலிருக்கிறது! வீதியில் எப்போதாவது போகும் அந்த அமீர் சிரிப்பதேயில்லையே? ஆனால் இந்த ரஹீம் மட்டும் அதிகமாகச் சிரிக்கிறானே...?

 ரஹீமை அந்த அமீரோடு யாஸ்மி ஒப்பிட்டுப் பார்த்தாள். ரஹீம் ரஹீமாகவே இருந்தான். அமீர் ஆகவில்லை! இருந்தாலும் ரஹீம் நல்லவன். நல்லவன் மட்டுமல்ல, செல்வக் குடியில் பிறந்தவன். அவனுக்காக ஓடி ஒடி வேலை பார்க்க எத்தனையோ அடிமைகள் இருக்கிறார்கள். அவனை யாஸ்மிக்குப் பிடித்திருந்தது. ஆனால், அவன் கூட வருகிறானே, ஒரு நண்பன் அவனைக் கண்டால் அவளுக்குப் பிடிக்கவேயில்லை. அந்தப் பையன் அவளை ஏறிட்டுப் பார்ப்பதேயிலை. எப்பொழுதும் ஊமை போலவே இருப்பான். எதுவும் பேசுவதேயில்லை. அவன் இப்ரஹீமின் பிள்ளையாம். அவன் ஒரு புத்தகப் புழு. கடுகடுவென்ற முகத்தோடு எப்பொழுது பார்த்தாலும் புத்தகங்களையே படித்துக் கொண்டிருப்பான். அவன் ரஹீமோடு வருவான். கடையில் ரஹீமும் அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த இப்ரஹீமின் பையன் புத்தகங்களைப் புரட்டிக் கொண்டு இருப்பான். இருட்டிக் கொண்டு வருவதுகூடத் தெரியாது. நன்றாக இருண்டு புத்தகங்களை எல்லாம் மூடி மாலைத் தொழுகைக்குப் புறப்படும் வரையில் படிப்பான். யாஸ்மியை அவன் உற்றுப் பார்ப்பதேயில்லை. வீதியில் நடக்கும்பொழுது, தோள் துண்டு காற்றில் பறந்து கொண்டிருக்கும், தலைப்பாகையை ஒழுங்காகக் கட்டியிருக்கமாட்டான். வீதியின் குறுக்கே நடக்கும் போதாவது பார்த்து நடந்து வருவானா? கழுதைகளை உரசிக் கொண்டும் ஒட்டகத்தின் கழுத்துகளுக்குக் கீழே நுழைந்துகொண்டும் அவசர அவசரமாக நடப்பான். அவனும் அவன் ஆடை லட்சணமும் எதுவும் இப்ராஹீமுக்குப் பிடிப்பதில்லை. இங்கே இப்ராஹீமின் பிள்ளை ஊமைபோல் பேசாமல் இருக்கிறானே பள்ளிக் கூடத்தில் அப்படியில்லையாம். ஆசிரியர்களோடு எப்பொழுதும் தகராறாம். அவர்களைக் கேள்வி கேட்பதும் கிண்டல் செய்வதும்....! ‘உருப்படுகிறவனாகத் தோன்ற வில்லை’ என்று அப்பாவே ஒரு நாள் சொன்னார். இந்த ரஹீம் ஏன்தான் அந்தப் பையனோடு சேர்கிறானோ தெரியவில்லை!

இப்படியாக, யாஸ்மியின் எண்ணத்திலே இப்ராஹீம் மகன் வெறுப்புக் குரியவனாகவும் ரஹீம் விருப்புக்குரியவனாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் அவள் இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்படியான நிகழ்ச்சியொன்று நடந்தது.

ஒரு நாள் யாஸ்மி தன்னுடைய ஆசைப் பூனைக்குட்டியைத் தேடிக் கொண்டு திரிந்தாள். அது அவளுக்குத் தெரியாமல் எங்கே ஊர்வலம் போனதோ? வெளியிலே வந்து பார்த்தபொழுது, ஐந்தாறு பையன்கள் ஒரு மரத்தின் மீது கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். அந்த மரக்கிளையொன்றில் பயந்து நடுங்கி பதுங்கிக் கொண்டிருந்தது, அந்த சாம்பல் வண்ணப் பூனைக்குட்டி. “எரியாதீர்கள்! எரியாதீர்கள்!” என்றுக் கத்திக்கொண்டே ஓடி வந்தாள் யாஸ்மி. ஆனால் அந்தச் சுட்டிப் பயல்கள் பூனையைக் கொல்லும் வரை நிறுத்தமாட்டார்கள் போலிருந்தது. யாஸ்மி விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினாள். அவள் பூனைக்குட்டியைப் பிடித்துத், தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள். அதன் பிறகுதான் கல்லெறி நின்றது. அந்தப் போக்கிரிகளும் ஓடி விட்டார்கள். பூனைக்குட்டியை அணைத்தபடி யாஸ்மி மெதுவாக ஒவ்வொரு கிளையாக மாறி ஆகக் கீழேயிருந்த கிளைக்கு வந்து சேர்ந்தாள். பூனைக் குட்டியையும், வைத்துக் கொண்டு இறங்குவது முடியாத காரியம். குதிக்கலாமென்றாலோ, அந்தக் கிளை மிக உயரமாக இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் யாஸ்மி திருதிருவென விழித்தாள். வீதியில் போகும் யாரும் அவளைக் கவனிக்கவேயில்லை. சிறிது நேரத்தில் கீழேயிருந்து “குதி!” என்ற ஒரு குரல் கேட்டது. ஒரு பையன் இரு கைகளையும் நீட்டிக் கொண்டு மேலே பார்த்து அவளைக் குதிக்கச் சொன்னான். அவன் யாரென்று பார்த்தாள். அவன் ரஹீம் கூட வருவானே, இப்ராஹீம் மகன் அவனேதான்! அவன் கையில் குதிக்க அவள் விரும்பவில்லை. “முடியாது” என்று சொல்லித் தலையை ஆட்டி விட்டாள்.

இப்ரஹீமின் பையன் விறுவிறுவென்று மரத்தின் மேல் ஏறினான். அவள் பக்கத்திலே வந்தான். அவளை ஒரு கையில் இறுக்கமாக அணைத்துப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மரக்கிளையைப் பிடித்துக் கொண்டு கால்களைத் தளர்த்திக் கீழே தொங்கினான். யாஸ்மியின் நெஞ்சு துடித்தது. அவளுடைய பூனைக்குட்டி கால்களை நீட்டிப் பாதத்தில் புதைந்திருக்கும் நகங்களை வெளிப்படுத்தி அவன் தலைப் பாகையைப் பற்றிக் கொண்டது. அப்படியே தரையில் குதித்தான். யாஸ்மியின் முகம் அவனுடைய தலையில் இடித்தது. கரிய கண்களிரண்டும் விரிய அந்தக் குறும்புக்காரன் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவளை விடுவித்து விட்டு, “நீயும் உன் பூனைக் குட்டியும், ஆளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டீர்களே!” என்று அவன் சிரித்தான்.

“ஐயோ, கேலிபண்ணாதே!” என்று கூவிக் கொண்டே யாஸ்மி ஒடி ஒளிந்து விட்டாள். அன்று மாலை நேரம் முழுவதும், தன்னைப் பரிவுடன் பிடித்த அந்தக் கையையும் புன்சிரிப்புடன் தன்னைப் பார்த்த அந்தக் கரிய விழிகளையுமே நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று முதல் யாஸ்மிக்கு, இப்ராஹீம் மகனைத் தவிர வேறு நினைவேயில்லை! எப்பொழுதும் வீதியிலே பூங்காவனத்தை நோக்கிப் போகும் பிரயாணிகளைப் பார்த்தபடி உட்காரும் அவள், அன்று முதல் பள்ளிக்கூட வாசல் தன் கண்ணுக்குத் தெரியும்படியாகப் புத்தகக் கடையின் முன்பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டான். எப்பொழுது பள்ளிக் கூடம் விட்டுக் கதவு திறப்பார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பாள். விரைந்து நடந்து வரும் பையன்களின் மத்தியிலே, இப்ரஹீமின் மகனின் அந்த அலங்கோலமான உருவம் வந்தவுடனே அவள் உள்ளம் துள்ளிக் குதிக்கும் கன்னஞ் சிவக்கும். நாணத்துடன் திரும்பிக் கொள்வாள். பிறகு கடைக்கண்ணால் திரும்பிப் பார்ப்பாள். நிமிர்ந்து நிற்கும் அந்தக் குறும்புக்காரனுடைய தோற்றத்தையும், உறுதியாகக் கால் வைத்து நடக்கும் அவனுடைய நடையழகையும் வியப்புடன் அவள் பார்த்துக் கொண்டேயிருப்பாள். அவனுடைய கரிய உதடுகளும் கண்களும் அவளைக் கண்டதும் விரியும். அவன் அவளைப் பார்த்துப் புன்சிரிப்புக் காட்டும்போது, அவனுடைய கடுகடுப்பான முகத்திலும் ஒருவித மென்மையுண்டாவதை யாஸ்மி கண்டு உள்ளம் பூரிப்பாள். அவன் கவனத்தைத் தன்னிடத்தில் திருப்புவதற்காக அவள் என்னென்னவெல்லாமோ செய்தாள். அழகான ஆடைகளை அணிந்துகொண்டாள். கவர்ச்சிகரமாகக் கண்ணுக்கும் புருவத்துக்கும் மைதீட்டிக் கொண்டாள். கடையிருகில் அவன் வரும்போது தன் கையிலுள்ள ரோஜாப் பூவை நழுவவிட்டுப் பார்த்தாள். தனக்குத் தெரிந்த பெண்மணிகள் இதற்கு முன்னே, தங்கள் காதலர் கவனத்தைத் திருப்ப என்னென்ன செய்தார்களென்று எண்ணிப் பார்த்து, அதையெல்லாம் தானும் செய்து பார்த்தாள். ஆனால் அவனோ, அவள் நழுவ விட்ட பூவை எடுத்து, அவள் மடியிலே போட்டுவிட்டுப் போய் விடுவான். அவளுக்கோ வெட்கம், பயம், அதிகப் பிரசங்கித்தனமாகச் செய்து விட்டோமே என்ற எண்ணம் எல்லாம் உண்டாகிவிடும். யார் கண்ணுக்கும் தெரியாமல் மணிக்கணக்கில் போய் ஒளிந்துகொண்டு விடுவாள். தன் தாயாருடைய வெண்கலக் கண்ணாடியிலே, அடிக்கடி முகம் பார்த்துக் கொண்டு தான் மிக அழகாக இருப்பதாக முடிவு செய்து கொள்ளுவாள். பெரிய பெண்ணாகவும், கவர்ச்சியும், அழகும் பொருந்தியவளாகவும் இருக்கும் தன்னை ஓர் இளவரசி என்றே எண்ணிப்.பல மனிதர்கள் தேடி வருவதாகக் கற்பனை செய்து கொள்வாள். வீட்டுப் பெண்மணிகள் மூலையில் உள்ள கட்டிலில் உறங்குகிறாள் என்று நினைத்துக் கொண்டு தாங்களும் தூங்கி விடுவார்கள். இவளோ தன் பூனைக் குட்டியிடம் தன் அழகைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பாள். இப்ராஹீம் மகன் தன்னோடு பேசமாட்டானா என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.

இப்ராஹீமின் பிள்ளை தங்கள், புத்தகக் கடைக்கு வரும்பொழுது அவனுடைய ஒவ்வொரு செய்கையையும், யாஸ்மி, உற்றுக் கவனித்தாள்.

வெளிச்சம் தெரியும் இடமாகத் தேர்ந்து அவன் உட்கார்ந்து கொள்வதும், எப்படிப்பட்ட புத்தகங்களை விருப்பத்தோடு எடுத்துப் படிக்கிறானென்பதும் எப்படி விரல்களால் வரியாகத் தடவிப் படிக்கிறானென்பதும் அவள் கவனித்தாள். அவன் எப்பொழுதும் விரும்பிப் படிக்கும் புத்தகம் இருந்தது. யாஸ்மி மட்டுமே கடையில் தனியாக இருந்தபோது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தால் அதில் பலப் பல படங்கள் இருந்தன. ஆனால் அவை யாவும், வட்டங்களாகவும் கோடுகளாகவும் விசித்திர கட்டங்களாகவும் வெட்டுப்பட்ட கோணங்களாகவும் இருந்தன. அது ஒரு ஷேத் (சேத்)திர கணித புத்தகம். அவள் படித்தறிந்து கொள்ள முடியா விட்டாலும் அதன் அடையாளம் அவளுக்கு நன்றாகத்தெரியும். அவள், அதை வேறு பல கையெழுத்துப் பிரதி, புத்தகங்களின் ஊடே மறைத்து வைத்தாள். அன்றைக்கு அவள் மிகக் கவர்ச்சியாகத் தோற்றமளித்தாள். ரஹீமும், இப்ராஹீம் மகனும் உள்ளே, நுழைந்தவுடன், ரஹீம் அவளைப் பார்த்து “யாஸ்மி அடேயப்பா! உன் அழகுக்கு முழு நிலவு ஈடாகுமா? இல்லை அந்த இன்பபுரி இளவரசிதான் இணையாவாளா?” என்று கேட்டான். இனிமையான அந்த வருணனையைக் கேட்டதும் யாஸ்மி தன் புருவத்தை உயர்த்தி மலர்ந்த பார்வையால் அவனை நோக்கினாள். “வெட்டும் அந்தப் பார்வையைத் தடுக்கும் கேடயம் என்னிடம் இல்லை. கருணை காட்டு” என்று ரஹீம் சிரித்தான்.

யாஸ்மியும் புன்சிரிப்புக் காட்டினாள். அவளுடைய பார்வை முழுவதும், இப்ராஹீமின் மகன் புத்தகத்தைத் தேடுவதையே கவனித்துக் கொண்டிருந்தது. கையெழுத்துப் பிரதிகளைக் கலைத்துத் தேடுவதுபோல் பாவனை செய்து, யாஸ்மி அந்த சிவப்புப் புத்தகத்தை எடுத்தாள். அப்படி எடுக்கும்போது அதில் ஒரு பக்கம் குறுக்குவாட்டில் கிழிந்து போய் விட்டது. அதே சமயத்தில் அவளுடைய தந்தை உள்ளேயே வந்து கொண்டிருந்தார். நல்ல வேளையாக, அது கிழியும் சமயத்தில் அவர் பார்க்கவில்லை. என்றாலும் உள்ளே வந்ததும், புத்தகத்தைப் பார்த்தவர், அது, கிழிந்து போயிருப்பதைக் கவனித்து விட்டார். தன்னைக் கடிந்து கொள்ளப் போகிறாரே என்று யாஸ்மி பயந்து நெஞ்சு படபடக்கத் துடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“நான்தான் தவறுதலாகக் கிழித்து விட்டேன், அதை, நானே வாங்க முடிவுகட்டி விட்டப்படியால் நீங்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. விலை என்ன? என்று கேட்டான் இப்ராஹீம் மகன்

“எவ்வளவு நல்லவன்!” என்று வியந்தது, யாஸ்மியின் இளம் உள்ளம். விளக்கப் படங்களுடன் கூடிய இந்தக், கோண கணிதப் புத்தகத்தை இவன் எப்படி வாங்க முடியும் என்று வியப்படைந்தார். இப்ராஹீம் மகனிடம் அதை வாங்கப் போதுமான பணமில்லை, என்பது அவருக்கு மட்டுமல்ல ரஹீமுக்கும் தெரியும். அது மிக விலை உயர்ந்த கையெழுத்துப் பிரதியாகும். எல்லாவிதமான வரைவுப் படங்களும் கூடிய இதுபோன்றப் புத்தகம், இந்த நிஜாப்பூர்ப் புத்தக நிலையத்தில் கூட, இல்லையே என்று பேரம் பேசத் தொடங்கினார் யாஸ்மியின் தந்தை.

ரஹீம், குறுக்கிட்டு, “இந்தப் புத்தகத்தை, நானே விலைகொடுத்து வாங்குகிறேன். இப்ராஹீம் மகனான இந்த என் நண்பன் உமாருக்கு இதை நான் என் அன்புப் பரிசாகக் கொடுக்கப் போகிறேன்” என்றான்.

இப்ராஹீம் மகன் ஆவலுடன் அந்தச் சிவப்புப் புத்தகத்தைத் தன் வலிவான கரங்களால் எடுத்துக் கொண்டான்.

எடுத்துக்கொண்டே “பழைய புத்தகம்தானே கிழவரே, இதுதான் சுல்தான் முகமது தனது தங்கச் சிங்காதனத்தில் வைத்திருந்த புத்தகம் என்று கதையளக்கத் தொடங்கி விடாதீர். நெடுநாட்களுக்கு முன் இறந்து போன நம் மத விரோதியான ஒரு கிரேக்கன் எழுதியது இந்த நூல் என்பதும் பதினான்கு தீனார்கள்(பொன்கள்) தான் பெறும் என்பதும் எங்களுக்குத் தெரியும்” என்றான்.

“வரைவுப்படம் இல்லாமல் வெறும் எழுத்துடன் கூடிய புத்தகமே நீர் சொல்லும் விலையைப் போல் இரண்டு மடங்கு இருக்கும். இதில் நிறைய விளக்கப்படங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் தையலும் கட்டடமும்..” என்று இழுத்தார் யாஸ்மியின் தந்தை.

சுமார் ஒரு மணிநேரம் பேரம் நடந்தது. உமாருக்கு அதை எப்படியும் வாங்கிவிட வேண்டுமென்ற ஆவல் இருந்தது. கடைசியில் தன் நண்பன் உமாருக்காக பத்தொன்பது பொன்களும் சில்லறையும் கொடுத்து ரஹீம் அந்தப் புத்தகத்தை வாங்கினான். கிழிந்தது பற்றிய பேச்சுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.

கடையை விட்டு வெளியே சென்றவுடன் தன்னுடைய பையில் இருந்த பேனா வைக்கும் அழகான பெட்டியை எடுத்து ரஹீமின் கையில் திணித்து விட்டு உமார் ஓடுவதைக் கவனித்தாள் யாஸ்மி.

நண்பன் எவ்வளவு கூவியழைத்தும் உமார் நிற்கவில்லை!