பக்கம்:திருவாசகத்தேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 19

முடியாத நிலை யானை, இரு கையாலும் உண்டு ஊனைப் பெருக்கி வளர்த்துக் கொள்கிறது! இன்றைய மனிதனின் நிலை என்ன? எங்குப் பார்த்தாலும் உணவுச் சாலைகள்! இரை தேடி அலைகிறான்! திருக்கோயில் களையும் உணவு விற்கும் சாலைகளாக மாற்றிவிட்டான்! உண்டி நாலு விதத்தால் அறுசுவையில் தேர்ந்து உண்டு ஊனினைப் பெருக்கி வளர்கிறான்! இதன் விளைவே நீரிழிவு நோய் உடற் கனம்! இதயப் பாதிப்பு: மூட்டு வலிகள்! ஊனின் எடை குறையவேண்டும்! ஊனாகிய உடல் ஆன்மாவுக்குப் பணி செய்யவேண்டும்! ஊன் உருகுதல் வேண்டும்!

யானை, கட்டுத் தறியில் தன் தலையில் தானே புழுதியை அள்ளிப் போட்டுக் கொள்ளும்! அதுபோல் ஆன்மா தன்னுடைய துன்பத்தைத் தானே வரவழைத்துக் கொள்கிறது. இன்பமே உலகத்து இயற்கை துன்பமெலாம் மனிதனின் படைப்பே அறியாமையின் காரண மாக மனிதன் தனக்குத் தானே துன்பம் செய்து கொள்கிறான்! அறியாமை என்றால் என்ன? ஒன்றும் தெரியாமை அறியாமை அல்ல. ஒன்றைப் பிறிதொன்றாக முறைபிறழ உணர்தலே அறியாமை! "நன்றுடையான், தீயதிலான்"- இறைவன் என்பது திருஞானசம்பந்தர் வாக்கு! "நன்றுடையான்"என்று சொன்னால் போதுமே! ஏன் எதிர்மறையாலும் "தீயதிலான்" என்று சொல்லவேண்டும்?. எது நன்மை! எங்கும் எப்பொழுதும் எல்லாருக்கும் நன்மையாக எது இருக்கிறதோ அதுவே நன்மை! ஒருபொழுது நன்மையாகவும் ஒருபொழுது தீமையாகவும் இருப்பது நன்மையாகாது. இன்று மனிதர் நன்மையென்று நினைத்துக் கொண்டிருப்பது தீமை கலந்த நன்மையையேயாம்! ஆதலால் பழக்க வாசனையால் தீமை கலந்த நன்மையை-- தீமையாக உள்ளதை நன்மையாக மனிதர் அறியாமையால் கருதுகின்றனர். இறைவன் முற்றாக