உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருவாசகத்தேன்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன் ☐ 101


எல்லாம் அழிகின்றன. எல்லாம் கடந்த நிலையில் இறைவன் ஆடுதலை 'ஈமத்தாடி' என்றும் கூறுவர். ஈமம், இடுகாடு என்பது இடம் பற்றிய குறிப்பு அல்ல. காலம் பற்றிய சிந்தனை. அந்தக் கடையூழிக் காலத்து இறைவின் இறைவியுடன் ஆடும்பொழுது எழும் தூசியே திருநீறு. திருஞானசம்பந்தர் "சுடலைப் பொடி பூசி" என்றார். இறைவன் கடையூழிக் காலத்தில் ஆடுவது நுண்மை நிலையில் ஐந்தொழில் நிகழ்த்துவதற்காகவேயாம்! கடையூழி ஒடுக்கத்தில் ஆன்மாக்கள் இளைப்பாறிய நிலையில் மீண்டும் புத்துயிர்ப்புப் பெறுகின்றன; புதுப் பிறப்பு எடுக்கின்றன. ஆதலால் கடவுள் காலம் கடந்தவன்! ஏன்? ஞாலமும் விசும்பும் இவை வந்து போகும் காலமாகவே இருப்பவன்!

காலம் கடந்தது எல்லாம் பழைமை! காலங்கடந்து நின்றால் மட்டும் போதாது. காலத்தை வென்று விளங்க வேண்டும். ஆம்! காலத்தினால் ஆய நியதிகளைக் கடத்தல் வேண்டும்; பிறப்பை இறப்பைக் கடத்தல் வேண்டும். "பிறவாயாக்கைப் பெரியோன்" என்று இறைவனைச் சிலம்பு போற்றும்! "முன்னே முனைந்தான்" என்று தேவாரம் பரவும். "நீலமணி மிடற்றொருவன்" என்று புறநானூறு போற்றும்! "விண்ணோர் அமுதுண்டு சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்பவன்" என்று இளங்கோவடிகள் நெகிழ்ந்து போற்றுவார். பெருமான் அணிந்துள்ள எலும்பு மாலையில் உள்ள மண்டை ஓடுகள் கடையூழிக் கணக்கைக் காட்டுவன. அழிந்தவற்றின் கணக்கும் அதுவே! ஆதலால் கடவுள்—— சிவபெருமான் பழம்பொருள். முன்னைப் பழைமைக்கும் பழைய பொருள். 'முன்னை' என்ற சொல் கால எல்லையைக் கடந்தது என்பதைக் குறிப்பது.

அது சரி! கடவுள்—— சிவபெருமான் பழம்பொருள்! பழையோன்! ஆன்மாக்களோ புதுப்புதுப் பிறவி எடுப்பன! அதனால், ஆன்மாக்களுக்கு—— உயிர்களுக்குப்