102 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்
பழைமை பிடிக்குமா? ஆன்மாக்கள்——உயிர்கள் புதுமையை விரும்புவன. அது மட்டுமல்ல. ஆன்மாக்கள் புதுமையை விரும்பினாலே உலகம் இயங்கும்; வளரும்; வாழும். ஆதலால் ஆன்மாக்களை—— உயிர்களை ஆட்கொள்ளும் விளையாட்டினைக் கருதி இறைவன் புதுமையாகவும் விளங்குகிறான். காலத்தினால் விளையும் மூப்பு, முதுமை, கிழட்டுத்தனம் இல்லாமல் என்றும் இளையோனாக கைபுனைந்தியற்றாக் கவின்பெறு வனப்பாக விளங்கி அருள்கின்றான்
காலம் மிகமிகக் கொடுமையானது; கண்டிப்பானது. காலத்தொடு பட்டவையெல்லாம் மூப்படையும்; கிழட்டுத் தன்மையடையும்; பயனற்றுப் போகும். காலப்போக்கில் 'அழியும்' காலத்தத்துவம் நிகழ்காலம் எதிர்காலம் என்பதைவிட விரைந்து இறந்த காலமாதல்தான் இயல்பு. திருக்குறள்,
"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு"
என்று கூறும், ஆனால், இறைவன்—— சிவபெருமான் காலாதிதனாய் இருப்பதால் அவன் புதுமை தாங்கியவனாக புதுமைப் புனைவுடன் விளங்க முடிகிறது. ஆன்மாக்களின்—— உயிர்களின் விருப்பம் புதுமை வேட்டல். ஆன்மாக்கள்—— உயிர்கள் விரும்பும் புதுமை, புத்தொளி கிடைக்காது போனாலும் அவை எய்த்துக் களைத்துப் போகும். ஆதலால் ஆன்மாக்களின்—— உயிர்களின் வளர்ச்சி கருதி, நலம் கருதி, இறைவன்—— சிவன் நாழிகைதோறும் புதுமைப் புனைவாளனாக விளங்கு கிறான். ஊழிதோறும் இறைவனுடைய திருமேனிகள் மாறுகின்றன; பெயர்கள் மாறுகின்றன. ஏன்? அவன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் கூட மாறுபடுகின்றன! எனவே, இறைவன் பழைமைக்குப் பழைமையானவன்!