திருவாசகம்/திருப்பொன்னூசல்

விக்கிமூலம் இலிருந்து

சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த்தாள் நாயடியேற்கு
ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
போரார்வேற் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ. 329

மூன்றங் கிலங்கு நயனத்தன் மூவாத
வான்தங்கு தேவர்களுங் காணா மலரடிகள்
தேன்தங்கித் தித்தித் தமுதூறித் தான்தெளிந்தங்கு
ஊன்தங்கி நின்றுருக்கும் உத்தர கோசமங்கைக்
கோன்தங் கிடைமருது பாடிக் குலமஞ்ஞை
போன்றங் கனநடையீர் பொன்னூசல் ஆடாமோ. 330

முன்னீறும் ஆதியு மில்லான் முனிவர்குழாம்
பன்னூறு கோடி யிமையோர்கள் தாம் நிற்பத்
தன்னீ றெனக்கருளித் தன்கருணை வெள்ளத்து
மன்னூற மன்னுமணி யுத்தர கோசமங்கை
மின்னேறு மாட வியன்மா ளிகைபாடிப்
பொன்னேறு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 331

நஞ்சமர் கண்டத்தன் அண்டத் தவர்நாதன்
மஞ்சுதோய் மாடமணி உத்தரகோசமங்கை
அஞ்சொலாள் தன்னோடுங் கூடி அடியவர்கள்
நெஞ்சுளே நின்றமுத மூறிக் கருணைசெய்து
துஞ்சல் பிறப்பறுப்பான் தூய புகழ்பாடிப்
புஞ்சமார் வெள்வளையீர் பொன்னூசல் ஆடாமோ. 332

ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ. 333

மாதாடு பாகத்தன் உத்தர கோசமங்கைத்
தாதாடு கொன்றைச் சடையான் அடியாருள்
கோதாட்டி நாயேனை ஆட்கொண்டென் தொல்பிறவித்
தீதோடா வண்ணந் திகழப் பிறப்பறுப்பான்
காதாடு குண்டலங்கள் பாடிக் கசிந்தன்பால்
போதாடு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 334

உன்னற் கரியதிரு வுத்தர கோசமங்கை
மன்னிப் பொலிந்திருந்த மாமறையோன் தன்புகழே
பன்னிப் பணிந்திறைஞ்சப் பாவங்கள் பற்றறுப்பான்
அன்னத்தின் மேலேறி ஆடுமணி மயில்போல்
என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான் எழில்பாடிப்
பொன்னொத்த பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 335

கோலவரைக்குடுமி வந்து குவலயத்துச்
சால அமுதுண்டு தாழ்கடலின் மீதெழுந்து
ஞால மிகப்பரிமேற் கொண்டு நமையாண்டான்
சீலந் திகழுந் திருவுத்தர கோசமங்கை
மாலுக் கரியானை வாயார நாம்பாடிப்
பூலித் தகங்குழைந்து பொன்னூசல் ஆடாமோ. 336

தெங்குலவு சோலைத் திருஉத்தர கோசமங்கை
தங்குலவு சோதித் தனியுருவம் வந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொள்வான்
பங்குலவு கோதையுந் தானும் பணிகொண்ட
கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
பொங்குலவு பூண்முலையீர் பொன்னூசல் ஆடாமோ. 337
திருச்சிற்றம்பலம்