திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 43 முதல் 44 வரை

விக்கிமூலம் இலிருந்து
"வானவில்லைப் பார்; அதை உண்டாக்கினவரைப் போற்று; அது ஒளிரும்போது எழில் மிகந்ததாய் இருக்கின்றது. தனது மாட்சி மிகுந்த வில்லால் வானத்தை அது சுற்றி வளைக்கிறது; உன்னத இறைவனின் கைகளே அதை விரித்துவைத்தன" - சீராக்கின் ஞானம் 43:11-12

சீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]

அதிகாரங்கள் 43 முதல் 44 வரை

அதிகாரம் 43[தொகு]

கதிரவன்[தொகு]


1 உயர் வானத்தின் சிறப்பு தெளிந்த வான்வெளியே;
வானகத்தின் தோற்றம் அதன் மாட்சியின் காட்சியே.


2 கதிரவன் தோன்றி எழும்போதே அறிவிக்கிறது.
உன்னத இறைவனின் கைவேலையாகிய அது எத்துணை வியப்புக்கு உரியது!


3 அது நண்பகலில் நிலத்தைச் சுட்டெரிக்கிறது;
அதனுடைய கடும் வெப்பத்தைத் தாங்கக் கூடியவர் எவர்?


4 சூளையைக் கவனிப்போர் கடும் வெப்பத்தில் வேலை செய்கின்றனர்.
கதிரவன் அதைவிட மும்மடங்காய் மலையை எரிக்கிறது;
நெருப்புக் கதிர்களை வீசுகிறது;
தன்னுடைய ஒளிக் கதிர்களால் கண்களைக் குருடாக்குகிறது.


5 அதனைப் படைத்தவர் மாபெரும் ஆண்டவர்!
அவருடைய கட்டளையால் அது தன் வழியே விரைந்து செல்கிறது. [1]

நிலவு[தொகு]


6 நிலவு எப்போதும் குறித்த காலத்தில் நேரத்தையும்
காலத்தின் குறியையும் காட்டுகிறது.


7 நிலவைக்கொண்டே திருநாள்கள் குறிக்கப்படுகின்றன.
அது வளர்ந்து முழுமை அடைந்தபின் தேய்கிறது.


8 அதனைக்கொண்டே மாதங்கள் பெயரிடப்படுகின்றன.
அது வளர்மதியாக மாறும் வகை எத்துணை வியப்புக்கு உரியது!
வான்படைகளுக்கு அடையாள ஒளியாக நின்று
வான்வெளியில் அது மிளிர்கின்றது.

விண்மீன்கள்[தொகு]


9 விண்மீன்களின் மாட்சியே வானத்துக்கு அழகு;
உயர் வானத்தில் இருக்கும் ஆண்டவருடைய ஒளி மிகுந்த அணிகலன்.


10 தூய இறைவனின் கட்டளைப்படி அவை ஒழுங்காக இயங்குகின்றன;
தங்களது விழிப்பில் அவை அயர்வதில்லை.

வானவில்[தொகு]


11 வானவில்லைப் பார்; அதை உண்டாக்கினவரைப் போற்று;
அது ஒளிரும்போது எழில் மிகந்ததாய் இருக்கின்றது.


12 தனது மாட்சி மிகுந்த வில்லால் வானத்தை அது சுற்றி வளைக்கிறது;
உன்னத இறைவனின் கைகளே அதை விரித்துவைத்தன.

இயற்கையின் விந்தைகள்[தொகு]


13 ஆண்டவருடைய கட்டளைப்படி பனிபெய்கிறது;
அவர்தம் முடிவுகளைச் செயல்படுத்த மின்னல்கள் விரைகின்றன. [2]


14 ஆகையால் கருவூலங்கள் திறக்கப்படுகின்றன;
பறவைகளைப்போல முகில்கள் பறக்கின்றன. [3]


15 அவர் தமது வலிமையால் முகில்களுக்கு வலிமையூட்டுகிறார்;
ஆலங்கட்டிகள் உடைந்து சிதறுகின்றன.


16 அவர் தோன்றும்போது மலைகள் நடுங்கின்றன;
அவருடைய திருவுளத்தால் தென்றல் வீசுகிறது.


17 அவரது இடியின் ஓசை நிலத்தைத் துன்பத்தால் நெளியச் செய்கிறது;
வடக்கிலிருந்து வரும் புயற்காற்றும் சூறாவளியும் இவ்வாறே செய்கின்றன.


18 கீழே இறங்கும் பறவையைப்போல பனியை அவர் தூவிவிடுகிறார்.
உட்கார வரும் வெட்டுக்கிளியைப் போல் அது இறங்குகிறது;
அதன் வெண்மையின் அழகைக் கண்டு கண் வியப்படைகிறது;
அது பொழிவதைக் கண்டு உள்ளம் திகைக்கிறது.


19 அவர் உப்பைப்போல உறைபனியை நிலத்தின்மீது தெளிக்கிறார்;
அது உறைகின்றபோது கூர்மையான முட்களைப்போல் ஆகின்றது.


20 வடக்கிலிருந்து வாடைக் காற்று வீசுகின்றது;
தண்ணீர்மேல் பனி உறைகின்றது;
அது ஒவ்வொரு நீர்நிலைமீதும் தங்குகின்றது;
தண்ணீரும் அதை மார்புக்கவசமாய் அணிந்துகொள்கின்றது.


21 காற்று மலைகளை விழுங்குகிறது;
பாலைநிலத்தைச் சுட்டெரிக்கிறது;
தீயைப்போலப் பசுந்தளிர்களை எரிக்கிறது.


22 ஆனால் கார்முகில் விரைவில் எல்லாவற்றையும் நலமுறச் செய்கிறது;
பனித் திவலைகள் விழும்போது வெப்பம் தணிகின்றது.


23 தமது திட்டத்தால் அவர் ஆழ்கடலை அமைதிப்படுத்தினார்;
அதில் தீவுகளை அமைத்தார்.


24 கடலில் பயணம் செய்வோர் அதன் பேரிடர்களைக் கூறுகின்றனர்;
நாம் காதால் கேட்டு வியப்படைகிறோம்.


25 அங்கே விந்தையான, வியப்புக்குரிய படைப்புகள் உள்ளன;
எல்லாவகை உயிரினங்களும்
கடலில் வாழும் மிகப் பெரிய விலங்குகளும் உள்ளன. [4]


26 அவரால் அவருடைய தூதர் வெற்றி காண்பர்;
அவருடைய சொல் அனைத்தையும் ஒருங்கிணைக்கும்.


27 நான் இன்னும் பல சொல்லலாம்;
ஆயினும் முழுமையாய்ச் சொல்ல முடியாது;
சுருங்கக் கூறின், அனைத்தும் அவரே!


28 ஆண்டவரை மாட்சிமைப்படுத்த எங்கிருந்து வலிமை பெறுவோம்?
தம் படைப்புகள் எல்லாவற்றையும்விட அவர் பெரியவர்.


29 அவர் அஞ்சுவதற்கு உரியவர்; மிகப் பெரியவர்;
அவருடைய வலிமை வியப்புக்குரியது.


30 ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்;
உங்களால் முடியும் அளவிற்கு அவரை உயர்த்துங்கள்.
ஏனெனில் அவர் அதனினும் மேலானவர்.
உங்கள் வலிமையெல்லாம் கூட்டி அவரை உயர்த்துங்கள்;
சோர்ந்துவிடாதீர்கள்.
ஏனெனில் போதிய அளவு அவரைப் புகழ முடியாது.


31 ஆண்டவரைக் கண்டவர் யார்?
அவரைப்பற்றி எடுத்துரைப்பவர் யார்?
அவர் உள்ளவாறே அவரைப் புகழ்ந்தேத்துபவர் யார்?


32 இவற்றினும் பெரியன பல மறைந்திருக்கின்றன;
அவருடைய படைப்புகளில் சிலவற்றையே நாம் கண்டுள்ளோம்.


33 ஆண்டவரே அனைத்தையும் படைத்துள்ளார்;
இறைப்பற்றுள்ளோருக்கு ஞானத்தை அருளியுள்ளார்.


குறிப்புகள்

[1] 43:1-5 = திபா 19:1-6
[2] 43:13 = யோபு 37:6; திபா 147:16.
[3] 43:14 = இச 28:12.
[4] 43:25 = திபா 104:25-26.

அதிகாரம் 44[தொகு]

மூதாதையர் புகழ்ச்சி[தொகு]

- வரலாற்றில் -[தொகு]


1 மேன்மை பொருந்திய மனிதரையும் நம் மூதாதையரையும்
அவர்களது தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.


2 தொடக்கத்திலிருந்தே ஆண்டவர் மிகுந்த மாட்சியையும்
மேன்மையையும் படைத்துள்ளார். [1]


3 அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஆட்சி செலுத்தினார்கள்;
தங்களது வலிமையால் நற்பெயர் பெற்றார்கள்;
தங்களது அறிவுக்கூர்மையால் அறிவுரை வழங்கினார்கள்;
இறைவாக்குகளை எடுத்துரைத்தார்கள்.


4 தங்கள் அறிவுரையாலும் சட்டம் பற்றிய அறிவுக் கூர்மையாலும்
மக்களை வழிநடத்தினார்கள்;
நற்பயிற்சியின் சொற்களில் ஞானிகளாய் இருந்தார்கள்.


5 இன்னிசை அமைத்தார்கள்; பாக்கள் புனைந்தார்கள்.


6 மிகுந்த செல்வமும் ஆற்றலும் கொண்டிருந்தார்கள்;
தங்கள் இல்லங்களில் அமைதியுடன் வாழ்ந்தார்கள்.


7 அவர்கள் அனைவரும் தங்கள் வழிமரபில் மாட்சி பெற்றார்கள்;
தங்கள் வாழ்நாளில் பெருமை அடைந்தார்கள்.


8 அவர்களுள் சிலர் புகழ் விளங்கும்படி
தங்கள் பெயரை விட்டுச்சென்றார்கள்.


9 நினைவுகூரப்படாத சிலரும் உண்டு;
வாழ்ந்திராதவர்கள்போன்று அவர்கள் அழிந்தார்கள்;
பிறவாதவர்கள்போல் ஆனார்கள்.
அவர்களுக்குப்பின் அவர்கள் பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள்,


10 ஆனால் அவர்களும் இரக்கமுள்ள மனிதர்களே.
அவர்களுடைய நேர்மையான செயல்கள் மறக்கப்படுவதில்லை.


11 தங்களது வழிமரபில் அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.
அவர்களுடைய உரிமைச்சொத்து
அவர்களின் வழித்தோன்றல்களுக்கும் கிடைக்கும்.


12 அவர்களின் வழிமரபினர் உடன்படிக்கையின்படி நடக்கின்றனர்;
அவர்கள் பொருட்டு அவர்களின் பிள்ளைகளும் அவ்வாறே நடப்பார்கள்.


13 அவர்களின் வழிமரபு என்றும் நிலைத்தோங்கும்;
அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.


14 அவர்களுடைய உடல்கள் அமைதியாய் அடக்கம் செய்யப்பட்டன;
அவர்களுடைய பெயர் முறை தலைமுறை தலைமுறைக்கும் வாழ்ந்தோங்கும்.


15 மக்கள் அவர்களுடைய ஞானத்தை எடுத்துரைப்பார்கள்.
அவர்களது புகழைச் சபையார் பறைசாற்றுவர்.

ஏனோக்கு[தொகு]


16 ஏனோக்கு ஆண்டவருக்கு உகந்தவரானார்;
அவரால் எடுத்துக் கொள்ளப்பட்டார்;
எல்லாத் தலைமுறைகளுக்கும்
மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். [2]

நோவா[தொகு]


17 நோவா நிறைவுற்றவராகவும் நீதிமானாகவும் திகழ்ந்தார்;
சினத்தின் காலத்தில் பரிகாரம் செய்தார்;
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது,
அவர் பொருட்டுச் சிலர் உலகில் விடப்பட்டார்கள்.


18 எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால் இனி அழியக்கூடாது என்பதற்கு
என்றுமுள உடன்படிக்கைகள் அவருடன் செய்யப்பட்டன. [3]

ஆபிரகாம்[தொகு]


19 ஆபிரகாம் பல மக்களினங்களுக்குக் குலமுதல்வராய்த் திகழ்ந்தார்;
மாட்சியில் அவருக்கு இணையானவர் எவரையும் கண்டதில்லை.


20 உன்னத இறைவனின் திருச்சட்டத்தை அவர் கடைப்பிடித்தார்;
அவரோடு உடன்படிக்கை செய்துகொண்டார்;
அவ்வுடன்படிக்கையைத் தம் உடலில் நிலைக்கச் செய்தார்;
சோதிக்கப்பட்டபோது பற்றுறுதி கொண்டவராக விளங்கினார்.


21 ஆதலால் அவருடைய வழிமரபு வழியாக
மக்களினங்களுக்கு ஆசி வழங்குவதாகவும்,
நிலத்தின் புழுதியைப்போல் அவருடைய வழிமரபைப் பெருக்குவதாகவும்,
விண்மீன்களைப் போல் அவர்களை உயர்த்துவதாகவும்,
ஒரு கடலிலிருந்து மற்றொரு கடல்வரைக்கும்,
யூப்பிரத்தீசு ஆற்றிலிருந்து நிலத்தின் கடையெல்லைவரைக்கும் உள்ள
நிலப்பரப்பை அவர்களுக்கு உரிமைச்சொத்தாக அளிப்பதாகவும்
கடவுள் அவருக்கு ஆணையிட்டு உறுதி கூறினார். [4]

ஈசாக்கு, யாக்கோபு[தொகு]


22 ஈசாக்கிடமும் அவருடைய தந்தை ஆபிரகாமை முன்னிட்டு
அந்த உறுதிமொழியைக் கடவுள் புதுப்பித்தார்.


23 எல்லா மனிதருடைய ஆசியும் உடன்படிக்கையும்
யாக்கோபின் தலைமீது தங்கச் செய்தார்;
தம் ஆசிகளால் அவரை உறுதிப்படுத்தினார்;
நாட்டை அவருக்கு உரிமைச் சொத்தாக வழங்கினார்;
அவருடைய பங்குகளைப் பிரித்தார்;
பன்னிரு குலங்களுக்கிடையே அவற்றைப் பகிர்ந்து கொடுத்தார். [5]


குறிப்புகள்

[1] 44:2 - "மிகுந்த மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தார்"
என்றும் மொழிபெயர்க்கலாம்.
[2] 44:16 = தொநூ 5:24; சாஞா 4:10; எபி 11:5.
[3] 44:17-18 = தொநூ 6:9-9:17; 1 பேது 3:20.
[4] 44:19-21 = தொநூ 15:1-17:27; 22:1-18.
[5] 44:22-23 = தொநூ 26:3-5; 28:13-15; 35:10-12.


(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 45 முதல் 46 வரை