திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/பாரூக்கு (எரேமியாவின் மடல்)/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
"பாரூக்கு பாபிலோனில் இருந்தபொழுது இந்நூலை எழுதினார். பாரூக்கு நேரியாவின் மகன்...கல்தேயர் எருசலேமைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கியபின், ஐந்தாம் ஆண்டில் மாதத்தின் ஏழாம் நாள் அவர் இந்நூலை எழுதினார்." - பாரூக்கு 1:1-2


பாரூக்கு (The Book of Baruch) [1][தொகு]

முன்னுரை

இறைவாக்கினர் எரேமியாவின் செயலரான பாரூக்கு இந்நூலை எழுதினார் என்பது மரபுவழிச் செய்தி. வெவ்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்ட ஐந்து சிறிய தனித்தனிப் பகுதிகள் முறையாகத் தொகுக்கப்பட்டு, கி.மு. முதல் நூற்றாண்டில் தனி நூலாகப் பாரூக்கின் பெயரில் வெளியிடப்பட்டன என்பர் அறிஞர். நூலின் மையப் பகுதி (3:9 - 5:9) கவிதை நடையில் அமைந்துள்ளது.

கடவுளையும் அவரது திருச்சட்டத்தையும் கைவிட்டமையே இஸ்ரயேலர் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதற்குரிய காரணம்; எனவே அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுக் கடவுள்பால் மனந்திரும்பி (1:1 - 3:8), உண்மை ஞானமாகிய திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து நடந்தால் (3:9 - 4:4), கடவுள் அவர்களது அடிமைத்தனத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்து, அவர்களுக்கு மீட்பை அருள்வார் (4:5 - 5:9) என்னும் செய்தியை இந்நூல் வலியுறுத்துகிறது.

எரேமியாவின் மடல் என அழைக்கப்படும் இறுதிப் பகுதி (6:1 - 7:2; காண் 2 மக் 2:1-3) பிற இனத்தார் நடுவே பழக்கத்தில் இருந்த சிலைவழிபாட்டை வன்மையாகக் கண்டிப்பதன்மூலம், முழு முதற் கடவுள்மீது பற்றுறுதி கொள்ளுமாறு இஸ்ரயேலரைத் தூண்டுகிறது (காண் எரே 10:1-16; எசா 44:6-20). கிரேக்க மூலத்தில் பாரூக்கு 5ஆம் அதிகாரத்தைத் தொடர்ந்து "புலம்பல்" நூல் இடம்பெற, அதன் பின்னரே எரேமியாவின் மடல் காணப்படுகிறது. இருப்பினும் "உல்காத்தா" எனப்படும் இலத்தீன் பாடத்தைப் பின்பற்றிக் கத்தோலிக்க மரபு இம்மடலைப் பாரூக்கு 6ஆம் அதிகாரமாகப் பார்க்கிறது.

பாரூக்கு[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முகவுரை 1:1-9 189
2. எருசலேமுக்கு விடுக்கப்பட்ட மடல் 1:10 - 3:8 189 - 193
3. ஞானத்தின் புகழ்ச்சி 3:9 - 4:4 193 - 195
4. எருசலேமின் புலம்பலும் நம்பிக்கையும் 4:5 - 5:9 195 - 197
5. எரேமியாவின் மடல் 6:1-72 197 - 201

பாரூக்கு (The Book of Baruch)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

பாரூக்கும் பாபிலோனில் வாழ்ந்த யூதர்களும்[தொகு]


1 பாரூக்கு பாபிலோனில் இருந்தபொழுது இந்நூலை எழுதினார்.
பாரூக்கு நேரியாவின் மகன்;
நேரியா மக்சேயாவின் மகன்;
மக்சேயா செதேக்கியாவின் மகன்;
செதேக்கியா அசதியாவின் மகன்;
அசதியா இலக்கியாவின் மகன்.
2 கல்தேயர் எருசலேமைக் கைப்பற்றித் தீக்கிரையாக்கியபின்,
ஐந்தாம் ஆண்டில் மாதத்தின் [1] ஏழாம் நாள் அவர் இந்நூலை எழுதினார். [2]


3-4 யோயாக்கிம் மகனும், யூதாவின் அரசனுமான
எக்கோனியா [3] முன்னிலையிலும்,
இந்நூலின் வாசகத்தைக் கேட்க வந்திருந்த உயர் குடிமக்கள்,
அரசின் மைந்தர்கள், மூப்பர், பெரியோர், சிறியோர்,
பாபிலோனில் சூது ஆற்றங்கரையில் குடியிருந்தோர்
ஆகிய அனைவர் முன்னிலையிலும் பாரூக்கு இதனைப் படித்தார். [4]
5 அதற்குச் செவிசாய்த்த யாவரும் அழுது உண்ணா நோன்பிருந்தனர்;
ஆண்டவர் திருமுன் வேண்டுதல் செய்தனர்.
6 மேலும், அவர்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை பணம் திரட்டி, அதை
7 எருசலேமில் இருந்த சல்லூம் பேரனும்,
இலக்கியாவின் மகனுமான யோயாக்கிம் என்னும் குருவுக்கும், [5]
குருக்களுக்கும், மக்கள் அனைவருக்கும் அனுப்பிவைத்தார்கள்.


8 அதே நேரத்தில், ஆண்டவரின் இல்லத்திலிருந்து கவர்ந்து செல்லப்பட்டிருந்த கலன்களை
யூதா நாட்டிற்குத் திருப்பியனுப்பும் பொருட்டு,
சீவான் மாதம் பத்தாம் நாள் பாரூக்கு எடுத்துவைத்திருந்தார்.
அவை யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான
செதேக்கியாவால் செய்யப்பட்ட வெள்ளிக்கலன்களாகும்.
9 அவை பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
எருசலேமிலிருந்து எக்கோனியா, தலைவர்கள், கைவினைஞர்கள், [6]
உயர்குடிமக்கள், நாட்டு மக்கள் ஆகியோரைப் பிடித்துப்
பாபிலோனுக்கு நாடுகடத்தியபின் [7] செய்யப்பட்டவை. [8]

எருசலேமுக்கு விடுக்கப்பட்ட மடல்[தொகு]


10 அப்பொழுது அவர்கள் விடுத்த செய்தி வருமாறு:

"இத்துடன் நாங்கள் உங்களுக்குப் பணம் அனுப்பி வைக்கின்றோம்.


அதைக்கொண்டு எரிபலி, பாவம்போக்கும் பலி,
சாம்பிராணி, உணவுப் படையல் ஆகியவற்றை ஏற்பாடு செய்யுங்கள்;
நம் கடவுளாகிய ஆண்டவருடைய பலி பீடத்தின்மீது அவற்றைப் படையுங்கள்.
11 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் நல்வாழ்வுக்காகவும்,
அவருடைய மகன் பெல்சாட்சரின் நல்வாழ்வுக்காகவும் மன்றாடுங்கள்.
இதனால் மண்ணலகில் அவர்களது வாழ்வு விண்ணலக வாழ்வு போல நீடிக்கட்டும்.
12 ஆண்டவர் எங்களுக்கு வலிமையும் கண்களுக்கு ஒளியும் அருள்வார்.
நாங்கள் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் பாதுபாப்பிலும்
அவருடைய மகன் பெல்சாட்சரின் பாதுகாப்பிலும் வாழ்ந்து,
அவர்களுக்கு நீண்ட நாள் பணிவிடை செய்து அவர்களது பரிவைப் பெறுவோம்.
13 நம் கடவுளாகிய ஆண்டவரிடம் எங்களுக்காகவும் மன்றாடுங்கள்;
ஏனெனில், அவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம்.
அதனால் அவருடைய சினமும் சீற்றமும் இன்றுவரை எங்களைவிட்டு நீங்கவில்லை.
14 நாங்கள் உங்களுக்கு அனுப்பிவைக்கும் இந்நூலைத்
திருவிழாக் காலத்திலும் [9] சபை கூடும் நாள்களிலும்
ஆண்டவரின் இல்லத்தில் நீங்கள் பொதுவில் படித்து,


உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்.

பாவ அறிக்கை[தொகு]

15 "அப்பொழுது நீங்கள் சொல்ல வேண்டியது:


நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது.
ஆனால் நமக்கும், யூதாவின் மக்கள், எருசலேமின் குடிகள், [10]
16 நம் அரசர்கள், தலைவர்கள், குருக்கள், இறைவாக்கினர்கள்,
மூதாதையர்கள் ஆகிய அனைவருக்கும்
இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது.
17 ஏனெனில், ஆண்டவர் முன்னிலையில் நாம் பாவம் செய்தோம்.
18 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நாம் கீழ்ப்படியவில்லை;
அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை;
அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை.
19 நம் கடவுளாகிய ஆண்டவர் நம் மூதாதையரை
எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த நாளிலிருந்து இன்று வரை
நாம் அவருக்குப் பணிந்து நடக்கவில்லை;
அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்துவிட்டோம்.
20 ஆகவேதான், பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டை நமக்குக் கொடுக்கும்பொருட்டு,
எகிப்து நாட்டிலிருந்து நம் மூதாதையரை ஆண்டவர் அழைத்துவந்தபொழுது,
தம் அடியாரான மோசே வாயிலாக அவர் அறிவித்திருந்த கேடுகளும் சாபங்களும்
இன்றுவரை நம்மைத் தொற்றிக் கொண்டுள்ளன. [11]
21 மேலும், நம் கடவுளாகிய ஆண்டவர்
நம்மிடம் அனுப்பி வைத்த இறைவாக்கினர் வாயிலாகப்
பேசிய சொற்கள் எவற்றுக்கும் நாம் செவிசாய்க்கவில்லை.
22 மாறாக, நம்மில் ஒவ்வொருவரும்
நம் தீய உள்ளத்தின் போக்கில் நடந்தோம்;
வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் செய்தோம்;


நம் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் தீயன புரிந்தோம்.


குறிப்புகள்

[1] 1:2 - இங்கு "மாதம்" என்பது
எபிரேய ஆண்டின் ஐந்தாம் மாதத்தைக் குறிக்கலாம் (2 அர 25:8).
கி.மு. 587இல் நிகழ்ந்த எருசலேம் நகர வீழ்ச்சியின்
ஐந்தாம் ஆண்டு நிறைவை இது சுட்டும் (செக் 7:3).
[2] 1:2 = 2 அர 25:8-9.
[3] 1:3 - இவருக்கு மறுபெயர் யோயாக்கின்.
[4] 1:3-4 = 2 அர 24:8-17; எரே 24:1.
[5] 1:7 - தலைமைக்குரு யோட்சதாக்கு ஏற்கெனவே
பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்ததால்
துணைத் தலைமைக் குருவாய் எருசலேமில் விளங்கிய யோயாக்கிம்
இங்குத் தனியாகக் குறிப்பிடப்படுகிறார்.
இதனால் அவரைத் தலைமைக் குரு என்றே
சில மொழிபெயர்ப்புகள் சுட்டுகின்றன.
[6] 1:9 - "கைதிகள்" என்பது மூலப் பாடம்.
[7] 1:9 - கி.மு. 597இல் எருசலேம் பாபிலோனியரால் கைப்பற்றப்பட்டது.
அரசன் எக்கோனியாவும் வேறு சிலரும் நாடுகடத்தப்பட்டனர்.
அதன் பின் செதேக்கியா யூதாவின் அரசனானான்.
கி.மு. 587இல் எருசலேம் மீண்டும் பிடிபட்டுத் தரைமட்டமாக்கப்பட்டது.
இம்முறை அரசன் உட்படப் பெரும்பாலோர் நாடுகடத்தப்பட்டனர்.
597இல் இடம் பெற்ற நாடுகடத்தலே இங்குக் குறிப்பிடப்படுவதாகும்.
[8] 1:9 - காண் பாரூ 1:3-4.
[9] 1:14 - கூடாரத் திருவிழாவைக் குறிக்கும்.
[10] 1:15 = பாரூ 2:6; தானி 9:7.
[11] 1:20 = இச 28:15-68.


அதிகாரம் 2[தொகு]

1 "எனவே, நமக்கும் இஸ்ரயேலை வழிநடத்திவந்த நம் நீதித் தலைவர்கள்,


மன்னர்கள், தலைவர்கள், யூதா நாட்டு மக்கள்,
இஸ்ரயேல் நாட்டு மக்கள் ஆகிய அனைவருக்கும் எதிராகத்
தாம் கூறியிருந்த வாக்கை ஆண்டவர் நிறைவேற்றினார். [1]
2 எருசலேமுக்கு நேரிட்ட பெருங்கேடுகள் போன்று
வானத்தின்கீழ் வேறெங்கும் இதுவரை நிகழ்ந்ததேயில்லை.
மோசேயின் சட்டத்தில் எழுதியுள்ளவாறே இவை அனைத்தும் நிகழ்ந்தன.
3 இதனால் நாம் ஒவ்வொருவரும் நம் சொந்தப் புதல்வர்,
புதல்வியருடைய சதையையே தின்னவேண்டியிருந்தது. [2]
4 மேலும், ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை
நம்மைச் சுற்றிலும் உள்ள எல்லா அரசுகளுக்கும்
அடிமைகளாய் இருக்கும்படி ஒப்படைத்தார்;
அண்டை நாட்டார் அனைவர் நடுவிலும் அவர்களைச் சிதறடித்தார்;
பழிச்சொல்லுக்கும் பாழ்நிலைக்கும் உள்ளாக்கினார்.
5 இவ்வாறு, நாம் உயர்த்தப்படாமல் தாழ்த்தப்பட்டோம்;
ஏனெனில் நம் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குப் பணிந்து நடக்காமல்


அவருக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.

6 "நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நீதி உரியது.


ஆனால் நமக்கும் நம் மூதாதையருக்கும்
இன்று போலத் தலைக்குனிவுதான் உரியது.
7 ஆண்டவர் நமக்கு அறிவித்திருந்த இக்கேடுகள் அனைத்தும் நம்மை வந்தடைந்தன.
8 ஆயினும் நாம் ஒவ்வொருவரும் நம் தீய உள்ளத்தின் போக்கிலிருந்து மனம் மாறும்படி
ஆண்டவர் திருமுன் கெஞ்சி மன்றாடவில்லை.
9 ஆகையால் ஆண்டவர் நம் தீய செயல்களை விழிப்புடன் கவனித்து,
அவற்றுக்கு உரிய தண்டனையை நம்மீது சுமத்தினார்.
ஏனெனில் அவர் நமக்குக் கட்டளையிட்டிருந்த செயல்களை அனைத்திலும் நீதி பிறழாதவர்.
10 இருப்பினும் நாம் அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை;


அவர் நமக்குக் கொடுத்த கட்டளைகளின்படி நடக்கவுமில்லை.

விடுதலைக்காக மன்றாட்டு[தொகு]

11 "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே!


கை வன்மையாலும் அடையாளங்களாலும் வியத்தகு செயல்களாலும்
மாபெரும் ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும்
எகிப்து நாட்டிலிருந்து உம் மக்களை அழைத்து வந்தீர்;
அதனால் இன்று வரை உமக்குப் புகழ் தேடிக்கொண்டீர்.
12 எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நாங்கள் பாவம் செய்தோம்;
இறைப்பற்றில்லாதவர்களாய் வாழ்ந்தோம்;
உம்முடைய நீதிநெறிகள் எல்லாவற்றையும் மீறி நடந்தோம்.
13 உமது சீற்றம் எங்களைவிட்டு நீங்கட்டும்;
ஏனென்றால் வேற்றினத்தார் நடுவே உம்மால் சிதறடிக்கபட்டுள்ள நாங்கள்
எண்ணிக்கையில் குறைந்துள்ளோம்.
14 ஆண்டவரே, எங்கள் மன்றாட்டுக்கும் விண்ணப்பத்துக்கும் செவிசாயும்;
உம் பெயரின் பொருட்டு எங்களை விடுவியும்.
எங்களை நாடுகடத்தியோர் எங்கள்மீது இரக்கம் காட்டச் செய்யும்.
15 இதனால் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீரே என்பதை
உலகம் முழுவதும் அறிந்துகொள்ளும்;


ஏனெனில் இஸ்ரயேலும் அவர் வழிமரபினரும் உமது பெயரைத் தாங்கியுள்ளனர்.

16 "ஆண்டவரே, உமது தூய இல்லத்திலிருந்து எங்களைக் கண்ணோக்கும்;


எங்களை நினைவுகூரும்.
17 ஆண்டவரே, எங்களுக்குச் செவிசாயும்;
உம் கண்களைத் திறந்து பாரும்;
ஏனெனில், உயிர் உடலைவிட்டுப் பிரிந்த நிலையில் பாதாளத்திற்குச் சென்றோர்
ஆண்டவரின் மாட்சியையும் நீதிச்செயல்களையும் அறிக்கையிடமாட்டார்கள்.
18 ஆனால், ஆண்டவரே, மிகவும் துன்புற்று, குனிவுற்று,
தளர்வுற்று, பார்வை குன்றிப் பசியுற்றுத் திரியும் மனிதரே


உம் மாட்சியையும் நீதியையும் அறிக்கையிடுவர்.

19 "எங்கள் கடவுளாகிய ஆண்டவரே,


எங்கள் மூதாதையர்கள், மன்னர்கள் ஆகியோருடைய நீதிச் செயல்களை முன்னிட்டு
உம் திருமுன் நாங்கள் உமது இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடவில்லை.
20 உம் அடியார்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாக நீர் கூறியிருந்தவாறு
உம் சினத்தையும் சீற்றத்தையும் எங்கள்மீது காட்டினீர்.
21 அவர்கள் உரைத்தது பின்வருமாறு:
"ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்;
நீங்கள் தாள் பணிந்து பாபிலோன் மன்னருக்கு பணிவிடை புரிவீர்களாயின்
நான் உங்கள் மூதாதையருக்குக் கொடுத்த நாட்டில் நீங்கள் தொடர்ந்து வாழ்வீர்கள்.
22 ஆனால், நீங்கள் ஆண்டவரின் குரலுக்குச் செவிசாய்க்காமலும்
பாபிலோனிய மன்னருக்கு பணிவிடை புரியாமலும் இருந்தால்,
23 யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும்
மகிழ்ச்சியின் ஒலியும் அக்களிப்பின் ஆரவாரமும்
மணமக்களின் குரலொலியும் அற்றுப்போகச் செய்வேன்.


நாடு முழுவதும் குடியிருப்பாராற்றுப் பாழடைந்துபோகும். [3]

24 "ஆனால் நாங்கள் உமது குரலுக்குச் செவிகொடுக்கவுமில்லை;


பாபிலோனிய மன்னருக்கு பணிவிடை புரியவுமில்லை.
எனவே உம் அடியார்களாகிய இறைவாக்கினர்கள் வாயிலாக
நீர் கூறியிருந்ததை நிறைவேற்றினீர்;
அதாவது, எங்கள் மன்னர்களின் எலும்புகளும்
மூதாதையர்களின் எலும்புகளும்
அவர்களுடைய கல்லறைகளினின்று வெளியேற்றப்பட்டன.
அவை வெளியே எறியப்பட்டு, [4]
25 இதோ! பகலின் வெயிலிலும் இரவின் குளிரிலும் கிடக்கின்றன.
அவர்கள் பஞ்சம், வாள், கொள்ளைநோய் ஆகிய
கொடுந்துயர்களுக்கு இரையாகி மடிந்தார்கள்.
26 இஸ்ரயேல் வீட்டாரும் யூதா வீட்டாரும் தீச்செயல் புரிந்ததால்,


உமது பெயர் விளங்கும் இல்லத்தை இன்றுள்ள கீழ் நிலைக்கு உள்ளாகிவிட்டீர்.

27 "ஆயினும் எங்கள் கடவுளாகிய ஆண்டவரே,


உமது பரிவுக்கும் இரக்கப் பெருக்கத்திற்கும் ஏற்ப
நீர் எங்களை நடத்திவந்திருக்கிறீர்.
28 இஸ்ரயேல் மக்கள் முன்னிலையில் உமது திருச்சட்டத்தை எழுதுமாறு
உம் அடியார் மோசேக்குக் கட்டளையிட்ட நாளில்
அவர் வாயிலாக நீர் மொழிந்தது இதுவே:
29 'நீங்கள் என் குரலுக்குச் செவிசாய்க்காவிட்டால்,
இம்மாபெரும் மக்கள் கூட்டத்தை மிகவும் சிறியதாக்கி,
வேற்றினத்தார் நடுவே சிதறடிப்பேன். [5]
30 அவர்கள் எனக்குச் செவிசாய்க்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
ஏனெனில், அவர்கள் யாருக்கும் வணங்காதவர்கள்;
ஆனால் தாங்கள் அடிமைகளாக இருக்கும் நாட்டில்
தங்கள் இயல்பான நிலைக்கு திரும்புவார்கள். [6]
31 அப்பொழுது தங்கள் கடவுளாகிய ஆண்டவர் நான்தான் என்பதை
அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
ஏனெனில், கீழ்ப்படியும் உள்ளத்தையும் கேட்கக்கூடிய செவிகளையும்
நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
32 அவர்கள் தாங்கள் அடிமைகளாக இருக்கும் நாட்டில் என்னைப் புகழ்வார்கள்;
என் பெயரை நினைவுகூர்வார்கள்.
33 தங்கள் பிடிவாதத்தினின்றும் தீச்செயல்களினின்றும் மனந்திரும்புவார்கள்;
ஏனெனில் ஆண்டவர் முன்னிலையில் பாவம் செய்திருந்த
தங்கள் மூதாதையரின் வழிகளை நினைவுகூர்வார்கள்.
34 அவர்களின் தந்தையராகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக்
கொடுப்பதாக நான் ஆணையிட்டு உறுதியளித்த நாட்டுக்கு
அவர்களை மீண்டும் அழைத்து வருவேன்.
அவர்கள் அதை ஆள்வார்கள்.
நான் அவர்களைப் பெருகச் செய்வேன்.
அவர்கள் எண்ணிக்கையில் குறையமாட்டார்கள். [7]
35 நான் அவர்களோடு முடிவில்லா உடன்படிக்கை ஒன்றைச்செய்து கொள்வேன்.
அதனால் நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்;
அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்.
என் மக்களாகிய இஸ்ரயேலுக்கு நான் கொடுத்துள்ள நாட்டிலிருந்து


அவர்களை இனிமேல் வெளியேற்ற மாட்டேன்.' [8]


குறிப்புகள்

[1] 2:1 = தானி 9:12.
[2] 2:3 = லேவி 26:29; 2 அர 6:28-29.
[3] 2:21-23 = எரே 7:34; 27:10-12.
[4] 2:24 = எரே 8:1-2.
[5] 2:28-29 = இச 28:58-62.
[6] 2:30 = விப 32:9.
[7] 2:34 = எரே 16:15.
[8] 2:35 = எரே 32:38-40.


(தொடர்ச்சி): பாரூக்கு: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை