பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

திருடிக்கொண்டு ஓடிவிட்டான். எனக்குப் பசிக்கிறது" என்றாள் முத்துமணி.

"கொஞ்சம் இரு வருகிறேன்" என்று சொல்லி விட்டுக் கிளி பறந்து சென்றது. அது நேராக ஒரு வாழைத் தோட்டத்துக்குச் சென்றது. அந்தத் தோட்டத்துக்கு ஒரு குரங்குக் குட்டி காவல் இருந்தது.

"குரங்கண்ணா, குரங்கண்ணா! ஒரு சின்னப் பெண்ணுக்கு வயிறு பசிக்கிறது! அந்த நல்ல பெண்ணுக்கு ஒரு சீப்பு வாழைப்பழம் கொடுங்கள்" என்று கேட்டது பச்சைக்கிளி.

குரங்கு உடனே ஒரு வாழை மரத்தில் ஏறி ஒரு சீப்பு வாழைப்பழம் பறித்துக் கொண்டுவந்து கொடுத்தது.

பச்சைக்கிளி அந்த வாழைப்பழச் சீப்பைக் கொண்டுவந்து முத்துமணியிடம் கொடுத்தது. முத்துமணி அதைத் தின்று பசியாறினாள்.

"முத்துமணி, உன்னைப் பெற்ற அம்மாவை நான் பார்த்ததில்லை. ஆனால், நீ என் கூடவந்தால் நாம் ஊர் ஊராகச் சென்று உன் அம்மாவைத் தேடலாம்" என்று கூறியது பச்சைக்கிளி.

பச்சைக்கிளியுடன் முத்துமணி காட்டைக்கடந்து சென்றாள். அவளுக்குப் பசி யெடுத்தபோது அது எங்காவது போய் ஏதாவது பழமோ சோறோ பலகாரமோ கொண்டுவந்து கொடுக்கும்.