பக்கம்:பறவை தந்த பரிசு-1.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
55

பொன்னிக்கு ஒன்றும் புரியவில்லை. பெற்றவர்களோ கூட்டத்துக்குள் மறைந்து விட்டார்கள். காலில் முள்குத்திய வலியோ பெரும் துன்பத்தைக் கொடுத்து கொண்டிருந்தது, அவள் அழுது கொண்டு வழியில் கிடக்கும் கல்லின் மேல் உட்கார்ந்தாள்.

அந்த வழியாக வந்த ஓர் இளைஞன் பொன்னியைப் பார்த்தான்.

"பெண்ணே ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

காலில் முள் குத்தி விட்டது. ஒரே வலியாய் இருக்கிறது. அப்பாவும், அம்மாவும் கூட்டத்தோடு சென்று விட்டார்கள். நான் தனியாக இருக்கிறேன். அழுகை, அழுகையாக வருகிறது என்று வருத்தத் தோடு கூறினாள் பொன்னி.

உடனே அந்த இளைஞன் பக்கத்திலிருந்த முள் செடியிலிருந்து ஒரு முள்ளை ஒடித்துக் கொண்டு வந்தான். பொன்னி வேண்டாம், வேண்டாம் என்று சொல்ல அவள் காலைப் பிடித்து அதில் குத்தி இருந்த முள்ளைத் தன் கையில் இருந்த முள்ளால் குத்தி வெளியில் எடுத்து விட்டான்.

முள் வெளியே வந்ததும் வலியெல்லாம் பறந்து விட்டது.