பக்கம்:கிழவியின் தந்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59

அதன் முதுகில் ஓர் அறை அறைந்தார். அது வீல் என்று கத்திக் கொண்டு ஓடியது. “ஐயோ பாவம்!” என்று அவர் மனம் இறங்கியத.: குழந்தைக்கு நல்ல வார்த்தை சொல்லிச் சமாதானம் செய்ய வேண்டும் என்ற ஆவல் பொங்கி வந்தது. அவர் தாம் பேசக்கூடாதே!

இப்படி ஒன்றன் மேல் ஒன்றாக அவர் வாயைக் கிண்டச் சந்தர்ப்பங்கள் வந்தன. காலையில் இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பதற்குள் அவர் பொறுமையை இழந்தார். கடைசியில் பேசியே விட்டார். தம் வீட்டின் அருகில் நின்ற கழுதையின் மேல் ஒருவன் ஒரு பெரிய கல்லை வீசி எறிந்தான். அந்த வாயில்லாப் பிராணிக்குக் காயம் உண்டாக்கி இரத்தம் ஒழுகியது. தர்மகர்த்தா அதைக் கண்டு கொந்தளித்து. “அட பாவி!” என்று வாய்விட்டுச் சொல்லி விட்டார். அவர் மௌன விரதம் குலைந்தது.

அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த வாக்கை ஒரு கழுதை வந்து வெளிப்படுத்தி விட்டது. அப்பொழுதுதான் அவர் உண்மையை அறிந்தார். தாம் செய்த பிழையை உணர்ந்து, “சும்மா இருக்கிற சாமியாருக்கு இரண்டு பட்டை சாதம்” என்று நிறுத்தி எழுதி விட்டு அந்தச் சாமியாரின் காலில் விழுந்தார்.

பேசுவதை விடப் பேசாமல் இருப்பதுதான் மிகவும் சிரமமானது என்பதற்கு இந்தக் கதை உதாரணம்.