உள்ளடக்கத்துக்குச் செல்

தகடூர் யாத்திரை

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

தகடூர் யாத்திரை- மூலம்

[தொகு]
(புறத்திரட்டு என்னும் தொகைநூலில் அடங்கிய தகடூர் யாத்திரை நூல்செய்யுள்கள் இங்குத் தரப்படுகின்றன.)


பாடல்: 01 (வியத்தக்க)

[தொகு]
அவையடக்கம்


வியத்தக்க காணுங்கால் வெண்மையில் தீர்ந்தார்
வியத்தக்க தாக வியப்பார் - வியத்தக்க
அல்ல வெனினும் அறியாதார் தாம்போல
எல்லாம் வியப்பர் இனிது. (புறத்திரட்டு: 10)


பாடல்: 02 (கிழிந்த)

[தொகு]
இருபிறப்பாளர் இயல்பு
கிழிந்த சிதாஅர் உடுத்தும், இழிந்தார்போல்
ஏற்றிரந்(து) உண்டும், பெருக்கத்து நூற்றிதழ்த்
தாமரை யன்ன சிறப்பினர், தாமுண்ணின்
தீயூட்டி யுண்ணும் படிவத்தர், தீயவை
ஆற்றுழி யாற்றிக் கழுவுபு தோற்றம்,
அவிர்முருக்கந் தோலுரித்த கோலர், துவர்மன்னும்
ஆடையர், பாடின் அருமறையர், நீடின்
உருவந் தமக்குத்தா மாய
இருபிறப் பாளர்க்கு ஒரூஉகமா தீதே. (புறத்திரட்டு: 19)
(அருஞ்சொற்பொருள்
(சிதாஅர்- சீரை, நைந்துபோன ஆடை; இரந்து- பிச்சையெடுத்து, யாசித்து; தீ- முத்தீ; படிவத்தர்- ; கழுவுபு-கழித்துவிட்ட; அவிர் முருக்கம்-ஒளியுடைய முள்முருக்கம் ; துவர்-சிவப்புநிறம் ; அருமறை-வேதம் ; இருபிறப்பாளர்-துவிஜர்/ அந்தணர்;ஒரூஉக-நீக்குக. தீது-தீங்குசெய்வதை.)


பாடல் 03 (நூற்றிவரிற்)

[தொகு]
இரத்தல் இழிவு


நூற்றிவரில் தோன்றும் தறுகண்ணர் ஆயிரவர்
ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன்று
ஆற்றக் கொடுக்கு மகன்தோன்றுந் தேற்றப்
பரப்புநீர் வையகந் தேரினும் இல்லை
இரப்பாரை எள்ளா மகன். (புறத்திரட்டு: 227)


பாடல் 04 (இறப்பப்)

[தொகு]
மறமன்னர் சிறப்பு
இறப்பப் பெருகி இசைபடுவ தல்லாற்
சிறப்பிற் சிறுகுவ துண்டோ அறக்கோலால்
ஆர்வமும் செற்றமும் நீக்கிமற் றியார்கண்ணும்
இன்னாத வேண்டா இகல்வேல் மறமன்னர்
ஒன்னார்க் குயர்த்த படை. (புறத்திரட்டு, 666)

பாடல் 05 (அறம்புரிந்த)

[தொகு]
அரசகுடியிற் பிறத்தல்


அறம்புரிந்தன் றம்ம அரசிற் பிறத்தல்
துறந்த தொடர்பொடு துன்னிய கேண்மை
சிறந்தார்க்கும் பாடுசெய லீயார் தத்தம்
பிறந்தவேல் வென்றிப் பொருட்டு. (புறத்திரட்டு, 667)


பாடல் 06 (சொல்லுங்காற்)

[தொகு]
கூடலின் ஊடல் இனிது
சொல்லுங்காற் சொல்லின் பயன்காணும் தான்பிறர்
சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் பல்லார்
பழிததசொல் தீண்டாமற் சொல்லும் விழுத்தக்க
கேட்டார்க்(கு) இனியவாச் சொல்லானேல்- பூக்குழலாய்
நல்வயல் ஊரன் நறுஞ்சாந்(து) அணியகலம்
புல்லலின் ஊடல் இனிது. (புறத்திரட்டு, 756)


பாடல் 07 (காலவெகுளிப்)

[தொகு]
அறநூலார் கண்டநெறி


கால வெகுளிப் பொறையகேள் நும்பியைச்
சாலுந் துணையும் கழறிச் சிறியதோர்
கொல்கொண்டு மேற்சேறல் வேண்டா, அதுகண்டாய்
நூல்கண்டார் கண்ட நெறி. (புறத்திரட்டு, 77)
"https://ta.wikisource.org/w/index.php?title=தகடூர்_யாத்திரை&oldid=487159" இலிருந்து மீள்விக்கப்பட்டது