பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 நல்வழிச்சிறுகதைகள்

இளைஞனுக்கு அந்த மனிதனைப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. அவன் தன் அருகில் வந்து உட்கார்ந்ததும் இளைஞனுக்குக் கோபம் வந்தது. "உயர்ந்த சாதியான் நான். என்னருகில் நீ எப்படி வந்து உட்காரலாம்?” என்று கேட்டான்.

இச்சொற்கள் பெரியவர் காதில் விழுந்தன. "உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்ளுவதைவிட ஒழுக்கமாய் இருப்பது சிறந்தது” என்று கூறினார்.

இளைஞன் கோபத்தோடு எழுந்து நடந்தான். பெரியவர் பின்தொடர்ந்தார். வழியில் ஒருவன் இளைஞனை மறித்துத் தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டான். "நடுப்பாதையில் நீ எப்படி என்னைக் கடன் கேட்கலாம்” என்று இளைஞன் அவனை அடிக்கக் கையை ஓங்கினான். அவனும் பதிலுக்குக் கையை ஓங்கவே இளைஞன் பயந்து ஓடிவிட்டான்.

"விண் வீரம் பேசுவதைவிட விடா நோயுடன் இருப்பது நல்லது” என்றார் பெரியவர். அவன் சென்ற வழியே சென்றார்.

இளைஞன் வீடு சென்றான். வாசலில் நின்ற மனைவி தெருவிலேயே அவனோடு சண்டை போட்டாள். அவனை வைதாள். இதைக் கண்ட பெரியவர், பழிக்கஞ்சாத மனைவியுடன் வாழ்வதை விடத் தனியாய் இருப்பது நல்லது” என்று சொல்லி விட்டு வழிநடந்தார்.

கருத்துரை:- பிழையற்ற பாட்டும், ஒழுக்கஞ் சேர்ந்த குடிப்பிறப்பும், அஞ்சாத வீரமும், நெஞ்சில் அன்புடைய மனைவியும் வாழ்விற்கு இன்பமாகும்.