பக்கம்:நல்வழிச் சிறுகதைகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாரா. நாச்சியப்பன் ⚫ 81

பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் இந்தக் காட்சியைக் கண்டு ஓடி வந்தார்கள். பெரிய தம்பியையும் அவன் இழுத்துக் கொண்டு வந்த புலியையும் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். ஆனால், பெரிய தம்பியை உடனே மருத்துவரிடம் கொண்டு போகாவிட்டால் அவன் பிழைக்க மாட்டான் என்று தோன்றியது. ஆகவே, அவனை அப்போதே ஊர் மருத்துவர் வீட்டுக்குத் தூக்கிச் சென்றார்கள்.

பெரியதம்பி புலியைக் கொன்ற செய்தியும், அவன் மருத்துவர் வீட்டில் கிடக்கும் செய்தியும், ஊர் முழுவதும் பரவி விட்டது. சின்னத்தம்பியும் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டான். அவன் உடனே மருத்துவர் வீட்டுக்கு வந்தான். பெரிய தம்பிக்கு ஏற்பட்டிருந்த பலமான காயங்களையும், மருத்துவர் அவற்றிற்குப் போட்டிருந்த பெரிய கட்டுகளையும் கண்டு மலைத்துப் போய் நின்று விட்டான். பெரியதம்பி அப்போதுதான் கண் விழித்தான். சின்னத்தம்பியைக் கண்டு சிரிக்க முயன்றான்.

“பெரியதம்பி, நீ ஏன் இந்த ஆபத்தான வேலைக்குப் போனாய் ?” என்று கேட்டான் சின்னத்தம்பி. பெரியதம்பியால் பேசவே முடிய வில்லை.

சில நாட்களில் பெரியதம்பி, மருத்துவரின் பெரு முயற்சியால், முற்றிலும் உடல் நலம் பெற்று விட்டான்.