பக்கம்:கோவூர் கிழார்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

லும் அவனுடைய ஆற்றல் சிறந்து நின்றது. யானைக் கூட்டத்திற் புகுந்த அரியேற்றைப்போல விளங்கினான் அவன். பாண்டிய மன்னன் தக்க ஒற்றர்களைச் சோழ நாட்டுக்கு அனுப்பிச் சோழ மண்டல வீரப் படையின் அளவையும் ஆற்றலையும் உள்ளபடி அறிந்துவரச் செய்திருக்கலாம். அரசியல் நுட்பம் தெரியாத சிலர் தம் வாய்க்கு வந்தவற்றையெல்லாம். கூற, அவற்றை மெய்யென்று நம்பி ஏமாந்து போய்விட்டான். இப்போது சோழ மன்னன் ஆற்றலையும் அவனுடைய படைகளின் பேராண்மையையும் அவன் நேரில் உணர்ந்தான்.

ஒருவருடைய சொந்த நாட்டில் அவர்களுக்கு வலிமை அதிகம். தம்முடைய நாட்டை விட்டு வேற்று நாட்டுக்குச் சென்றால் அவர்களுடைய வலிமை ஓரளவு குறையும். முதலை நீரில் இருந்தால் அது யானையையும் இழுக்கும் வல்லமை உடையதாகும். ஆனால் அது நிலத்தில் இருந்தால் தன் வலியை இழந்திருக்கும். ஆயினும் மிக்க வலிமையுடையவர்களுக்குப் பிறர் நாட்டிலும் வெற்றி கிட்டும். “சிங்கத்துக்குத் தன் காடு பிறன் காடு என்பது இல்லை” என்பது ஒரு பழமொழி. சிங்கம் போன்ற தைரியமும் உறுதியும் உடையவர்கள் வேற்று நாட்டிலும் தம்முடைய திறமையினால் வெற்றி பெறுவார்கள். சோழர் படைக்கு இந்த இயல்பு இருந்தது. பாண்டி நாட்டில் போர் நிகழ்ந்தாலும் பாண்டியனுடைய படையைவிடப் பேராற்றல் உடையதாக அப்படை இருந்தது. பல காலமாகப் போர் செய்யவேண்டுமென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/29&oldid=1089966" இலிருந்து மீள்விக்கப்பட்டது