பக்கம்:காட்டு வழிதனிலே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி வாக்கு

105

விஷயத்தை ஆழ்ந்து எண்ணிப் பார்த்து வெளி நாடுகளுக்கு நூற்றுக்கணக்காக சொற்பொழிவாளர்களே அனுப்பும்படி அவர் கேட்டுக்கொள்ளுகிறார்.

தமிழ் நாட்டிலே இசையைப்பற்றி ஒரு பெரிய விவாதம் நடக்கிறது. பாரதியார் இது சம்பந்தமாகத் நமது கருத்தை முன்பே வெளியிட்டிருக்கிறார்.

“பூர்விக மஹான்களுடைய பாட்டுகளை மறந்து போய்விடவேண்டும் என்பது என்னுடைய கட்சியன்று. அவற்றை அர்த்தத்துடன் பாடவேண்டும். பதங்களைப் பிழையாக உச்சரிக்கக் கூடாது. பதங்களை வாய்விட்டுத் தெளிவாகச் சொல்லவேண்டும். விழுங்கிவிடக்கூடாது. பத்து முப்பது கீர்த்தனங்களையே ஓயாமற் பாடி சங்கீதத்தை ஒரு தொல்லையாகச் செய்துவிடக் கூடாது.

“வித்வான்கள் பழைய கீர்த்தனங்களையே பாடம் பண்ணிப் புராதன வழிகளைத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். ஆனால், தமிழ்ச் சபைகளிலே எப்போதும் அர்த்தம் தெரியாத பிற பாஷைகளில் பழம் பாட்டுக்களை மீட்டும் மீட்டும் சொல்லுதல் நியாயமில்லை. அதனால் நமது ஜாதி சங்கீத ஞானத்தை இழந்துபோகும்படி நேரிடும்.”

மனித சமூகத்தின் நன்மைக்காகச் சாஸ்திரங்கள் ஏற்பட்டன. அவை காலத்திற்குத் தக்கபடி மாறும். ஒரு காலத்தில் நன்மை பயந்த ஒரு சாஸ்திர விதி மற்றெந்தக் காலத்திலும் நன்மை பயக்குமென்பதில்லை. ஆதலால், காலத்தை அனுசரித்து அதை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று பாரதியார் உபதேசம் செய்கிறார்.