பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அழைத்துப் போனதைப்பற்றியும் மருதாசலம் விவரமாகச் சொல்லிக்கொண்டிருந்தான். “அவன் என்னைப் பட்டணத்துக்குக் கூட்டிக்கொண்டு போவதாகச் சொன்னதெல்லாம் உங்களை ஏமாற்றத்தான். இந்தப் பையன் வந்திருக்காவிட்டால் நான் அந்த மர வீட்டிற்குள்ளேயே கிடந்து செத்திருப்பேன்” என்றான் மருதாசலம்.

இதையெல்லாம் கேட்டுத் தில்லைநாயகத்திற்குக் கோபம் கோபமாக வந்தது. “இந்தத் திருட்டுப்பயலுக்கா நான் இத்தனை நாளாய் உழைத்தேன்; எதற்காக அவன் இந்தப் பொம்மையெல்லாம் செய்கிறான்? திருடனுக்கு இவை எதற்காக வேண்டும்?” என்றார் தில்லைநாயகம் ஆத்திரத்தோடு.

“இந்த மரப்பொம்மைகள் தாம் அவன் திருட்டு வேலைக்கு உதவி” என்று மருதாசலம் கூறினான். அவன் கூறியது ஒருவருக்கும் விளங்கவில்லை. உடனே அவன் தன் தந்தைக்கும், தங்கமணி முதலியவர்களுக்கும் விளக்கமாகக் கூறத் தொடங்கினான்.

குகைக்குள்ளே 3, 4 மரப்பொம்மைகள் கிடந்தன. ஒவ்வொன்றும் சுமார் 4 அல்லது 5 அடி உயரம் இருக்கும். எல்லாம் பரத நாட்டியமாடும் பெண்களைப் போன்றவை. ஒவ்வொன்றையும் பெண் உருவத்தின் முன்பகுதி தனியாகவும், பின்பகுதி தனியாகவும் இருக்குமாறு நடுவிலே ரம்பத்தால் அறுத்திருந்தார்கள். அப்படி அறுத்த ஒரு பொம்மையின் அறுபட்ட உட்பகுதியிலே இருக்கும் மரக்கட்டையை உளியால் செதுக்கிக் குடைந்து எடுத்திருந்தார்கள்.

“அப்பா! நீங்கள் எதற்கு இப்படி உட்பகுதியைக் குடைந்து எடுக்கிறீர்கள் தெரியுமா?” என்று மருதாசலம் தன் தந்தையைக் கேட்டான்.

“உனக்கு அது தெரியாதா? பொம்மையின் உள் பகுதியை இப்படிக் குடைந்து எடுத்துவிட்டால் பொம்மையின் எடை குறைந்து போகும். அமெரிக்காவுக்கு அனுப்பும் போது கப்பல் கூலி அதிகமாக இருக்காது. தூக்கிச்செல்லவும் சுலபம்” என்று தில்லை நாயகம் தமக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொன்னார்.