பக்கம்:பாண்டியன் நெடுஞ்செழியன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போரில் ஊக்கம்

45

பரதவர் அதனைப் பொருட்படுத்தவில்லை. மீண்டும் நினைவுறுத்தினான். அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டபடி வாளாவிருந்தனர். ‘எங்கே யார் வாலை ஆட்டுகிறார்கள்?’ என்று காத்து நின்ற அரசன் உடனே புறப்பட்டுவிட்டான்.

பரதவருக்கும் பாண்டியருக்கும் போர் மூண்டது. இனப்பற்று எவ்வளவு உறுதியானது என்பதை அரசன் அன்று உணர்ந்தான். பரதவர் அனைவரும் ஒன்று சேர்ந்துகொண்டனர். ஒருவனவது மரபையும் நியாயத்தையும் எடுத்துச் சொல்லக் கூடாதோ? பாண்டி நாட்டுக் கடற்கரை நீளமானது. அங்குள்ள பரதவர்களில் ஒருவர் விடாமல் யாவரும் போரில் சேர்ந்தனர். கடல் வாணிகத்தால் பரதவர் தலைவர் பலர் பெரும் பொருள் ஈட்டியிருந்தார்கள். அவர்களுடைய உதவியைப் பெற்று வாழும் மக்கள் பலர் அங்கங்கே இருந்தனர். அவர்களிற் பலர் பரதவர் கட்சியிலே சேர்ந்து போர் புரிந்தனர்.

‘இது மிகச் சிறிய போராகத்தான் இருக்கும்’ என்று எண்ணிய பாண்டி நாட்டுப் படைத் தலைவர்கள் ஏமாந்து போனார்கள். பரதவர் படைப் பெருக்கம் பொருளின் ஆற்றலை எடுத்துக்காட்டியது.

நினைத்தபடி அந்தப் போர் விரைவில் முடியவில்லையே யன்றி, முடிந்தபோது வெற்றி, பாண்டிய மன்னனுக்கே உண்டாயிற்று என்று சொல்லவும் வேண்டுமா? தென் பரதவர் மிடலைச் சாய்த்து மீட்டும் பழையபடியே திறை செலுத்தும்படி ஆணையிட்டு விட்டு, மதுரையை அடைந்தான் நெடுஞ்செழியன்.

பா.4