பக்கம்:சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சமுதாய மறுமலர்ச்சி இலக்கியங்கள் 口 93

இச்சிக்கிறார்கள். சுவைத்து அனுபவிக்கிறார்கள்! எச்சில் ஆக்குகிறார்கள். பலியான பிறகு உயர் ஜாதித் துடுக்கை காட்டி ஒதுங்கிக் கொள்ளும் கொடுமையை அண்ணா நாடி நரம்புகளும் இரத்தமும் கொதிக்கும்படி கண்டிக்கிறார்.

“பழி வருகிறதே என்று பதறித் துடித்துக் கேட்டால் சுவைத்து அனுபவித்த பிறகு மதம் காட்டுகிறான். மதம் மாற உடன்பட்டால், மாறி வந்தால் முன்னுள்ள கீழ் ஜாதியிலேயே சேர வேண்டுமாம்! இது என்ன நியாயமோ? இந்த அநீதியை தில்லை நடராஜனும், சீரங்க நாதனும் தாங்கிக் கொண்டிருப்பது எதனாலோ நமக்குப் புரியவில்லை” என்று கனல் கக்கக் கண்டிக்கிறார்.

‘பார்வதி பி. ஏ.’யில் இடுக்கண் உற்ற நிலையிலும் கூட, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கூட ஒரு தமிழ்க் குழந்தையை - ஜாதி, இனம், மொழி, எண்ணம் படியாத பச்சைக் குழந்தையை ஏற்று வளர்க்க பெங்களுர் பார்ப்பனச் சேரி ஆண்டாள் அம்மாளுக்கு மனம் துணியாத ஜாதி வெறியை அண்ணா சுவையாகப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

தமிழ்க் குழந்தையை வளர்ப்பது பாவமாகவும், பொய் சொல்லிக் கணவனை ஏமாற்றுவது புண்ணியமாகவும் தெரிகிறது. அந்தப் புண்ணியவதிக்கு, “சூத்திரர் வீட்டுக் குழந்தையை என் குழந்தேன்னு கூறி எங்க ஆத்திலே வளக்கிறது மகாபாவ காரியம்னு நேக்கு பயமாயிடுத்து. அதுக்காகத்தான் அவரிடம் சொப்பனம்னு கதை சொன்னேன்” என்று ஆண்டாளைப் பேச வைத்து ஜாதி அமைப்பின் இறுகிய நிலையைப் புலப்படுத்துகிறார்.