பக்கம்:குறட்செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நிலப்பிரபுத்துவ சமுதாயமும், தனியுடைமை ஆதிக்கமும்; பெண் அடிமைத்தனமும் பரவலாக இருப்பதன் காரணமாகப் பெண்ணின் ஒழுக்கக்கேடு மட்டும் பெரிதுப் படுத்தப்படுகிறது. அதனால், மற்ற இனத்திற்குத் தேவை யில்லையென்று கொள்ளக்கூடாது. ஆதலால் மனித சமூகத்தின் எல்லா உறவுகளிலும் நம்பிக்கையும் கடமைப்பாட்டுணர்வும் நிலவ வேண்டும்.

சிறந்த கற்புடைய பெண் தெய்வம் தொழமாட்டாள். தெய்வம் கடவுளாகாது. தெய்வம் என்ற சொல்லைப் பெரும்பாலும் சிறு தெய்வங்கள் என்றே அறிஞர்கள் ஏற்றுவர். கணவனைக் கூட்டுவிக்கும் காமதேவதையைத் தொழுதலையே "பீடன்று" என்று மறுத்தாள் கண்ணகி. காரணம், தெய்வத்தைத் தொழும்பொழுது தன் கணவனின் குற்றத்தைக் கூறித் தொழவேண்டும். தன்னுடைய கணவனின் பழியை மற்றவர் அறியக்கூறுதலும் தூற்றுதலும் கற்புடையப் பெண்ணுக்கு அழகல்ல.

அதனையே, பிறிதோரிடத்தும் திருவள்ளுவர். சொல் காத்தலையும், பெண்ணுக்குக் கடமையாக்கினார், ஆதலால், தெய்வம் தொழுகின்ற பழக்கத்தைக் கற்புடைப் பெண்ணுக்கு திருக்குறள் விளக்குகிறது.

"கொழுநன் தொழுதெழுவாள்" என்பது கற்புடைய பெண்ணின் அடுத்த இலக்கணம். திருக்குறளின் சொல்லமைப்பு ஆழ்ந்த சிந்தனைக்குரியது. "தொழுதல் என்பதற்கு உடலால் செய்யும் வணக்கம் என்பது மட்டும் பொருள் அன்று. உள்ளத்து உணர்வில் ஒன்றாகி—உணர்வு தலைகாட்டும் பொழுதெல்லாம் இனந்தெரியாத பணிவும், பரிவும் கொண்டு வாழ்தலென்றும் பொருள் கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/28&oldid=1551777" இலிருந்து மீள்விக்கப்பட்டது