அம்மானை

விக்கிமூலம் இலிருந்து
அம்மானை
பாடல்கள் 86
தனிப்பாடல் திரட்டு
பக்கம் 99 முதல் 112
குறிப்புரை - செங்கைப் பொதுவன்

முன்னுரை[தொகு]

1[தொகு]

அம்மானை மகளிர் ஆடும் ஒருவகை விளையாட்டு.
மூன்று பேர் விளையாடுவர்
இருவர் எதிரில் ஒருவர் என்ற முறையில் அமர்ந்துகொண்டு விளையாடுவர்

மூவர் கையிலும் மூன்று அம்மானைக் காய்கள் இருக்கும்
மூவரும் தம் கையிலுள்ள காயை ஒரே நேரத்தில் மேலே தூக்கிப் போடுவர்
வலப்புறம் உள்ளவர் பிடிக்கும் வகையில் தூக்கிப் போடுவர்

ஒருவர் கைகளில் இரண்டு அம்மானைக் காய்கள் இருக்கக் கூடாது
இடப்புறம் உள்ளவர் போட்ட காயைத் தரையில் விழாமல் பிடிக்கவும் வேண்டும்
இவை விளையாட்டு விதிமுறை
பாடிக்கொண்டே ஆடுவர்

சிலப்பதிகாரத்தில் இது போன்ற அம்மானைப் பாடல் மூன்று உள்ளன
சேர, சோழ, பண்டியரைப் போற்றும் பாடல்களாக அவை உள்ளன

பாட்டுப் பாடாமல் கூழாங்கல்லைத் தூக்கிப் போட்டுப் பிடித்தாடும் இந்த விளையாட்டை இளமையில் நேரில் பார்த்திருக்கிறேன்
தஞ்சைப் பகுதியில் பார்ப்பன மகளிர் அம்மானைக் காய்களை உழக்கில் பிடித்தெறிந்து ஆடுவர் எனவும் கேள்விப்பட்டிருக்கிறேன்

திருவாசகத்தில் வரும் பாடல் மூவர் உரையாடலாக இல்லாமல் ஒருவர் பாடும் பாடலாக உள்ளது

சிலப்பதிகாரத்தில் அம்மானைப் பாடல்[தொகு]

எடுத்துக்காட்டு

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை.

திருவாசகத்தில் அம்மானைப் பாடல்[தொகு]

எடுத்துக்காட்டு

செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். 175

1, 2, 3[தொகு]

1 - பிள்ளையார்[தொகு]

சித்தம்பூர் வாழும் சிவனளித்த பிள்ளையார்
மெத்தப் பெருவயிறா வீங்கினர் காணம்மானை
மெத்தப் பெருவயிறா வீங்கினரே யாமாயின்
இத்தரையின் மீதவருக்கு ஏச்சல்லவோ அம்மானை
இரவுபகல் குட்டிணிக்கிங்கு ஏச்சுண்டோ அம்மானை. (1)
சித்தம்பூர் என்பது ஓர் ஊர். \ இந்த ஊரில் குடிகொண்டுள்ள சிவன். \ சித்து என்பது சித்தம், வான்வெளி, \ அம்பு = நீர் \ வான்வெளி நீர் கங்கையை வைத்துக்கொண்டிருப்பவன் சிவன். \ சிவன் அளித்த மகன் பிள்ளையார் \ இந்தப் பிள்ளையார் வயிறு பெருத்திருக்கிறது பாரடி
வயிறு பெருத்திருந்தால் ஏளனப்படுத்தி ஏச மாட்டார்களா
இரவிலும் பகலிலும் அவனைப் பார்த்துத் தன் தலையில் குட்டுப் போட்டுக்கொண்டு கும்பிடுகிறார்களே \ அவனுக்கு ஏது, ஏச்சு

2 - திருமால்[தொகு]

விருப்பாரும் பூஞ்சோலை மேவு திருவரங்கர்
திருப்பாற் கடலுடைய செல்வர் காணம்மானை
திருப்பாற் கடலுடைய செல்வரே யாமாயின்
இரப்பாற்குப் பெண்கொடுத்தது என்னமதி அம்மானை
என்றல்லோ மண்ணுண்டு இருந்தனர் காணம்மானை. (2)
திருவரங்கத்தில் உள்ள திருமால் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட செல்வர்
அவர் செல்வர் என்றால், தன்னைப் பெண்ணாக்கிக்கொண்டு, பிச்சை எடுக்கும் சிவனுக்கு மனைவியாகி, அவனுடன் இணைந்திருந்ததை என்னவென்று மதித்துப் பார்
மண்ணை உண்டவர் மதி இப்படித்தான் இருக்கும். (வெண்ணெய் உண்ட உன் வாயைக் காட்டு என்றபோது, வாய்க்குள் மண்ணுலகம் தெரிந்தது)

3 - மன்மதன்[தொகு]

ஆதாரமாம் குடந்தை ஆதி கும்பேச்சுரனார்
கோதாடு மன்மதனைக் கொன்றெரித்தார் அம்மானை
கோதாடு மன்மதனைக் கொன்றெரித்தார் ஆமாயின்
மாதா பிதாக்கள் பழி வாங்காரோ அம்மானை
வாங்குதற்கு முன்வாயில் மண்விழுந்த தம்மானை. (3)
குடந்தை கும்பேயர் மனமதனை எரித்துக் கொன்றார்
எரித்துக் கொன்றார் என்றால், மன்மதனின் தாய்தந்தையர் பழிவாங்க மாட்டார்களா
பழிவாங்குவதற்கு முன் தந்தை வாயில் மண் விழுந்தது (காமன் தந்தை திருமால் என்னும் கதைக்கோட்பாடு)

4, 5, 6[தொகு]

4 - காஞ்சி காமாட்சி[தொகு]

தொல்லுலகில் எல்லோரும் சொன்ன மாங்கனி யொன்று
நல்லதொரு காஞ்சி நகரிலுண்டே அம்மானை
நல்லதொரு காஞ்சி நகரிலுண்டே ஆமாயின்
எல்லார்க்கும் தானே இனிக்குமோ அம்மானை
இனித்திருக்கும் ஒருவேளை எரித்திருக்கும் அம்மானை (4)
உலகில் எல்லாரும் தின்னும் மாங்கனி ஒன்று உண்டு (காமாட்சி)
அது எல்லாருக்கும் இனிக்குமா
ஒருவேளை இனிக்கும். ஒருவேளை எரிக்கும் (நாக்கில் எரிப்பது கொற்றவை)

5[தொகு]

மட்டுவார் கூந்தல் உமையாள் மனம்மகிழ
கட்டுமா ஒன்றுளது கச்சியிலே அம்மானை
கட்டுமா ஒன்றுளது கச்சியிலே ஆமாயின்
இட்டமாய் நற்கனி காயில்லையோ அம்மானை
இல்லாமல் கல்லால் எறிவாரோ அம்மானை. (5)
காஞ்சியில் இருப்பது இரண்டு"மா" \ ஒன்று மாங்கனி (காமாட்சி) \ மற்றொன்று மா என்னும் களிறு (ஏகாம்பரர்)
உமை கட்டிக்கொள்ளும் மா [ஆன்மா எனலுமாம்] சிவன்
மாங்கனி கட்டிக்கொள்வது மாங்காய் அல்லவோ
அது காயாய் இருந்ததால் தானே கல்லால் அடிபட்டது \ சாக்கிய நாயனார் சிவனைக் கல்லால் அடித்து வழிபட்டார்

6[தொகு]

கல்லாலின் கீழிருக்கும் காளத்தி நாதருக்குப்
பொல்லாச் சிலந்தி புகுந்தது காண் அம்மானை
பொல்லாச் சிலந்தி புகுந்ததுவே யாமாயின்
வல்லான் ஒருபணிக்கன் வாரானோ அம்மானை
வந்தல்லோ பண்டு வடுப்பட்டது அம்மானை. (6)
கல்லால மரத்தடியில் வீற்றிருப்பவன் சிவன் \ காளத்தி நாதன் \ அவன் மேல் சிலந்தி ஒன்று கூடு கட்டிற்று (திருவானைக்கா சிவன் தலைக்கு மேல் சிலந்தி கூடு கட்டிற்று)
சிலந்தி என்னும் சொல் உடலில் தோன்றும் சீழ் பிடித்த கட்டியையும் குறிக்கும் \ சிலந்தி என்றால் அதனை அறுத்து நோய் போக்கும் மருத்துவன் வரமாட்டானா
அவன் வந்து அறுத்து வடுப்படுத்தியதால் தானே சிவன் உடம்பில் "வடு" தோன்றியது \ காஞ்சி காமாட்சி அணைத்த வளைத் தழும்பு சிவன் முதுகில் இருந்தது

7, 8, 9[தொகு]

7[தொகு]

ஆரத்தட வயல்சூழா மாதை வாழ் அழகர்
தாரொத்த மேனி தழலொத்த தம்மானை
தாரொத்த மேனி தழலொத்த தாமாயின்
ஈரக்கங்கா நதியாள் இருப்பதேன் அம்மானை
ஈரம்பெரு நெருப்புக்கு இல்லையே அம்மானை.(7)
மாதை நகர் சிவன் மேனி தழலாய் இருக்கிறது
கங்கை ஆறு குளிர்ச்சியாக இருக்குமே
பெரு நெருப்புக்கு ஈரம் உண்டோ

8[தொகு]

மாசிலாத் தென்விரிஞ்சை மார்க்க சகாய லிங்கர்
வேசியர்பால் தூதுசொல்லி மீண்டனர் காணம்மானை
வேசியர்பால் தூதுசொல்லி மீண்டனரே யாமாயின்
வீசைமுனை வேழ்க்கம் அவர்க்கு இல்லையே அம்மானை
இல்லாமல் தலை யிறக்கம் ஏன்வந்தது அம்மானை. (8)
சிவன் பரவை நாச்சியார் என்னும் வேசியிடம் தூதாகச் சென்று மீண்டார்
அப்படியாயின் அவருக்கு வெட்கம் இல்லையா
அவருக்கு இல்லாவிட்டால் என்ன \ அவருக்கு முன்னர் நாம் தலை வணங்குகிறோமே

9[தொகு]

வற்றாத வையையிலும் வாள்விஜயன் தன்கையிலும்
பற்றாமல் அண்ணலடி பட்டனர் காணம்மானை
பற்றாமல் அண்ணலடி பட்டனரே யாமாயின்
பெற்றோர் இல்லாத சிறு பிள்ளையோ அம்மானை
பிள்ளை மதியடைய பித்தர் காண் அம்மானை. (9)
வைகையில் அணை கட்டும்போது பிரம்படி பட்டார் \ விசயன் (அருச்சுணன்) வில் அம்பால் அடி பட்டார்
பெற்றோர் இல்லாத பிள்ளை என்பதால் அடி பட்டாரோ
அவரிடம் பிள்ளை-மதி (பிறைநிலா) இருக்கிறதே \ பிள்ளை வைத்திருப்பவர் பிள்ளைதானே

10, 11, 12[தொகு]

10[தொகு]

பூங்கா வனஞ்சூழும் புள்ளிருக்கும் வேளூரான்
பாங்கான தென்மதுரைப் பாணன் காணம்மானை
பாங்கான தென்மதுரைப் பாணனே யாமாயின்
தாங்காது இழையெடுத்துத் தைப்பேனோ அம்மானை
தையலுக்கு நல்ல சமர்த்தன் காணம்மானை. (10)
புள்ளிருக்கு வேளூர் பூங்காவனம் கொண்டது
இங்குள்ள சிவன் தென்மதுரைப் பாணன்
இவன் பாணன் என்றால் என் அணிகலன்களைக் கழலச் செய்தது ஏன்
அவன் மகளிரோடு விளையாடுவதில் நல்ல சமர்த்தன்
சிவன் மேல் காதல் கொண்டவன் ஒருத்தியின் வினாவாக இந்தப் பாடல் தொடங்குகிறது.

11[தொகு]

இப்பூமி தன்னில் இயல்பாந் திருத்தணியில்
முப்பூ விளையும் முருகருக்கே அம்மானை
முப்பூ விளையும் முருகருக்கே யாமாயின்
அப்பவருக்கு அங்கே அரிதல்லவோ அம்மானை
அவர்க்கு முகமாறான் ஆலப்பரிதோஅம்மானை. (11)
திருத்தணியில் இருப்பவன் முருகன்
முன்று உலகங்களிலும் விளையும் முருகுக்குப் பூ அருக்கு
அருக்கு இருந்தால் தண்ணீர் கிடைக்காது அல்லவா
அவன் பெயறே ஆறன் (ஆறுமுகன்) ஆயிற்றே

12[தொகு]

மாந்தரொடு விண்ணோர் வணங்கு தணிகாசலத்தான்
போந்து தலையோட்டில் இரப்போன் மகன் காணம்மானை
போந்து தலையோட்டில் இரப்போன் மகனே யாமாயின்
காந்தி விடுமாடகப் பொற்காசு அரிதோ அம்மானை
கல்லார வெற்படைந்தால் காசரிதோ அம்மானை. (12)
தணிகையில் இருக்கும் முருகன் மண்டை ஓட்டில் பிச்சை எடுக்கும் சிவனின் மகன்
என்றாலும் காந்தி (காந்தன்) விடு பொற்காசு அவனுக்கு அரிது அன்றோ \ திருவீழிமிழலை என்னும் ஊரில் சிவன் அப்பருக்கும் சம்பந்தருக்கும் பொற்காசு வழங்கியது
மணிக்கல் இருக்கும் தணிகை மலையில் இருந்தால், காசுக்கு என்ன பஞ்சம் \ தணிகை மலைப் பாறைகள் இந்தியாவில் இருக்கும் தொன்முது பாறைகள் என்பது நிலவியலார் gyalogist கருத்து

13, 14, 15[தொகு]

13[தொகு]

பாலாறு சேரும் பரமர் திருவிற் கோலர்
நாலாறு சேரி நடுப்புகுந்தார் அம்மனை
நாலாறு சேரி நடுப்புகுந்தார் ஆமாயின்
தோலாமையோடு எலும்பு தொட்டது உண்டோ அம்மானை
தொட்டனர் என்றே மறையோர் தொட்டிலர் காணம்மானை. (13)

14[தொகு]

கோணா மலையுடைய கோதை இடப்பாகனார்
சேணாடர் போற்றும் திருவம்பலர் காணம்மானை
சேணாடர் போற்றும் திருவம்பலரே யாமாயின்
ஏனாதி மால் பிரமர்க்கு எட்டாரோ அம்மானை
இடை மதிக்கும் குசமதிக்கும் எட்டுவரோ அம்மானை. (14)

15[தொகு]

அண்டர் எல்லாம் போற்றுகின்ற அண்ணாமலை நாதர்
கண்டொரு பெண்பாதி உடல்கைக் கொண்டார் அம்மானை
கண்டொரு பெண்பாதி உடல்கைக் கொண்டார் ஆமாயின்
உண்ட விடமெல்லா மேலூராதோ அம்மானை
ஊருமென்றே உண்ணா முலையானாள் அம்மானை. (15)

16, 17, 18[தொகு]

தேவாதி தேவன் திருவல்லிக் கேணிஅண்ணல்
ஓவாப் பெருஞ்செல்வம் உற்றவன்காண் அம்மானை
ஓவாப் பெருஞ்செல்வம் உற்றவனே யாமாயின்
பூவாளும் மாவலிபால் போவதேன் அம்மானை
போன கதை கேட்கிலது பூத்தான் அம்மானை. (16)
வில்வத் திருச்சடிலம் மேவும்மயி லேச்சுரனார்
செல்வம் தழைந்தநிறை செல்வர் காணம்மானை
செல்வம் தழைந்தநிறை செல்வரே யாமாயின்
இல்லங்கள் தோறும் இரப்பதேன் அம்மானை
இரந்தார் விதிதலைவந்(து) ஏறலால் அம்மானை. ((17)
தீமைக் கடல்விடத்தைத் தேர்ந்தவிரிஞ் சேச்சுரனார்
வாமத் தொருமயிலை வைத்தனர்காண் அம்மானை
வாமத் தொருமயிலை வைத்தனரே யாமாயின்
ஏமமுடி மேல்அரவம் ஏறுமோ அம்மானை
ஏறாதோ வன்புற்(று) இருந்தக்கால் அம்மானை. (18)

19, 20, 21[தொகு]

இருவருக்கும் காண்பரிய ஈசர் மதுரேசர்
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனர் காணம்மானை
விருது கட்டி அங்கம் வெட்டி வென்றனரே யாமாயின்
அருமை உடம்பு இரு கூறாவதேன் அம்மானை
ஆனாலும் காயமில்லை ஐயரிவர்க்கு அம்மானை. (19)
அடர்ந்து வாழும் குடந்தை யாராவமுதர்
மடந்தை பாகர்க்கு ஏறுமாடு காணம்மானை
மடந்தை பாகர்க்கு ஏறுமாடுதான் ஆமாயின்
கடந்த பாதம் இரண்டும் காணாரோ அம்மானை
கண் இரண்டும் பூவானால் காண்பாரோ அம்மானை. (20)
கொண்டல் இகழ் சோலை வளர் கும்பபுரி வாழரனார்
பெண்டுகளைச் சுமந்த பித்தர் காணம்மானை
பெண்டுகளைச் சுமந்த பித்தரே யாமாயின்
கண்டவிடம் தங்கும் கருத்தரோ அம்மானை
கண்டவிடம் தங்கும் கருத்தர் தாம் அம்மானை. (21)

22, 23, 24[தொகு]

தெண்டிரைசூழ் தில்லைச் சிவகாமித் தாயார்க்குக்
கண்டம்எல்லாம் ஞானக் கரும்பதுகா ணம்மானை
கண்டம்எல்லாம் ஞானக் கரும்பதுவே யாமாயின்
அண்டர்பிரான் ஆலைதனில் ஆடானோ அம்மானை
ஆடிப் புலியூர் அமர்ந்தனன்காண் அம்மானை. (22)
விரித்தசடைத் தில்லைநகர் மேவும் சிதம்பரர்க்கு
வருத்தமிகும் ஒருகால் வாதம் அல்லவோ அம்மானை
வருத்தமிகும் ஒருகால் வாதமே யாமாயின்
பெருத்தகடனம் சாற்றிப் பிழையாரோ அம்மானை
பிழைத்தல்லோ நடமாடிப் பேருற்றார் அம்மானை. (23)
விரிந்தபுகழ்ப் புள்ளிருக்கும் வேளூர் வயித்தியனார்
பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதர்கா ணம்மானை
பரிந்துவினை தீர்க்கவல்ல பண்டிதரே யாமாயின்
மருந்துவிலை கைக்கூலி வாங்காரோ அம்மானை
வாயிலே மண்போட்டு வாங்குவர்கா ணம்மானை.(24)

25, 26, 27[தொகு]

பாட்டு வரிச் சுரும்பர் பாடும் சிதம்பரனார்
மாட்டு இடையன் தேட மன்றில் ஆடெடுத்தார் அம்மானை
மாட்டு இடையன் தேட மன்றில் ஆடெடுத்தார் ஆமாயின்
ஆட்டுக்கால் தன்னை அறிந்தது எவர் அம்மானை
அறிந்தன காண் காற்புலியும் அரைப்பாம்பும் அம்மானை. (25)
இன்னதிது என்று இறைவன் திறமதனைச்
சொன்ன மறையும் துணிந்து அறியார் அம்மானை
சொன்ன மறையும் துணிந்து அறியா தாமாயின்
கன்னி வனத்திடையே காணலாம் அம்மானை
கண்டார் பிறிதொன்றும் காணார் காணம்மானை. (26)
மாலறியாக் கள்ளன் அவன் வந்து மன்றுளே புகுந்து
கோலமுடன் ஆடெடுத்துக் குன்று ஒளித்தான் அம்மானை
கோலமுடன் ஆடெடுத்துக் குன்று ஒளித்தான் ஆமாயின்
காலுதலை தோல் எலும்பு கண்டது உண்டோ அம்மானை
கண்டல்லோ இருகழுகு காத்திருப்ப தம்மானை. (27)

28, 29, 30[தொகு]

கற்றைச் சடை முடியார் கச்சியே கம்பருக்கு
நெற்றிக் கண்ணொன்று நெருப்பது காணம்மானை
நெற்றிக் கண்ணொன்று நெருப்பதுவே யாமாயின்
பற்றிச் சடையிற் படராதோ அம்மானை
படரும் என்றே கங்கை பதிவிருந்தாள் அம்மானை. (28)
செம்பொன் மலை வெள்ளி மலை சேர இரண்டிருக்கக்
கம்பர் விரும்புவதும் கஞ்சி காணம்மானை
கம்பர் விரும்புவதும் கஞ்சியே யாமாயின்
அம்புவி எல்லாம் அளக்க வன்னம் எங்கே அம்மானை
அன்னம் திருக்கம்பை ஆற்றில் உள்ளது அம்மானை. (29)
ஈசன் பசுவாகி யேமன் ஒரு கன்றாகி
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் அம்மானை
வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின்
காசளவு பாலும் கறவாதோ அம்மானை
கன்றை உதைத்த காலி கறக்குமோ அம்மானை. (30)

31,32,33[தொகு]

ஒற்றியூர்த் தியாகர் ஒரு பெண்பால் சுந்தரரை
உற்றுநீ சத்தியம் பண்ணென்று ஒளித்தார் அம்மானை
உற்றுநீ சத்தியம் பண்ணென்று ஒளித்தார் ஆமாயின்
குற்றம் உண்டோ அன்பர்மேல் கோபமோ அம்மானை
கோபம் ஏதோ மகிழ்வாய்க் கொண்டு இருந்தார் அம்மானை. (31)
அக்கரவம் பூண்டிருந்த அங்கயல் கண்ணம்மை பங்கர்
கைக்கொண்டு செத்த கன்றைக் காவி வந்தார் அம்மானை
கைக்கொண்டு செத்த கன்றைக் காவி வந்தார் ஆமாயின்
சொக்கர் மதுரைக்குத் தோட்டியோ அம்மானை
தோட்டி என்றே காமனையும் சுட்டெரித்தார் அம்மானை. (32)
ஆரவயல் சூழருணை அண்ணாமலை நாதர்
பேருலகில் வண்ணாரப் பெண் கொண்டார் அம்மானை
பேருலகில் வண்ணாரப் பெண் கொண்டார் ஆமாயின்
சாரும் புடைவை எல்லாம் தப்பினரோ அம்மானை
தப்பினார் தாரு வனத்தார் புடைவை அம்மானை. (33)

34,35,36[தொகு]

திருப்பாதிரிப் புலியூர்ச் செல்வச் சிவக் கொழுந்தர்
கருப்பாம் சிலையானைக் காய்ந்தனர் காணம்மானை
கருப்பாம் சிலையானைக் காய்ந்தனரே யாமாயின்
ஒருத்திக்கு இருவருடன் கலப்பேன் அம்மானை
கலவாரோ கன்னி வனம் காவல் கொண்டால் அம்மானை. (34)
மன்றாடியாம் எங்கண் மாமா சிலாமணியார்
நன்றான முல்லைக்கு நாயகர் காணம்மானை
நன்றான முல்லைக்கு நாயகரே ஆமாயின்
குன்றாமல் பெண்ணெங்கே கொண்டனர் காணம்மானை
கொண்ட பெண்ணோ நல்ல கொடியிடைச்சி அம்மானை. (35)
சுந்தரம் சேர் தென்குடந்தைச் சோமநாதப் பெருமான்
கந்தரிட மாமிதனைக் கைப்பிடித்தார் அம்மானை
கந்தரிட மாமிதனைக் கைப்பிடித்தார் ஆமாயின்
இந்த உலகதனுக்கு ஏற்குமோ அம்மானை
ஏற்கும் என்றே கையின் மழுவேந்தினர் காணம்மானே. (36)

37,38,39[தொகு]

அட்டதிக்கெண் கன்னி வனத்தார் அப்பரைக் கடலில்
இட்டகல் தூணோடு கரையேற விட்டார் அம்மானை
இட்டகல் தூணோடு கரையேற விட்டார் ஆமாயின்
விட்டகல் தூண் நீரில் மிதக்குமோ அம்மானை
மிதவாதோ முன்வளைந்து வில்லானால் அம்மானை. (37)
தந்தை பிடித்தரியத் தாயானவள் சமைக்க
வெந்த விடக்கு உய்ந்து மீண்டது காணம்மானை
வெந்த விடக்கு உய்ந்து மீண்டதுவே யாமாயின்
மைந்தன் உறுப்பு மணத்ததோ அம்மானை
மாதை அரன் வல்லபத்தால் மணத்தது காணம்மானை. (38)
நாணென்றால் நஞ்சிருக்கு நற்சாபம் கற்சாபம்
பாணந்தான் மண் தின்ற பாணம் காணம்மானை
பாணந்தான் மண் தின்ற பாணமே ஆமாயின்
சேணார் புரமெரித்த சேவகம் ஏது அம்மானை
சேவகத்தைச் சொல்லச் சிரிப்பல்லோ அம்மானை. (39)

40,41,42[தொகு]

பொன் திரளும் சித்திரம் சூழ் பூம்புகலூர் தன்னில் வளர்
தந்தி முகன் பெருவயிறன் சப்பாணி அம்மானை
தந்தி முகன் பெருவயிறன் சப்பாணி யாமாயின்
இந்த வயிற்றுக்கு இரை எங்கே அம்மானை
என்றல்லோ ஈசன் இரக்கல் உற்றான் அம்மானை. (40)
தெள்ளு புகழ் படைத்த திருமுட்டத்து எம்பெருமாள்
உள்ள நிலம் எல்லாம் உழுது உண்டார் அம்மானை
உள்ள நிலம் எல்லாம் உழுது உண்டார் ஆமாயின்
தகள்ளன் இவனென்று சொல்லிக் காட்டுவதேன் அம்மானை
காட்டாரோ போரில் கதிர் மறைத்தால் அம்மானை. (41)
அடுத்த திருக் காவிரி சூழ் அணியரங்கர் எப்போதும்
எடுத்த திருக் கோயிலை விட்டு எழுந்திரார் அம்மானை
எடுத்த திருக் கோயிலை விட்டு எழுந்திரார் ஆமாயின்
படுக்கையிலே விடம் தீண்டி பட்டனரோ அம்மானை
பட்டனர் என்றல்லோ பருந்து எடுத்தது அம்மானை. (42)

43,44,45[தொகு]

மட்டுற்ற சோலை மதுராபுரிச் சொக்கர்
பிட்டுக்கு மண் சுமந்த பித்தர் காணம்மானை
பிட்டுக்கு மண் சுமந்த பித்தரே ஆமாயின்
ஒட்டத் தொழில் அவர்க்கு உள்ளதோ அம்மானை
உள்ளன்பு இலாதவர்க்கு ஒட்டர் காணம்மானை. (43)
நீண்மதில் சூழாயல் வளர் நீல கண்டேசுரனார்
சேணுயர்ந்த கீர்த்தித் தியாகர் காணம்மானை
சேணுயர்ந்த கீர்த்தித் தியாகரே ஆமாயின்
காணக் கொடைக் கொடி தான் கட்டினரோ அம்மானை
கையால் சொன்னக் கொடியைக் கட்டினர் காணம்மானை. (44)
அம்புலியூர் என்னும் அணிகொள் சிதம்பரத்தே
வெம்புலி ஒன்று எந்நாளும் ஏவுங் காணம்மானை
வெம்புலி ஒன்று எந்நாளும் ஏவுமே ஆமாயின்
அம்பலத்தைத் தான் விட்டு அகலாதோ அம்மானை
ஆட்டை விட்டு வேங்கை அகலுமோ அம்மானை. (45)

46,47,48[தொகு]

புட்படியும் நாரணன் போல் பூவை வெங்கடாசல வேள்
மட்படியில் வாழும் வயித்தியன் காணம்மானை
மட்படியில் வாழும் வயித்தியனே ஆமாயின்
கட்படுநர் நோய் தீரக் காண்பானோ அம்மானை
காண்பான் இவனும் கடை மருந்தால் அம்மானை. (46)
செல்லார் வலஞ்சுழியில் செங்கழுநீர்ப் பிள்ளையார்
எல்லார்க்கும் நல்ல வரமீவர் காணம்மானை
எல்லார்க்கும் நல்ல வரமீவரே ஆமாயின்
தொல்லுலகில் உள்ளோர் துதியாரோ அம்மானை
துதிக்கையவர் தமக்குச் சொந்தம் அன்றோ அம்மானை. (47)
தேங்கு புகழ்த் தென்மயிலைச் சிங்கார வேன்முருகன்
வேங்கை வனத்தில் அன்று வேட்டை வந்தார் அம்மானை
வேங்கை வனத்தில் அன்று வேட்டை வந்தார் ஆமாயின்
பாங்காகவே முயன் மான் பற்றினரோ அம்மானை
பற்றினரே மான் கன்றைப் பாரறிய அம்மானை. (48)

49,50,51[தொகு]

வடவாறு சூழவரும் வாழ் மயிலின் வாகனனார்
விடமான் எலும்பு கொண்ட வேடன் மகன் அம்மானை
விடமான் எலும்பு கொண்ட வேடன் மகன் ஆமாயின்
அடைவான் வள்ளி அறியாளோ அம்மானை
அம்மான் மகள் அறிந்தால் அச்சம் உண்டோ அம்மானை. (49)
திருச்சிராப் பள்ளியரன் செட்டி மகட்கா வேடம்
தரிச்சு மருத்துவம் செய் தாயானார் அம்மானை
தரிச்சு மருத்துவம் செய் தாயானார் ஆமாயின்
மருத்தெண்ணெய்ச் சிக்கின் மணமிலையே அம்மானை
மட்டுவார் குழல் இருந்தான் மணம் அரிதோ அம்மானை. (50)
நாடுந் திருச் சம்புநாதர்க்கு இருப்பிடத்தில்
ஓடும் சலம் பெருகி ஊற்று எடுத்தது அம்மானை
ஓடும் சலம் பெருகி ஊற்று எடுத்தது ஆமாயின்
நாடும் ஒருசிலந்தி நண்ணினது உண்டு அம்மானை
நவைதீர் ஒருசிலந்தி நண்ணினது உண்டு அம்மானை. (51)

52,53,54[தொகு]

எண்ணரிய காஞ்சியில் வாழ் ஏகாம்பர நாதர்
அண்ணல் திருமேனி எங்கும் ஆகாசம் அம்மானை
அண்ணல் திருமேனி எங்கும் ஆகாசம் ஆமாயின்
வண்ண முலை மார்பின் வடுப்படுமோ அம்மானை
மாவடியில் வாழ்பவர்க்கு வடுவரிதோ அம்மானை. (52)
பூங்கொன்றை நாதன் புகழ் கச்சி யேகம்பன்
சேங்கண்ணின் மீதேறும் செலவன் காணம்மானை
சேங்கண்ணின் மீதேறும் செலவனே ஆமாயின்
மாங்கண்ணின் கீழிருக்க வந்ததேன் அம்மானை
வந்தல்லோ இவ்வாறு வடுபட்டது அம்மானை. (53)
சேற்றான் மடை அடைக்கும் சேவகனார் கூடலிலே
வேற்றாளாய் மண்சுமக்க வேண்டினர் காணம்மானை
வேற்றாளாய் மண்சுமக்க வேண்டினரே ஆமாயின்
மாற்றான் அடித்த வடுவிலையோ அம்மானை
மாவடியில் வாழ்பவர்க்கு வடுவரிதோ அம்மானை. (54)

55,56,57[தொகு]

எட்டுத் திக்குள்ளோரும் இறைஞ்சும் எங்கள் சொக்கலிங்கம்
கிட்டுகின்ற வேகசந்த கிராகி காணம்மானை
கிட்டுகின்ற வேகசந்த கிராகியே ஆமாயின்
கொட்டி மகவான் பல்கால் குழறுவதேன் அம்மானை
குழறானோ வாசற்குக் கோளிழைத்தால் அம்மானை. (55)
பதமலரால் சகடு தைத்த பாரவட மலையர்
அதிகுணத்து நிலமகண் மேலாசை கொண்டார் அம்மானை
அதிகுணத்து நிலமகண் மேலாசை கொண்டார் ஆமாயின்
விதுமுகத்து மலர்மானை விட்டனரோ அம்மானை
விடுவாரோ மாலானான் மேதினிக்குள் அம்மானை. (56)
மனம் சலியாமல் தினமும் ஆறாமல் தண்டலையார்
தினம் கீரை மாவடுவும் தின்று வந்தார் அம்மானை
தினம் கீரை மாவடுவும் தின்று வந்தார் ஆமாயின்
கனம் கொண்டு மெய்யில் அனல் காணாதோ அம்மானை
கண்டது காண் ஒற்றியிலே கண்ணெரிச்சல் அம்மானை. (57)

58,59,60[தொகு]

தண்டாமரைத் தடஞ்சூழ் தண்டலையார் எப்பொழுதும்
உண்டார் இளங்கீரை மாவடுவும் அம்மானை
உண்டார் இளங்கீரை மாவடுவும் ஆமாயின்
பண்டேதான் தின்று பழக்கம் உண்டோ அம்மானை
பழக்கம் இல்லைத் தாயானார் பழக்கி வைத்தார் அம்மானை. (58)
பொன்னேறு மார்பர் புகழ்சேர் திருவரங்கர்
எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் அம்மானை
எந்நேரமும் பாம்பிலே கிடப்பார் ஆமாயின்
என்னே தலைக்கு விடம் ஏறாதோஅம்மானை
ஏறுமோ செங்கருடன் ஏறினால் அம்மானை. (59)
எந்தவுலகும் பரவும் எங்கள் சொக்கலிங்கேசர்
சந்ததமும் பொன்மன்றில் தானடிப்பார் அம்மானை
சந்ததமும் பொன்மன்றில் தானடிப்பார் ஆமாயின்
அந்த வெள்ளி மன்றதனில் ஆடினதேன் அம்மானை
ஆடினார் கான் மாற்றதிகம் என்றே அம்மானை. (60)

61,62,63[தொகு]

நேயமிகும் ஆயல் வளர் நீலகண்டேச்சுரனார்
ஆயுமலர்க்கு எல்லாம் அருண்மேகம் அம்மானை
ஆயுமலர்க்கு எல்லாம் அருண்மேகம் ஆமாயின்
காயம் முழுதும் கறுக்காதோ அம்மானை
கண்ட மட்டுத்தான் கறுப்பு காட்டினதே யம்மானை. (61)
மத்தி மதிசூடி மயிலை விருபாடசி லிங்கர்
சுத்த வடிவெல்லாம் சுடர்வடிவே அம்மானை
சுத்த வடிவெல்லாம் சுடர்வடிவே ஆமாயின்
மத்தகத்தில் திங்கள் வயங்குமோஅம்மானை
வயங்கும் இருகண்ணாய் மருவுதலால் அம்மானை. (62)
காரமரும் கண்டர் கயிலாய நாயகனார்
பாரறியக் கையில் பணம் படைத்தார் அம்மானை
பாரறியக் கையில் பணம் படைத்தார் ஆமாயின்
ஊர்தோறும் பிச்சைக்கு உழல்வதேன் அம்மானை
உழலாரோ பங்காளிக்கு ஒப்பித்தால் அம்மானை. (63)

64,65,66[தொகு]

பையரவம் சூடுதிருப் பட்டீச்சுர நாதர்
தையலாம் கங்கை தனைத் தரித்தார் அம்மானை
தையலாம் கங்கை தனைத் தரித்தார் ஆமாயின்
மெய்யில் குளிர் வாதம் மேவாதோ அம்மானை
மேவுமோ வன்னி கையில் வீற்றிருந்தால் அம்மானை. (64)
ஆனபனந் தாளழகிக்கு அயன் வகுத்த
மானத்தனம் வளர்ந்து வாய்த்தது காணம்மானை
மானத்தனம் வளர்ந்து வாய்த்ததே ஆமாயின்
ஏனதனின் வட்டப்பா டிருக்கின்றது அம்மானை
இடை குறைந்தால் வட்டப்பா டில்லையோ அம்மானை. (65)
பேரான போரூரில் பிள்ளையார் வேம்படியில்
சீராக வாழும் சிவன் மைந்தன் அம்மானை
சீராக வாழும் சிவன் மைந்தன் ஆமாயின்
கூரான கொம்பொடிந்த குற்றமேன் அம்மானை
ஒடிந்தல்லோ பாரதமும் உண்டாச்சு அம்மானை. (66)

67,68,69[தொகு]

அண்டர் புகழ் போரூரின் ஆறுமுகத்தன் முன்னோன்
பெண்டு கொள்ள மாட்டாப் பிரமம் காணம்மானை
பெண்டு கொள்ள மாட்டாப் பிரமமே யாமாயின்
கண்டவர் எல்லாம் குட்டக் கணக்குண்டோ அம்மானை
குட்டுவார் தங்கள் குறைதீர அம்மானை. (67)
பொல்லாத பாவமெலாம் போக்குதிருப் போரூரில்
வல்லான் இடத்தி லுண்டோர் வாழானை யம்மானை
வல்லான் இடத்தி லுண்டோர் வாழானை ஆமாயின்
நல்லாள் குறத்தி நடுங்காளோ அம்மானை
நடுங்காமல் தானிருவர் நடுவிருந்தான் அம்மானை. (68)
மண்டலம் எல்லாம் புகழும் மாபோரூர் வேலவனார்
பெண்டிரண்டு கொண்ட பெருமான் காணம்மானை
பெண்டிரண்டு கொண்ட பெருமானே யாமாயின்
சண்டை யிடாரோ அவர் சதாகாலம் அம்மானை
இட்டல்லோ போரூர் என்று ஏற்பட்டது அம்மானை. (69)

70,71,72[தொகு]

பேசுபுகழ் போரூரர் பேதைக் குறச்சிறுபெண்
ஓசைதனைக் கேட்டு வனத்தோடி வந்தார் அம்மானை
ஓசைதனைக் கேட்டு வனத்தோடி வந்தார் ஆமாயின்
ஆசையாய் பெற்றது அவளை மான் அம்மானை
அம்மான் மகளென்றே அறிந்து கொண்டார் அம்மானை. (70)
வீசுபகழ் போரூரில் வேலவர் முன்செய்த மணம்
காசுபண நேராக் கலியாணம் அம்மானை
காசுபண நேராக் கலியாணம் ஆமாயின்
பேசரிய இந்திரன் ஏன்பெண் கொடுத்தான் அம்மானை
கொடுத்தானே சூரன் குடிகெடுக்க அம்மானை. (71)
நாடிவந்த பேர்க்கெல்லாம் நலம் கொடுக்கும் போரூரர்
பாடிகிரி நாதருக்குப் பண்பட்டார் அம்மானை
பாடிகிரி நாதருக்குப் பண்பட்டார் ஆமாயின்
ஆடினவர் இன்னம் உவந்து ஆடாரோ அம்மானை
ஆடுவார் பாட வறியார் காணம்மானை. (72)

73,74,75[தொகு]

துள்ளி மயிலேறும் துரைவேலன் போரூரில்
வள்ளுவர் தங்கச்சி தனை வைத்திருந்தார் அம்மானை
வள்ளுவர் தங்கச்சி தனை வைத்திருந்தார் ஆமாயின்
கொள்ளும் குலம் கலக்கக் கூடுமோ அம்மானை
கூடினதும் தேடினதும் கோடியுண்டே அம்மானை. (73)
நம்பர் திருநாகை நாகலிங்க நாயனார்
அம்பொன் மலைவீடா அமர்ந்தனர் காணம்மானை
அம்பொன் மலைவீடா அமர்ந்தனரே ஆமாயின்
அம்பலத்தில் நின்று கூத்தாடுவதேன் அம்மானை
ஆடையணி பணிக்கா வாடினர் காணம்மானை. (74)
கற்றுணர்ந்தார் போற்றும் கழுக்குன்றத் தீச்சுரனார்
உற்றெமனைக் காலால் உதைத்தனர் காணம்மானை
உற்றெமனைக் காலால் உதைத்தனரே ஆமாயின்
பற்றியதோர் கால்வலியும் பட்டதோ அம்மானை
பாடுமுயலகன் வலியும் பட்டது காணம்மானை. (75)

76,77.78[தொகு]

அப்பார் வயல்சூழ் அணிவிரிஞ்சை வாழரனார்
இப்பாரில் வணிகன் உயிர் இரட்சித்தார் அம்மானை
இப்பாரில் வணிகன் உயிர் இரட்சித்தார் ஆமாயின்
தப்பாது எவர்க்கும் சகாயரோ அம்மானை
சதாகால மார்க்க சகாயர் காணம்மானை. (76)
நாடு திருக்கோவ னல்லூர் நாதர் தினமுமறைக்
காடுதனில் திரியும் கள்ளர் காணம்மானை
காடுதனில் திரியும் கள்ளரே ஆமாயின்
மாடெடுக்க ஆடெடுக்க மாட்டுவரோ அம்மானை
மாட்டாரோ வல்புலியை வைத்திருந்தால் அம்மானை. (77)
சங்கரனார் ஆபத் சகாயனார் சந்ததமும்
மங்கையுடன் கோவை நல்லூர் மகிழ்ந்து இருந்தார் அம்மானை
மங்கையுடன் கோவை நல்லூர் மகிழ்ந்து இருந்தார் ஆமாயின்
கங்கைநீர் சென்னியின் மேல் கட்டுவதேன் அம்மானை
கட்டியல்லோ அவர்தேகம் காய்ந்தது காணம்மானை. (78)

79,80,81[தொகு]

மன்னாரையம் பேட்டை வாழ் சுந்தர சேகரனார்
என்னாளும் எண்ணின எல்லாம் முடிப்பார் அம்மானை
என்னாளும் எண்ணின எல்லாம் முடிப்பார் ஆமாயின்
இன்னும் விவாகம் அவர்க்கு ஏனில்லை அம்மானை
இருப்பிடம் இல்லார்க்குப் பெண்ணெவர் கொடுப்பார் அம்மானை. (79)
அத்தர் நெடுவாயில் அருணா சலேச்சுரனார்
சுத்தமிகும் பெண்கொண்ட சுந்தரன் காணம்மானை
சுத்தமிகும் பெண்கொண்ட சுந்தரனே ஆமாயின்
எய்த்துடம்பு பாதியாய் இளைத்தது என்ன அம்மானை
இசையினனங் காணாது இளைத்தது காணம்மானை. (80)
வீறான கோடைநகர் வேங்கியப்பர்க்கு எப்பொழுதும்
நீராடும் செஞ்சடைமேன் நீரேற்றம் அம்மானை
நீராடும் செஞ்சடைமேன் நீரேற்றம் ஆமாயின்
கூறாரு மேனி குளிராதோ அம்மானை
கோடைக்கு முன்னே குளிருமோ. (81)

82,83,84[தொகு]

ஆரூரில் வாழ்கின்ற ஆதிவிடங்கப் பெருமான்
பேராரும் வாதப் பிணிக் காலன் அம்மானை
பேராரும் வாதப் பிணிக் காலன் ஆமாயின்
ஆரார் பிணிக்கு மருந்து அருந்தினரோ அம்மானை
அருத்தில் பிணியறுமோ வாழிநஞ்சால் அம்மானை. (82)
வெள்ளெருக்கம் பூச்சூடும் வேதபுரி நாதர்
வள்ளல் அமரர்க்கு எல்லாம் வாத்தி காணம்மானை
வள்ளல் அமரர்க்கு எல்லாம் வாத்தியே ஆமாயின்
பிள்ளை கையில் உபதேசம் பெற்றதென்ன அம்மானை
பெற்றாலும் பின்னாற் பிழை பொறுத்தார் அம்மானை. (83)
காலனையும் காமனையும் காட்டுசிறுத் தொண்டனிட
பாலனையும் கொன்ற பழிகாரன் அம்மானை
பாலனையும் கொன்ற பழிகாரன் ஆமாயின்
சாலவுயர்ந்தோர் முடியைச் சாய்க்காரோ அம்மானை
சாய்த்தவர் எல்லாம் பெரிய சைவர் காணம்மானை.(84)

85,86[தொகு]

நத்துலவு தென்மயிலை நாதர்திரு வாலீசர்
சித்தசனை உற்றெரித்த சேவகர் காணம்மானை
சித்தசனை உற்றெரித்த சேவகரே ஆமாயின்
அத்தலைத் தீக்கொண்டது எவராற்றினர் காணம்மானை
ஆறுதலை உள்ளார்க்கு அரிதல்லவே அம்மானை. (85)
மன்னுவெள்ளி அம்பலமும் மாசறுபொன் அம்பலமும்
என்னுடைய ஈசற்கிவை இரண்டு உண்டு அம்மானை
என்னுடைய ஈசற்கிவை இரண்டு உண்டு ஆமாயின்
இன்னும் இருப்பம்பலம் ஒன்றில்லையோ அம்மானை
இருப்பம்பலம் அடியார் இதயம் காணம்மானை. (86)
"https://ta.wikisource.org/w/index.php?title=அம்மானை&oldid=1038248" இலிருந்து மீள்விக்கப்பட்டது