பக்கம்:குமரியின் மூக்குத்தி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொள்ளேயோ கொள்ளை

73

அடுத்த வாரமே நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுவரொட்டிகள் பளபளத்தன.

"திருட்டுத் தொழில் புரியும் கனவான்களே! உங்கள் தொழிலை ஊக்கத்தோடு செய்யுங்கள். அரசாங்கத்துக்கு நீங்கள் செலுத்தும் கட்டணங்களில் ஒரு தொகைக்கு மேற்பட்டுப் போனால் சலுகை உண்டு. தொழில் வன்மை உடையவர்களுக்கு ஆதரவு தருவதில் அரசாங்கம் என்றும் பின் வாங்காது.”

இந்த விளம்பரத்தைக் கண்ட வியாபாரிகளும் முதலாளிகளும் நகர மாந்தர்களும் ஒருவரை ஒருவர் விழித்துப் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ முணுமுணுத்தார்கள். கொள்ளேயோ கொள்ளை! என்று அவர்கள் அந்தராத்மா அலறியது.

அடுத்த வாரம் அரண்மனைக் கஜானாவே திறந்து கிடந்தது. பெட்டிகளில் ஒரு செப்புக் காசு இல்லை. பட்டத்தரசியின் கைப் பெட்டி காலியாகக் கிடந்தது. அரசர் வந்து பார்த்தார். அரசி அவரைப் பார்த்தாள். அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கோபத்தால் வந்த சிரிப்புத்தான். "உங்கள் அற்புதமான சேனாபதியின் திட்டத்தால் வந்த விளைவு இது. அரண்மனை முழுவதும் குற்றவாளிகளையும் பழைய கைதிகளையும் வேலைக்குக் கொண்டு வந்து வைத்தால் இது மாத்திரமா நடக்கும்? இன்னும் என்ன என்ன நடக்கப் போகிறதோ!" அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள். .

அடுத்த நாளே சேனாபதியைச் சிறையில் அடைக் கும்படி உத்தரவு போட்டார் அரசர் சட்டத்தை மாற்றி, யாராவது திருடினால் ஏதாவது ஒர் அங்கத்தை வெட்டி விடுவது என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்தார். தேசாடனம் போயிருந்த பழைய முதல் மந்திரி அந்தச் சமயத்துக்கென்று எப்படியோ வந்து சேர்ந்துவிட்டார்.