உள்ளடக்கத்துக்குச் செல்

இராமசாமிக் கவிராயர் தனிப்பாடல்கள்

விக்கிமூலம் இலிருந்து
இராமசாமிக் கவிராயர் தனிப்பாடல்கள்
பல வித்துவான்கள் பாடியவை என்னும் தலைப்பின் கீழ் வருகிறது
பாடல் 12
தனிப்பாடல் திரட்டு மூலம் பக்கம் 153 முதல் 155
பாடலுக்குக் குறிப்புரை – செங்கைப் பொதுவன்

1
மாலைதனைப் புனைந்தாலும் மலரணையில் படுத்தாலும் மருவார் பன்னீர்
ஏலமுறத் தெளித்தாலும் எவ்வளவேனுங் குளிரவிலை யென்செய்வேன்
கோலமுறு மணலியிலே கிளைகளொடு சுகம்படைத்துக் கலாவுமெங்கள்
சோலைதனைச் சேராமல் காமவிடாய் தணியாதே தோகைமாரே.
2
பாலைநிகர் மொழிமாதே என்னிடத்தில் பூரணமாய்ப் பட்சம் வைத்துக்
காலைமுகி லனையகரன் மணலியில்வாழ் சோலையெனுங் கன்னன் பாற்போய்
மாலைகேண் மறுத்தாலென் மனத்தைக்கேண் மறுக்கின்மதன் வாராவண்ணம்
ஓலைகேண் மறுத்தக்காற் கிள்ளாக்குக் கேள்வேறொன் றோதிடாயே.
3
அரக்கனலை இலங்கையை வென்றோன் மருகன் றணிகேச னன்பர்பானஞ்
சிரக்கனலை யாமலுனைக் காப்பானென் றனையடிதே மொழியே மாலை
வரக்கனலை மதிவீசப் படுமோவவ் வேளைதனில் வாதுக்கேம
துரக்கனலை மதப்பயலென் முனங்குளிக்கத் தகுமோசொல் தோகைநீயே.
4
என்னைய வரமறந்தும் யானவரை மிகநினைந் திங்கிருந்து வாட
முன்னை விதிப்படி தானோ முற்பிறப்பில் செய்தவினை முடிந்தவாறோ
கன்னன் எங்கள பிராமன் வரதுங்க ராமனியற் காசி நாட்டில்
அன்ன வயற் குருகினங் காடனித் திருக்க முடியாதென் றறைகுவீரே.
5
தன்மனை இரதமாக்கித் தன்மகன் வலவனாக்கித்
தன்மகன் பேரனோடு தனக்கு மைத்துனன் காலாக்கித்
தன்னணை நாரியாக்கித் தானுமோர் அம்புமானான்
தன்மனம் இடங்மொண்டு உய்த்த சங்கரன் தனக்கு மாயன்.
6
முன்னொரு வூரின்பேரா முதலெழுத்து இல்லா விட்டால்
நன்னகர் மன்னர் பேரா நடுவெழுத்து இல்லா விட்டால்
கன்னமா மிருகத்தின்பேர் கடையெழுத்து இல்லா விட்டால்
உன்னிய தேனின்பேராம் ஊரின்பேர் விளம்புவீரே.
7
புதுவை முத்துக் குமரதொண்டன் தமிழ்போலக் கவிமதுரம் பொழியப்பாடும்
சதுரருண்டோ வெனவிரிஞ்சன் வினவினான் சேடனான் தானென்றானோர்
பதமெனினுந் தோன்றாமன் மால்கொண்டு கடல்வீழ்ந்தான் பதுமன்சீறி
மதமுறுநா வைப்பிளந்து காதறுத்து மண்சுமக்க வைத்திட்டானே.
8
மதுகரத்தை இகழ்ந்துகுயில் வடிவேலர் தமையழைத்து வாரேனென்றே
இதமுரைத்துச் சென்றதென்ன வின்னமும் காணேனதனு கிரக்கமேது
சதமிதென வளர்த்தெடுத்த தாய்க்குதவா தார்க்குதவுந் தந்தையேநீ
முதுமறைசேர் குமரர்தமை அழைத்துவா மதப்பயலை முடுக்கத்தானே.
9
குருமூர்த்த மாய்வந்து வினை யொழித்து முத்திதனை கொடுக்கத் தியாகர்
ஒருமூர்த்தி யல்லாமன் மற்றுமொரு மூர்த்திகளும் உண்டோ நெஞ்சே
திரிமூர்த்தி யென்பார்கள் அவரவர் வாகனமேறிச் சேணிற் சும்மாய்
திரிமூர்த்தி யல்லாமல் ஒருமூர்த்தியுங் கதியிற் சேர்த்திடாரே.
10
இருக்கோல மிடுங்கலைசைத் தெய்வசிகா மணிமுகில் வந்திணங்கா நாளில்
உருக்கோல வடிவானான் மைந்தனுமை த்துன்னுநிதம் ஓய்விலாமல்
மருக்கோலஞ் செய்வதினும் வடவனலைச் சொரிவதினு மயக்கமுற்றுத்
திருக்கோலங் கொண்டமக டயங்குகின்றாண் மயங்குகின்றா தினமுந்தானே.
11
முந்தனத்தைத் தூதுவிட்டேன் வரவுமில்லை மதராஜன் முனிந்தே வில்லால்
எந்தனத்துக் கிலக்காக மலர்வாளி யெய்கின்றான் இனியென் செய்வேன்
கந்தனத்தை யகலாத பூம்பாவை வேலப்பன் கையால் பூசஞ்
சந்தனத்தை சவ்வாதை நினைந்து மனதுருகுதடி தையலாளே.
12
வெறி விலக்கல்
குருத்துக் கதலிப் பசுந்தேனை அள்ளிக் குரங்குக் குட்டிக்
கருத்திக் களிக்குங் குறுங்குடி வாழ்தரும் அண்ணல் வெற்பில்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்போலக் காமம் படைத் தவிந்த
ஒருத்திக் கொருவன் பகையோ நடுச்சொல்லும் ஊரவரே.